புதுடில்லி, ஜூலை 26- ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவித்தபடி சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், “இது தமிழ்நாடு அரசின் திட்டம்’ என ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சென்னை மாநகரின் 2ஆம் கட்டத் திட்டத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ. 63,246 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு அனுமதி அளிக்காதது குறித்தும் இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்தும் தமிழ்நாடு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான 22.7.2024 அன்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசினார்.
இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவில் 50 சதவீதம் நிதியாக ரூ.31,623 கோடியை வழங்குவதாக ஏற்கெனவே ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது குறித்து குறிப்பிட்டு அந்த நிதியை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தும் அனுமதிக்கப்படாதது குறித்தும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கேஆர்என் ராஜேஷ் குமார் 24.7.2024 அன்று பேசியது:
பொது முதலீட்டு வாரியம் 2021 ஆகஸ்ட் 17- ஆம் தேதியே மெட்ரோ திட்டத்துக்கான பரிந்துரையை அளித்திருந்த நிலையில், கடந்த 3 ஆண்டு களாக பொருளாதார விவகா ரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலுக்காக இந்தத் திட்டம் நிலுவையில் உள்ளது. தற்போது இந்தத் திட்டத்துக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டிய நிலையில் மாநிலத்தின் நிதிநிலையை கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஒரு சதுர கி.மீ.க்கு 26,533 பேர் வீதம் மொத்தம் 1.2 கோடி பேர் வசிக்கின்றனர்.
சென்னை மாநகரம் மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நகரமாக விளங்குவதோடு, போக்குவரத்து நெரிசலும் மிகுந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை இந்தத் திட்டத்துக்கு நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்தார். ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தி இதற்கு நிதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.