புதுடில்லி, ஜூலை 8- சி.பி.எஸ்.இ. என குறிப்பிடப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு அடுத்த மாதம் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக வெளியி டப்பட்டுள்ள அறிவிப்பில், ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. பணியாளர்களுக்கான நியமனத் தேர்வில் ஹிந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் முதற்கட்டத் தேர்விலேயே தங்கள் வாய்ப்பை பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய இடைநிலைக்கல்வி வாரியத்தில் ‘ஏ’ பிரிவு பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்தமுள்ள 300 மதிப்பெண்களில் ஹிந்தி மொழித் தேர்வுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘பி’ பிரிவில் இளநிலைப் பொறியாளர் பதவிக்கான தேர்வில் ஹிந்தி மொழித் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப் பட்டுள்ளன.
இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கான தேர்வில் மொத்தமுள்ள 300 மதிப்பெண்களில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், ‘சி’ பிரிவில் கணக்காளர் பதவிக்கான தேர்வில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இளநிலை கணக்காளர் பதவிக்கான தேர்வில் மொத்தமுள்ள 240 மதிப்பெண்களில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் இலக்கியம் தொடர்பான வினாக்களுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. சி.பி. எஸ்.இ. நிர்வாகத்தின் இந்த தேர்வு முறைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.