திருவனந்தபுரம், ஜூலை 29 கேரளாவில் மாநில அரசு தனது ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்ட முன்முயற்சியை முன்னெடுத்து செல்ல ஆலோசித்து வருவதால், மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் இனி மாதத்தில் நான்கு நாட்கள் அதிக எடையுள்ள பைகளை எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்காது.
இது குறித்து கேரள மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளிக்கூட பைகளின் அதிக எடைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
மாநிலத்தில் 1 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களின் பள்ளிப் பைகள் அதிக எடையுடன் இருப்பது குறித்து விரைவில் ஓர் அறிவிப்பு வெளியிடும்.
மாணவர்களின் பள்ளிக்கூட பைகள் அதிக எடையுடன் இருப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுக் கல்வி மீது அக்கறை உள்ளவர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் மற்றும் பரிந்துரைதள் வந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநிலத்தில் பாடப் புத்தகங்கள் இரண்டு பிரிவுகளாக அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் இன்னும் மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை அதிகமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன.
1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிப் பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும்,
10-ஆம் வகுப்பு மாணவர்களின் பள்ளிப் பையின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கும் படி வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இவை தவிர, மாதத்தில் நான்கு நாட்கள் அரசுப் பள்ளிகளில் ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கோளில் பாறை கண்டுபிடிப்பு!
வாசிங்டன், ஜூலை 29- ரோவர் செவ்வாய் கோளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஒன்று அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுகிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கோளை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கோளில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட ‘பெர்சிவியரன்ஸ்’ (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் அந்த ரோவர் செவ்வாய் கோளில் பாறை ஒன்றை கண்டு பிடித்துள்ளது.
செவ்வாய் கோளில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான ‘நெரெட்வா வாலிஸ்’-இன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும் போது அம்பு முனை வடிவ பாறையை பெர்சிவி யரன்ஸ் கண்டெடுத்ததாக நாசா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.