கிராம கமிட்டிகளை மீண்டும் உருவாக்கும் காங்கிரஸ் – அடுத்த மாதத்துக்குள் கட்டமைக்க கு.செல்வப்பெருந்தகை உத்தரவு

1 Min Read

சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலிமையை இழந்துள்ளதாக கருதுகிறார்கள். கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தி கட்சியை வலுப்படுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ள மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அதற்கான முயற்சிகளை தொடங்கி இருக்கிறார்.
முதற்கட்டமாக கிராம கமிட்டிகளுக்கு புத்துயிரூட்டவும், இல்லாத கிராமங்களில் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். வருகிற 5-ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் அவர் தொடங்கி வைக்கிறார். கிராம கமிட்டிகளில் தலைவர், 2 துணைத் தலைவர்கள் ஒரு பொதுச்செயலாளர், ஒரு பொருளாளர் என 5 நிர்வாகிகள் இருப்பார்கள். இந்த கட்டமைப்புகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த கமிட்டிகள் அமைத்து முடித்ததும் கிராம தரிசனம் என்ற நிகழ்ச்சியை நடத்த திட்ட மிட்டுள்ளார்கள்.

அதன்படி ஒவ்வொரு கிராமத்துக்கும் தலைவர்கள் செல்வார்கள். அவர்கள் அந்த கிராமத்தில் ஒருநாள் தங்குவார்கள். அப்போது மரத்தடி நிழலில் அமர்ந்து பொதுமக்களை அழைத்து பிரச்சனைகளை கேட்டறிவார்கள். இந்த பணிகள் அனைத்தையும் தை மாதத்துக்குள் செய்து முடிக்கப்படும். அதன் பிறகு காங்கிரசுக்கு நிச்சயம் நல்ல வழி பிறக்கும் என்று செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கிராம கமிட்டிகள் என்பது முன்பு ஞானதேசிகன் தலைவராக இருந்த போது ஏற்கனவே அமைக்கப்பட்டது. ஆனால் அதை முழு அளவில் நிறைவேற்றாமல் விட்டு விட்டனர். இந்த முறை இந்த கமிட்டிகளை முழு அளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள். காங்கிரசில் வருங்காலத்தில் இந்த மாதிரி கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தான் கட்சி எழுச்சி பெறும் என்றும் கூறினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *