புதுடில்லி, ஜூலை 25 பாரபட்சமான, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2024-2025-ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில், ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி, பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் உள்ளது. அதேபோல, பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே, இது கூட்டணி கட்சிகளுக்கான நிதிநிலை அறிக்கை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டில்லியில் உள்ள அவரது வீட்டில் இண்டியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று (24.7.2024) நடைபெற்றது. இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூட்டணி கட்சி களின் பிரதிநிதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: ஒன்றிய நிதிநிலை அறிக்கை நியாயமாக, நேர்மையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இது பாரபட்சமாக, அபாயகரமானதாக உள்ளது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசமைப்பு சட்டக் கொள்கைகளுக்கு விரோதமாக அமைந்துள்ளது. இதை கண்டிக்கும் விதமாக, டில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிட்டி ஆயோக் கூட்டத்தை, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி கூறும் போது, ‘‘காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மட்டுமன்றி, இண்டியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களும் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக் கணிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார். ஏற்கெனவே, நிதிநிலை அறிக்கையை கண்டித்து நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
தெலங்கானா சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம்: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தெலங்கானாவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என கண்டனம் தெரிவித்து தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானாவுக்கு நீதியை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரிவான விவாதத்துக்கு பிறகு இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ரேவந்த் முன்மொழிந்தார். பாஜக தவிர அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேறியது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, ‘‘நான் முதலமைச்சரான பிறகு, பிரதமர் மோடியை 3 முறை சந்தித்து, தெலங்கானா மாநில பிரச்சினைகள் குறித்து பேசி, மனு கொடுத்துள்ளேன். 18 முறை ஒன்றிய அமைச்சர்களிடம் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நிதிநிலை அறிக்கையிலாவது நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒதுக்கப்படவில்லை. இதை கண்டித்து டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளேன். நிதிநிலை அறிக்கையில் திருத்தம் செய்து தெலங்கானாவுக்கு நிதி வழங்காவிட்டால் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
சித்தராமையா குற்றச்சாட்டு: நிட்டி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு குறித்து பெங்களூருவில் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று கூறியதாவது: கருநாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கருநாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தாலும், இந்த மாநில மக்களை புறக்கணித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படு வதற்கு முன்பாக நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். விவசாயிகளின் பிரச்சி னைகளை தீர்க்க நிதி ஒதுக்குமாறு வலியுறுத் தினேன். ஆனால், ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருநாடகாவை புறக்கணித்துள்ளது. இதனால், நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.