புதுடில்லி, டிச.7 வயநாடு நிலச்சரிவில் மீட்புப் பணிகளுக்காக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.153 கோடியை ஒன்றிய அரசு பிடித்தம் செய்துள்ளது.
நிலச்சரிவு
வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு, ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கேரள மாநில அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடிதம் எழுதியிருந்தது.
டில்லியில் உள்ள கேரள அரசின் சிறப்பு பிரதிநிதியான கே.வி.தாமஸுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி எழுதிய பதில் கடிதத்தில், ‘நாட்டில் எந்தவொரு பேரிடரையும் தேசியப் பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள மாநில பேரிடா் மேலாண்மை நிதி மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை நிதியின் விதிமுறைகளில் இடமில்லை.
மாநில பேரிடா் மேலாண்மை நிதியின்கீழ், 2024-2025ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு ரூ.388 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.291 கோடி இரு தவணைகளாக விடுவிக்கப்பட்டது.
நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரளத்திடம் போதிய நிதி கையிருப்பு உள்ளது’ என்று தெரிவித்திருந்தது. இந்த நிலச்சரிவு மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால் ஒன்றிய அரசு ஆண்டுதோறும் வழங்கும் பேரிடர் நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்ட நிலையில், ஒன்றிய அரசு எந்த கூடுதல் நிதியையும் வழங்காமல் ஆண்டு தோறும் வழங்கும் நிதியிலிருந்து ரூ.153.47 கோடியையும் பிடித்தம் செய்திருப்பது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் 28 மாநிலங்களுக்கு ரூ. 21,718 கோடி ஏற்ெகனவே நிவாரண நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 26 மாநிலங்களுக்கு ரூ.14,878 கோடியும், தேசிய பேரிடர் நிதியில் இருந்து 18 மாநிலங்களுக்கு ரூ.4,808 கோடியும், மாநில பேரிடர் நிதியிலிருந்து 11 மாநிலங்களுக்கு ரூ.1,385 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.646 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக நிதி உதவி, வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், ராணுவக் குழுக்கள் மற்றும் விமானப்படை உள்ளிட்ட உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.