புதுடில்லி, அக்.17- “இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) படிப்பைத் தொடர இயலாதவா் என்று நிபுணர் அறிக்கை அளிக்கும் வரையில், மாணவரின் மருத்துவக் கல்வி உரிமையை 40 விழுக்காடு உடற் குறைபாடு தடுக்காது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
40 விழுக்காடு அல்லது அதற்கு அதிகமான உடல் குறைபாடு கொண்ட மாணவா்கள்
எம்.பி.பி.எஸ். படிப்பதை 1997ஆம் ஆண்டின் மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை தடை செய்கிறது.
இதன் கீழ் எம்.பி.பி.எஸ். சோ்க்கையை இழந்த நிகழாண்டு நீட் தோ்வில் தேர்ச்சி பெற்ற மகாராட் டிரத்தைச் சேர்ந்த மாணவர் ஓம்காா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கில் மாணவர் எந்த தடையும் இல்லாமல் மருத்துவக் கல்வியைத் தொடரலாம் என்று மருத்துவ வாரியம் தெரிவித்தது. இதையடுத்து, மாணவர் ஓம்காருக்கு எம்பிபிஎஸ் இடம் ஒதுக்க நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அரவிந்த் குமாா், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி தீா்ப்பளித்தனர்.
அந்த உத்தரவுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள விரிவான விளக்கத்தில், ‘மாற்றுத் திறனாளியாக இருப்பது ஒரு மாணவா் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு தடையாக இருக்கக் கூடாது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் திறனை மாற்றுத் திறனாளிகள் மதிப்பீட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.
மருத்துவக் கல்வியைத் தொடர மாணவரின் உடல் குறைபாடு இடையூறாக இருக்குமா; இல்லையா என்பதை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியம் நேர்மறையாக பதிவு செய்ய வேண்டும்.
ஒருவேளை, மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியம் படிப்பைத் தொடர தகுதியற்றவர் என்று ஒரு மாணவரை நிராகரிக்க முடிவு செய்தால், அதற்கான காரணத்தை விரிவாக தெரிவிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.