‘‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’’ – நூற்றாண்டு நிறைவு விழா கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற (12.12.2024) தன்மையும், பொலிவும், எழுச்சியும் – நேர்த்தியும் நேரில் பார்த்தவர்களின் நெஞ்சத்திரையை விட்டு அவ்வளவு எளிதாக மறைந்திடாது – மறந்து விடவும் முடியாது.
தங்களின் சொந்த மண்ணில் ஆண்டாண்டுக் காலமாகத் தாண்டவமாடிய தீண்டாமை நச்சரவத்தின் கொடிய பற்களை சொந்த மண்ணைச் சேர்ந்த புகழ் பெற்ற மதிக்கத் தகுந்த தலைவர்கள் முனைந்து போராடியும் உடைக்க முடியாத நிலையில், இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமனிதரைக் கண்டுபிடித்து, வரவழைத்து – அவர் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வெற்றி பெற்ற வரலாறு வேறு யாருக்கு எங்குண்டு?
அந்த வெற்றிக்குக் காரணமான அந்த வெளி மாநிலத் தலைவர் தந்தை பெரியார் என்று எண்ணுகின்ற போது – தமிழ்நாட்டு மக்கள் எத்தகைய பூரிப்பை அடைகிறார்கள் – அந்தத் தலைவரின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தகைய பெருமையின் உச்சத்தில் நின்று பெருமிதம் கொள்வார்கள் என்பதை நேற்று வைக்கம் மண்ணில் கரை புரண்டு ஓடிய அந்த உணர்ச்சியைப் பார்க்கும்போது உணர முடிந்தது.
இன்றைக்கும்கூட ஜாதி விரியன்கள் தீண்டாமை நஞ்சுப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு நூறு ஆண்டுகளுக்குமுன் ஒரு மனிதர் தலைமை தாங்கி, தன் தோழர்களையும், தொண்டர்களையும், தன் குடும்பத்துப் பெண்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு, இன்னொரு மாநில மண்ணில் போராடி வெற்றி பெற்றது என்பது, எந்த சமூகநீதி – எழுச்சி வரலாற்றிலும் கண்டிராத படித்திராத ஒன்று.
அதுவும் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் என்றால் – அந்தக் கால கட்டத்தில் ஆலகால விஷமாயிற்றே!
சமாதானப் பேச்சுக்கு வந்த காந்தியாரை – ஒரு நம்பூதிரிப் பார்ப்பனர் – மகாத்மா என்று மக்களால் போற்றப்பட்ட ஒரு தலைவரை தன் வீட்டிற்குள் வைத்துப் பேச முடியாது – காரணம் காந்தியார், அவர்கள் பாைஷயில் பிராமணர் அல்ல– வைசியர்! என்ன செய்தார்கள்? அந்த நம்பூதிரிப் பார்ப்பனர் நிலைப்படிக்கு வெளியே, காந்தியாரை உட்கார வைக்க ஒரு சிறிய திண்ணையையே கட்டினார் என்றால் – அதுவும் ‘மகாத்மாவுக்கே’ அந்த நிலையென்றால் ஆரிய அகங்கார ஜாதி ஆணவம் என்னும் ஆயிரம் தலை கொண்ட நம்பூதிரிப் பாம்பினை கற்பனை செய்து பார்த்தால், அதன் கொடூரம் எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தந்தை பெரியார் வைக்கத்தில் இருந்த காலம் 141 நாட்கள் என்றால் – அதில் சிறையில் இருந்த காலம் 74 நாட்கள்!
‘சத்ரு சம்ஹார யாகம் என்னும் எதிரியை அழிக்கும் யாகத்தைக்கூட நடத்தின – அந்த ஜாதி ஆணவ நம்பூதிரி நாகப்பாம்புகள்.
காந்தியாரிடம் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் ஏமாற்றம்தான்; தமிழ் நாட்டில் தந்தை பெரியாரின் நண்பர்களாயிருந்த ராஜகோபாலாசாரி போன்றவர்களின் முட்டுக்கட்டைகள் – முணுமுணுப்புகளுக்கு மத்தியிலே தந்தை பெரியாருக்கு இருந்த மானுட உரிமை என்னும் ஊக்கமும், உந்து சக்தியும் இவற்றை எல்லாம் எதிர் கொண்டு, இறுதியில் சிரிப்பவனே வெற்றியாளன் எனும் நிலைக்கு உயர்ந்த உலக வரலாற்று மாமனிதர்தான் தந்தை பெரியார்.
அந்த வரலாற்றுப் புரட்சி நாயகருக்குத்தான் நேற்று (12.12.2024) வைக்கத்தில், வெற்றி நூற்றாண்டு விழா! தமிழ்நாடு கேரளம் என்னும் இரு மாநில முதல் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றதும், தந்தை பெரியார் கண்ட இயக்கத்தில் வாழையடியாக நிமிர்ந்து நிற்கும் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும் இரு மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு வைக்கம் வெற்றி நூற்றாண்டு விழாவை நடத்தியது – புரட்சிகரமான வெற்றிக்குக் காரணமாக இருந்த அந்த வைக்கம் வீரருக்குப் பெருமை என்பதைவிட, இத்தகைய ஒப்புரிமை இல்லா உணர்ச்சியும் நன்றிப் பெருக்கும் சங்கமித்த விழாவாக நடத்தியவர்களுக்குத் தான் பெருமை.
அய்யா அவர்களே, உங்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு ஆணி வேராக இருந்த உங்களின் கரங்களுக்கு நன்றி முத்தத்தைக் காணிக்கையாக்குகிறோம் – அதி்ல் பெருமை காண்கிறோம் என்ற அறிவிப்பு விழாவாகத்தான் இதனைப் பார்க்க முடியும்.
தந்தை பெரியார் சிலை, நினைவகம், நூலகம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கு என்று ஆக்கபூர்வமாக வரலாற்றில் நிலைநிறுத்திய தமிழ்நாடு அரசின் முடிவும், செயல்பாடும், செலவும், இவற்றிற்கெல்லாம் முழு மனதோடு ஒத்துழைப்பு நல்கிய மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆளும் கேரளா மாநில அரசின் நேசக்கரங்களும் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவையாகும். தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு எ.வ.வேலு அவர்களின் கட்டமைப்புப் பணிகள் அசாதாரணமானவை!
‘‘வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைத் திறந்து வைத்தது எனக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை! பெரியாரை எதிர்த்த மண்ணிலே அவருக்கு விழா எடுப்பது சமூக நீதியின் வெற்றி – வைக்கத்தில் பெரியார் நினைவகம் என்பது சமூகநீதிக்கான வெற்றியின் சின்னம்’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் உதிர்த்தவை வெறும் வார்த்தைகளல்ல. அவர்தம் உள்ளத்தில் ஊற்றெடுத்த உண்மை உணர்வின் வெளிப்பாடு.
கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களின் 27 நிமிட உரையில் தந்தை பெரியாரின் சோவியத்துப் பயணம், இந்தியாவிலேயே மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அறிக்கையை முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்து, ‘குடி அரசு’ இதழில் வெளியிட்ட வரலாற்றுப் பதிவையும் பொருத்த மாக தம் மொழியில் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழர் தலைவர் உரை வெறும் பாராட்டும், புகழ் மலர்களும் மட்டுமல்ல; இந்த விழாவில் நமது பிரகடனம் எதுவாக இருக்க முடியும்? என்பதை எப்பொழுதும் போல அவருக்கே உரி்ததான முத்திரையை பதினொரு நிமிடங்களில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும், ஆங்காங்கே மலையாளமும் கலந்து கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தம்வசம் கொண்டு வந்தார். (அதைப்பற்றி நாளை எழுதுவோம்)
விழாவை நேரடியாக கண்டவர்களுக்குக் கிடைத்தது பெரும்பேறு – அறிவியல் கால கட்டத்தில் தொலைக்காட்சி களில் கண்டு களித்தவர்களுக்கும் ஒரு வகையான இன்ப உணர்ச்சி!
தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஓடியிருக்கலாம் – ஆனாலும் ஏதோ ஒரு வகையில் அந்த அலையின் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அலைகள் ஓய்வதில்லை என்பது இதுதானோ!