புதுடில்லி, அக்.29- வக்புவாரிய சட்டதிருத்த மசோதா தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர். வக்பு சொத்துகள் நிர்வாகத் தில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரும் நோக் கில், வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து புதிய மசோதாவை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது.
இந்த திருத்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. எனவே, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலை மையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியில், பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த கூட்டுக்குழு அடிக்கடி கூடி மசோதா தொடர்பாக பல்வேறு விவாதங்களை நடத்தி வருகிறது. அத்துடன் பல்வேறு தரப்பினரிடம் இருந்து அறிக்கை களையும் பெற்று வருகிறது. அந்த வகையில் டில்லியில் நேற்று (28.10.2024) இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடியது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்போது டில்லி வக்வு வாரிய நிர்வாகியும், மாநகராட்சி உறுப்பினருமான அஸ்வினி குமார் இந்த கூட்டுக்குழு முன்பு ஆஜரானார். மேலும் டில்லி அரசின் அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்த்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டில்லி அரசின் ஒப்புதல் இல்லாமலேயே அறிக்கையை முற்றிலும் அஸ்வினி குமார் திருத்தி இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
தி.மு.க. வெளிநடப்பு
அத்துடன் இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்படி ஆம் ஆத்மி சஞ்சய் சிங், தி.மு.க.வை சேர்ந்த முகமது அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் நாசர் உசேன் மற்றும் முகமது ஜாவேத் உள்ளிட்ட எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்.
இதனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.