மதுரை, டிச. 7- பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியுருப்பதாவது:
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லம் வழங்கவும், பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் வலியுறுத்தி, கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கில், வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவது தொடர்பாக அடுத்த ஆண்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே உள்ளது. தற்போது வரை பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, 2025இல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்கவும், பரிசுத்தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு, தேங்காய் போன்ற பொருட்களை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தலாமே” என்றனர். அதற்கு அரசுத் தரப்பில், “ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது, குறைந்தபட்ச தொகை இருப்பில் இல்லை என்பதற்காக வங்கியில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “மகளிர் உரிமைத்தொகை வங்கி மூலம் வழங்கப்படும்போது, பொங்கல் பரிசுத் தொகையையும் வங்கி கணக்கில் செலுத்தலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தள்ளிவைப்பு
இதையடுத்து நீதிபதிகள், “உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்ததுபோல பொங்கல் பரிசுத்தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக கூடுதல் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை டிச. 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.