இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஒடிசா சட்டமன்றத்தில் அமளி!

3 Min Read

ஒடிசா, ஆக.27- ஒடிசாவில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில்,
எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஒடிசாவில், முதலமைச்சர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது.

மக்கள் தொகை

இந்நிலையில், ஒடிசாவில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர எஸ்.டி., – எஸ்.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக காங்கிரஸ் 24.8.2024 அன்று கேள்வி எழுப்பியது. இது குறித்து அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் ராம சந்திர கடம் கூறியதாவது:

ஒடிசாவில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமூகத்தின் மக்கள்தொகை 38.75 சதவீதமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல், 50 சதவீதம் உள்ள ஓ.பி.சி., பிரிவினருக்கு எந்த இட ஒதுக்கீடும் இல்லை.

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புக்கான சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீடு பெற அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்கள் தொகையில், 6 சதவீதமாக உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வாக்குவாதம்

முறையற்ற இட ஒதுக்கீட்டால் எஸ்.சி., – எஸ்.டி., – ஓ.பி.சி., சமூக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடை வழங்கி, மருத்துவப் படிப்புக்கான புதிய சேர்க்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இதை ஆதரித்து, பிஜு ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் பேசினார். அப்போது, பா.ஜ., – உறுப்பினர் தங்கதர் திரிபாதி, “இவ்வளவு நாட்களாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம், இந்த விவகாரத்தில் என்ன செய்தது?” என, கேள்வி எழுப்பினார்.

இதனால், சட்டமன்றத்தில் மூன்று கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சியினர் சட்டமன்ற தலைவரை முற்றுகையிட முயன்றதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக, கள்ளச்சாராய விவகாரத்தை கூறி சட்டமன்ற நடவடிக்கைகளை முடக்க முயன்ற எதிர்க்கட்சியினர், நேற்று முன்தினம் இட ஒதுக்கீடு பிரச்சினையை முன்னெடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை அறிகுறி இல்லை!
பொது சுகாதாரத் துறை

இந்தியா

 

சென்னை, ஆக.27- வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழ்நாடு வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தார். எனினும், விமான நிலையங்களில் மருத்துவக் கண்காணிப்பை தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவா் கூறினார்.

குரங்கு அம்மை முதல் முதலில் 1958-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குரங்கு களிடமிருந்து பரவியதாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள சூழலில் ஆப்பிரிக்கா நாடு மட்டுமல்லாமல், 116 நாடுகளிலும் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்றவை அந்த தொற்றுக்கான அறிகுறிகளாகும்.
ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை தொற்றைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசர நிலையை கடந்த 14-ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் இது சம்பந்தமாக தொடா்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

தொடா்ச்சியாக தமிழ்நாட்டிலும் பல்வேறு விழிப்புணா்வு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில், இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வருபவா்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, பன்னாட்டு விமானங்களில் பயணித்து வருபவா்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் அமைப்பு நிறுவப் பட்டுள்ளது. இது கரோனா காலங்களிலிருந்து பயன் பாட்டில் இருந்து வருகிறது. இந்த பரிசோதனைகளில் பயணிகளுக்கு காய்ச்சல் இல்லை எனில் பச்சை நிறத்திலும், காய்ச்சல் இருந்தால் சிவப்பு நிறத்திலும் விளக்கு எரிந்து எச்சரிக்கை ஒலி எழும்.
முழு நேரமும் பணியில் இருக்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளா்கள் நோயாளிகளை அடையாளம் கண்டு விமான நிலையத்திலேயே, அவா்களை தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து முதலுதவிகளை செய்வார்கள்.

தேவைப்பட்டால் உயா் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பப்படுவார்கள். தமிழ் நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. சொல்லப்போனால், இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த எவருக்கும் அத்தகைய அறிகுறிகள் தென்படவில்லை. இருந்தபோதிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார் அவா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *