ஒன்றிய பா.ஜ.க. அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அக்.23 கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்பு நிகழ்வில் 59 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக வைத்து பாஜக – ஆர்எஸ்எஸ் ஹிந்துத் துவா குண்டர்கள் குஜராத்தில் வன்முறையில் ஈடு பட்டனர். இந்த வன்முறையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், உள்பட 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005இல் நாடாளுமன்றத்தில் அப்போதைய ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டும், குஜராத் கலவரம் பற்றி ரகசிய விசாரணை நடத்தியும் கடந்த ஆண்டு இங்கிலாந் தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி (BBC) “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை வெளி யிட்டது. குஜராத் வன்முறையில் அப்போதைய முதலமைச்சரும், இன்றைய பிரதமருமான நரேந்திர மோடிக் கும் தொடர்பு இருப்பதாகவும், அவரும் வன் முறைக்கு காரணமானவர் என பிபிசி ஆவணப் படத்தில் கூறப்பட் டது. பிபிசி ஆவணப் படத்தால் தங்களது ஹிந்துத்துவா அரசியலுக்கு பங்கம் வந்துவிடும் என்பதை உணர்ந்த மோடி அரசு, ஆவணப் படத்திற்கு தடைவிதித்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
உண்மையை மறைப்பது, பொய் களை ஆதரிப்பதற்கு சமம் என்று ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் மீதான தடையை நீக்கக்கோரி, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
‘தி இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, உச்சநீதிமன்ற மூத்த வழக் குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு 21.10.2024 அன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது, “20 மாதங்களாகியும் ஒன்றிய அரசு இதுவரை கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யவில்லை” என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”இன்னும் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்” எனக் கூறினார். இதனை தொடர்ந்து அடுத்த 3 வாரத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்ய ஒன்றிய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை 2025 ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது.