புதுடில்லி, நவ.2 டில்லியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு 25 மடங்கு அதிகரித்ததாகவும், இதனால் மக்கள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால், தீபாவளி நாளன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்காக கடந்த அக்டோபர் 14ஆம் தேதி டில்லி அரசு அறிவிப்பில், டில்லி நகரம் முழுவதும் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தீபாவளியன்று கொண்டாடிய டில்லிவாசிகள், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தனர்.
ஆங்காங்கே பட்டாசுகளும் தடையை மீறி விற்கப்பட்டன. தலைநகரம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தன. 31.10.2024 அன்று மாலை 4 மணிக்கு எடுக்கப்பட்ட காற்றின் தரமானது மிகவும் மோசமான அளவாக 328 ஆக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த தீபாவளியில் பதிவான மிகவும் மோசமாக காற்றின் தரம் பதிவாகி உள்ளது. ஒரு கன மீட்டருக்கு 900 மைக்ரோகிராம்கள் வரை பதிவாகியுள்ளன.
ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2022இல் 312, 2021இல் 382, 2020இல் 414, 2019இல் 337, 2018இல் 281 ஆக இருந்ததுடன், கடந்த ஆண்டு 280 ஆக பதிவானது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தலைநகர் முழுவதும் 377 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பட்டாசு வெடிப்பதை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. தடையின்றி தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஒரே புகைமூட்டமாக தலைநகரம் காணப்பட்டது.சாலையோரம் வசிப்பவர்களும், பாதசாரிகளும், வாகனத்தில் செல்வோரும் பெரும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். 1.11.2024 அன்று காலை 6 மணியளவில் எடுக்கப்பட்ட காற்றின் தரக் குறியீடு 370 ஆகப் பதிவாகி இருந்தது. இது மிகவும் மோசமான காற்று மாசு என்று கூறுகின்றனர். கடந்த 24 மணி நேர சராசரி காற்றின் தரக்கு குறியீடு 359 ஆக பதிவாகி உள்ளது. டில்லியின் காற்று மாசு 25 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தீயணைப்புத் துறைக்கு மொத்தம் 318 அழைப்புகள் வந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தசராவில் இருந்தே டில்லியில் காற்று விஷமாக பரவி உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நிலைமை மிகவும் மோசமாகி உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.