புதுடில்லி, டி.ச.6- அதானி முறைகேட்டை கண்டித்து கருப்பு உடை அணிந்து வந்த எதிர்க்கட்சி ஊறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரிய சக்தி மின் திட்டத்துக்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் அதானி மீது அமெ ரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இதில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்சினையை முன்வைத்து நாடாளு மன்றத்தி லும் அவர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் குளிர் கால கூட்டத்தொடரின் தொடக்க நாட்கள் முடங்கின. அதானி விவ காரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், நேற்று (5.12.2024) நாடாளுமன்றத்தில் தனித்துவமான போராட்டத்தை மேற் கொண்டன.
கருப்பு உடை
அந்தவகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கருப்பு உடை (ஜாக்கெட்) அணிந்து அவைக்கு வந்தனர். அதில், ‘மோடியும், அதானியும் ஒன்று’, ‘அதானி பாதுகாப்பாக இருக்கிறார்’ என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தன. ராகுல் காந்தியும் தனது வழக்கமான வெள்ளை நிற டி-ஷர்ட்டின் பின்னால் இந்த ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார். இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வந்திருந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி நின்று போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், அதானி விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
ராகுல்காந்தி குற்றச்சாட்டு
இதில் பேசிய ராகுல்காந்தி, ‘அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக விசாரணை நடத்தினால், அது தனக்கு எதிராக நடத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியால் விசாரணை நடத்த முடியாது’ என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பிரியங்கா உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பங் கேற்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து அவை நடவடிக்கைகளிலும் பங்கேற்றனர்.
மக்களவைத் தலைவர் எச்சரிக்கை
இதை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கண்டித்தார். தேசியக் கொடியை தவிர வேறு எந்த ஸ்டிக்கரையோ, பேட்ஜையோ உறுப்பினர்கள் தங்கள் உடை யில் ஒட்டி வரக்கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு தடை விதிக்கும் அவை விதி எண் 349அய்யும் அவர் சுட்டிக்காட்டினார்.