பெங்களூரு, நவ.27- சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது.
சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இணை செயற்கைக் கோள்களை அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு புரோபா-3 திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று இணையாக 150 மீட்டர் தூரத்தில் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் பறந்து சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி இரு செயற்கைக்கோள்கள் இணையாகப் பறந்து ஆய்வு செய்ய அதில் லேசர் சோன் மற்றும் ரெப்லெக்டர் கருவிகள் உள்ளன.
இந்த இரு செயற்கைக் கோள்களையும், முதலில் 600 X 60,530 கி.மீ உயரமுள்ள நீள்வட்டப் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும். செயற்கைக்கோள்கள் இணை சுற்றுவட்டப் பாதையில் வந்தவுடன், மோதல் தவிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். தரைக்கட்டுப்பாட்டு உதவி இல்லாமல், இந்த செயற்கைக்கோள்கள் மோதலை தவிர்த்து ஒன்றுக்கொனறு இணையாக பறப்பதை உறுதி செய்யும்.
சூரியனை பற்றி ஆய்வுக்கு ஒரே செயற்கை கோளில் மிகப் பெரிய கருவிகளை பொருத்த முடியாது என்பதால், இந்த இணை செயற்கைகோள்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொலை தூரப் பொருட்களில் இருந்து வரும் மங்கலான சிக்னல்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடியும்.