கண்மூடிக் கிடந்தநம் இத்தமிழ் நாட்டில்
அருளொளி பாய்ச்சிய அண்ணல் – திருத்திய நம்
தந்தை பெரியார் தம்கொள்கை வென்றி மிக
எந்தையர் வீரமணி ஏற்று!
பகுத்தறிவுத் தந்தை பகலவன் நம்மின்
வகுத்த பெரியார் வழியில் -தகுகொள்கை
மாறா உறுதி மருளப் பகைமை
பேறார்ந்த வீரமணி வீறு!
பத்தகவை முதல் பைந்தமிழ் ஊற்றாகி
வித்து வளர்பசுமை வீச்சாகி – ஒத்துரிமைக்
கொள்கை விளைவித்துக் கொள்முதல் வீரமணி
வள்ளல் பெருந்தன்மை வாழ்த்து!
தடம்மாறா மல்பெரியார் தக்கதடம் பற்றி
இடம்தாரா தேபகைமை எற்றிக் – குடத்தேன்போல்
தோழமைத் தி.க.வின் தொண்டமர் தலைவர்களும்
வாழவைத்த வீரமணி வாழ்த்து!
சுயமரி யாதைத் சுயநல்மில் பாதை
வியப்பார்ந்த தொண்ணூற்றின் மேலும் – நயப்பார்ந்த
ஓட்டமும் நன்னடையும் ஓர்ந்தே உழைதமிழ்
நாட்டுவீர மாமணி மன்.
மண்ணுரிமை பெண்ணுரிமை மாற்றமதை கூரும்
எண்ணச் செயல்செய் இனஉரிமை வண்ண
மொழிஉரிமை மேன்மேல் வளர்உரிமை காண்டார்
விழிநகர்த்த வீரமணி வேந்து!
அன்னை மணியம்மை ஆறல் பெரியாரில்
தன்னை இணைத்த தகைத்தவத்தை – முன்னோக்கித்
தானெடுத்துச் சென்று தளராத் துணிவோடே
வானிடிக்கும் வெற்றி வணங்கு!
தமிழினக் காப்புக் கடமை அரணாய்
நமின்நாட்டை நாளும்வஞ்சி க்கும்- உமிப் பகைமை
ஒன்றியத்தை வெல்லும் உறுத முதல் வர்க்கே
நன்றுதுணை வீரமணி நம்பு.
இன்றுவரை என்றென்றும் எப்பதவி யும் வேண்டா
நன்றுதமி ழர்க்கே உழைக்கும் – வென்றித்
திராவிட எம்கழகம் தேர்ந்ததிசை எல்லாம்
திராவிடர் வெல்லவை சான்று!
தந்தை கனவெல்லாம் தந்த நனவாக
விந்தை புரியும் வீரமணி – சிந்தனைப்
பேருழைப்புக் கீடேது பேசரியா வெல்லுழைப்பு
யாருழைப்பும் ஈடோ? நவில்?
கல்விக் கழகங்கள் கண்டு சமுதாயம்
எல்லா விதத்திலும் ஏற்றமுறச் – சொல்செயல்
ஒன்றாக வாழும் உயர்ந்தநம் ஆசிரியர்
இன்னும்ஓர் நூறாண்டும் இருப்பு.
ஆத்திகம் பேசி அடாதசெயல் செய்வாரும்
நாத்திக உண்மை நன்னடையால் – ஈத்துவக்கும்
வேண்டுதல் வேண்டாமை வேண்டும் பகுத்தறிவாளர்
மாண்புதமி ழர்தலைவர் வாழ்த்து!
ஆக்கம்:
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,
உலக அமைப்பாளர்,
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்