விநாயகன் சிலையை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி
ஆமதாபாத், செப்.13- குஜராத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வின்போது ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
குஜராத் மாநிலம் பாட்டன் மாவட்டத்தில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஒன்று சரஸ்வதி ஆற்றில் கரைக்கப்பட்டபோது 2 பெண்கள் உள்பட 7 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருபெண் உள்பட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருபெண், அவரது 2 மகன்கள் மற்றும் சகோதரர்ஆகிய 4 பேரும் உயிரற்று மீட்கப்பட்டனர். விநாயகன் சிலையை கரைக்கும்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி
ஃபோர்டு நிறுவனத்துடன்
சென்னை அய்.அய்.டி. ஒப்பந்தம்
சென்னை, செப்.13 தமிழ்நாடு முழுவதும் 240 பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு சாலைப் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நோக்கில், ஃபோர்டு நிறுவனத்துடன் சென்னை அய்.அய்.டி. ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை அய்.அய்.டி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் 240 பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்களுக்கு சிறந்த பயிற்சியாளா்கள் மூலம் சாலைப் பாதுகாப்பு அறிவு மற்றும் திறன்களைப் பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.’’
2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த 1 லட்சத்து 68,491 பேரில் 42 ஆயிரத்து 878 போ் 25 வயதுக்குட்பட்டவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் பருவத்தில் சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பயிற்றுவிப்பதன் மூலம் நீண்டகாலத்துக்கு இப்பழக்கம் மனதில் நிற்பதுடன், சாலைப் பாதுகாப்பை அவா்களின் வாழ்க்கைமுறையின் இயல்பான பகுதியாக உட்புகுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமன்றி, சாலைகளில் உயிர்களைக் காப்பாற்ற உதவும் இயல்பான மனப்பாங்குக்கு மாறுவதை இந்த சமூகம் உறுதிசெய்ய முடியும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், நடைமுறைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதுடன் சாலைகளில் வாகனங்களை மிகுந்த பொறுப்புடன் ஓட்டுவதை இத்திட்டம் வலியுறுத்துகிறது.
புரிந்துணா்வு ஒப்பந்தம்: சென்னை அய்.அய்.டி. சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மய்யமும், ஃபோர்டு நிறுவனமும் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
இதற்கென பயிற்சி பெற்ற நபா்கள், அந்தந்தப் பள்ளிகளிலும், போக்குவரத்து வரம்புக்கு உட்பட்ட இடங்களிலும் ஓட்டுநா் நடைமுறைகள், போக்குவரத்து விதிகள், ஆபத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவா். விபத்துகளைக் குறைத்து, சாலைப் பயனாளா்கள் அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம்.