கூச் பிகார், ஜூன் 20- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாஜக மாநிலங் களவை உறுப்பினர். அனந்த் மகாராஜ் (எ) நகென் ராயை கூச் பிகாரில் அவருடைய இல்லத்தில் 18.6.2024 அன்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
டார்ஜீலிங் மாவட்டம் நியூ ஜல்பைகுரி அருகே 17.6.2024 அன்று நிகழ்ந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்து சிலிகுரியில் உள்ள வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை 18.6.2024 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மம்தா, பின்னா் பிற்பகலில் கூச்பிகார் வந்தார்.
அங்கு சக்சக்கா அரண்மனைக்கு வருகை தந்த மம்தாவை, பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் ராஜ் போங்ஷி சமூகத்தின் தலைவருமான அனந்த் மகாராஜ் வெற் றிலை பாக்குடன் பாரம்பரிய சால்வை அணிவித்து வரவேற்றார்.
இருவரிடையேயான சந்திப்பு 35 நிமிடங்கள் நீடித்தது. அண்மையில் நடந்து முடிந்த மக்க ளவைத் தோ்தலில் பாஜக வசமிருந்து கூச் பீகார் திரிணாமூல் காங்கிரஸ் வசமானது.
பாஜக வேட்பாளரை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் தோற்கடித்தார்.
இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கும் ராஜ் போங்ஷி சமூகத்தின் ஓட்டுகள், திரிணமூல் காங்கிரசுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமா்சகா்கள் அப்போது தெரிவித்தனா்.
இந்தச் சூழலில், அனந்த் மகாராஜை மம்தா சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து மாநில பாஜக தரப்பில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சந்திப்பு குறித்து அனந்த் மகாராஜும் பேட்டியளிக்க மறுத்துவிட்டார்.
‘வரும் நாள்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று மட்டும் செய்தியாளா் களிடம் அவா் கூறினார்.