தேர்தலின்போது கண்ணியமற்றவைகளை – தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பொய்களைக் கூறக்கூடாது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!

Viduthalai
3 Min Read

* ஆர்.எஸ்.எஸ். – ஆளும் பி.ஜே.பி.க்கு இடையில் மோதலா?
* மணிப்பூர் பற்றி எரிகிறது – நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மும்பை, ஜூன் 11 மணிப்பூர் இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் அமைதியைத் தேடுகின்றனர். அங்கு அமைதியை ஏற்படுத்தப்போவது எப்போது? என 3 ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பி உள்ளார். ஒன்றிய அரசு மணிப்பூர் அமைதியின்மைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தியுள்ளார்.
மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலை வர், “மணிப்பூர் அமைதிக்காக ஓராண்டாகக் காத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் அமைதி நிலவிய நிலையில், திடீரென மாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மோத லைத் தீர்ப்பது முக்கியம்’’ என்று தெரி வித்துள்ளார்.

வாய் திறக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
2024 மக்களவைத் தேர்தல் முடிவு கள் அறிவிக்கப்பட்ட பிறகு,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முதன்முறையாக ஒன்றிய அரசுக்கு எதிராக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
“ஜனநாயகத்தின் இன்றியமையாத செயல்முறை தேர்தல். இதில் இரு தரப்பு இருப்பதால் போட்டி நிலவுகிறது. இது ஒரு போட்டி என்பதால், தன்னை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அதற்கு ஒரு கவுரவம் இருக்கிறது. பொய்களைப் பயன்படுத்தக் கூடாது. நாடாளுமன்றத்திற்குச் சென்று நாட்டை நடத்துவதற்கு மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டி போர் அல்ல” என்று கூறினார். தேர்தலின் போது கண்ணியம் இல்லாததையும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய்யைப் பரப்புவதையும் கடுமையாக சாடிய பகவத், ஒருவரையொருவர் விமர்சிக்கும் விதமான விமர்சனங்கள், பொய்ப் பிரச்சாரம் எப்படி சமூ கத்தில் கலகத்தை ஏற்படுத்தும், எவற்றால் பிளவுகள் ஏற்படும் என்று கூறியவர், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு களும் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படு கின்றன என்றும் கூறினார்.

ஜனநாயக செயல்பாட்டில் எதிர்க்கட்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய ஆர்.எஸ்.எஸ். தலைவர், அதை ஓர் எதிரியாகக் கருதக்கூடாது என்றும், உண்மையான சேவகர் கண்ணியத்தைக் கடைபிடிப்பார் என்றவர், எதிர்க்கட்சிகளின் கருத்துகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்றும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் நிறைய நேர்மறையான விஷயங்கள் நடந்ததாகவும், அதே அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வருவதாகவும் தெரிவித்த பகவத், “ஆனால் நாம் இப்போது சவால்களிலிருந்து விடுபட்டுள்ளோம் என்று அர்த்தமல்ல…” என்று அவர் கூறியதுடன், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியவர், மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது, அதை யார் கவனிக்கப்போகிறார்கள் என்று கேள்வியுடன், இம்பால் பள்ளத்தாக்கைத் தளமாகக் கொண்ட மெய்டீஸ் மற்றும் மலையை அடிப்படையாகக் கொண்ட குக்கிகளுக்கு இடையிலான இன மோதல்கள் கடந்த ஆண்டு முதல் 200-க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியது மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளது என்றும் கூறினார்.

வடகிழக்கு மாநிலத்தில் வன்முறை!
கடந்த ஆண்டு மே மாதம் வடகிழக்கு மாநிலத்தில் வன்முறை வெடித்த பிறகு முதல்முறையாக இது குறித்து பகவத் பேசினார். மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தியதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இந்த நிலையில், மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டியது அவசியம் என்பதை ஒன்றிய பாஜக அரசுக்கு மோகன் பகவத் நினைவூட்டியுள்ளார்.
மணிப்பூர் சற்று அமைதி நிலவி வந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஜிரிபாமில் புதிய வன்முறைகள் பதிவாகியுள்ளன. மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் அப்பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜிரிபாமில் இருந்து புதிய வன்முறை ஏற்பட்டது. மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங்கின் வாகனத் தொடரணி காங்போக்பி மாவட்டத்தில் நடந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஜூன் 6 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *