ஈரோடு, அக்.16- ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை செவிலியர் ஒருவர் பரிசலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றின் மறுகரையில் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு, புதுக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன .
இந்த மலைக்கிராமங்கள் அனைத்தும் நீலகிரி மாவட்டத் தில் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் மளிகைப் பொருட்கள் உள்பட எந்த பொருள் வாங்க வேண்டும் என்றாலும் மாயாற்றை கடந்து பவானிசாகர் அல்லது சத்தியமங்கலத்துக்குதான் செல்ல வேண்டும். இந்த கிராமங்களுக்கு ஒரேயோர் அரசுப் பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. அதுவும் மழைக்காலம் என்றால் இயக்கப்படாது.
பலத்த மழை
இங்குள்ளவர்கள் மாயாற்றில் தண்ணீர் குறைவாக செல்லும்போது, அதில் இறங்கி நடந்து கடந்துவிடுவார்கள். சற்று அதிகமாக சென்றால் பரிசல் மூலம் மறுகரையை அடைவார்கள். தற்போது நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மாயாற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தெங்குமரஹாடாவை அடுத்து உள்ள மலைக்கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஹரிஷ் என்பவரின் மனைவி சினேகாவுக்கு (வயது 23) நேற்றைக்கு முந்தைய நாள் (14.10.2024) காலை 6 மணி அளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அவருடைய உறவினர்கள் இதுகுறித்து தெங்கு மரஹாடா ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர் விமலாவுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் பவானிசாகரில் உள்ள 108 மருத்துவ அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மாயாற்றின் மறுகரைக்கு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. இதனிடையே புதுக்காடு கிராமத்தில் இருந்து சினேகா மற்றும் அவருடைய உறவினர்களை நர்சு விமலா அழைத்துக்கொண்டு பரிசல் மூலம் மாயாற்றை கடந்து மறுகரைக்கு சென்றார். அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஆம்புலன்சில் சினேகாவை ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்த்தார்.
பாராட்டு
விரைந்து செயல்பட்டு கர்ப்பிணி சினேகாவை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்த்த செவிலியர் விமலாவின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
நாளை கரையை கடக்கிறது
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை, அக்.16- சென்னை அருகே நாளை (17.10.2024) அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதாக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே கரையை கடக்கவுள்ளது.
குடிநீர் வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை
சென்னை, அக்.16- சென்னை குடிநீா் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீா் மற்றும் கழிவுநீா் வரியை முழுமையாக செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை குடிநீா் வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 முறை பொதுமக்கள், குடிநீா் மற்றும் கழிவுநீா் வரியை செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், உரிய காலகட்டத்தில் வரியை செலுத்துபவா்களை ஊக்குவிக்கும் விதமாக 1.10.2024 முதல் 30.10.2024 வரை முழுமையாக வரி செலுத்துபவா்களுக்கு, அவா்கள் செலுத்தும் வரியிலிருந்து 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு அதிகபட்சம் ரூ.1,500 வரை சேமிப்பு கிடைக்கும். இந்த வழிமுறை 1.10.2024 முதல் அமல்படுத்தப்படும்.
எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது நிகழ் நிதியாண்டின் 2-ஆம் அரையாண்டிற்கான குடிநீா் மற்றும் கழிவுநீா் வரியை அக்.30-ஆம் தேதிக்குள் செலுத்தி பொதுமக்கள் பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.