கோமாதா, பசுவே தெய்வம், இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்கவேண்டும், என்று சொல்லி – பசுமாட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் நபர்களைக் கூட அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்களாகவோ, தாழ்த்தப்பட்ட மக்களாகவோ இருந்தால் அடித்தே கொலை செய்யும் கும்பல் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து தேர்தல் பத்திர நன்கொடைகளைப் பெரிய அளவுக்குப் பெற்றுள்ளது, அதுமட்டுமல்லாமல், அவர்களின் ஏற்றுமதிக்கான அனைத்து வழிகளையும் முழுமையாக திறந்துவிட்ட காரணத்தால் கடந்த 2019 முதல் 2022 வரை உலகின் அதிக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பான – நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களும் முக்கியமாக உள்ளன. அதில் முக்கிய மானது ‘அல்லானா’ குழுமம் ஆகும்.
இந்த நிறுவனம் கடந்த 2019, ஜூலை 9ஆம் தேதி ரூ.2 கோடி நன்கொடையையும் அதன்பின்னர் அதே ஆண்டில் அக்டோபர் 9ஆம் தேதி அன்று, ரூ.1 கோடியையும் பிஜேபிக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறது அது போல், ‘பிரிகொபிகோ’ நிறுவனம் 2019, ஜூலை 9ஆம் தேதி ரூ.2 கோடி நன்கொடையை வழங்கியுள்ளது. இது தவிர, ‘அலானா கோல்ட் ஸ்டோரேஸ்’ என்ற நிறுவனமும் அதே ஆண்டு, ஜூலை 9ஆம் தேதி ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஆக, அந்த ஆண்டு மட்டும் இந்த நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கிய தொகை மொத்தம் ரூ.6 கோடி ஆகிறது. முன்னதாக, இந்த நிறுவனங்களில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ.2,000 கோடி மதிப்புள்ள வரியை அந்த நிறுவனங்கள் ஏய்ப்பு செய்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்; அதற்குப் பின்னர் 2 மாதங்கள் கழித்து, மேற்கண்ட ரூ.6 கோடி ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
1865ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அல்லானா குழுமம், நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் உள்ள 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.15,000 கோடி அளவுக்கு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.இதற்குமுன்பு இந்த நிறுவனங்கள், 2013 டிசம்பரில், அதாவது கடந்த 2014 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவுக்கு ரூ.2.50 கோடி நன்கொடையை அளித்ததாக, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் (2013-2014 மற்றும் 2014-2015) தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டுத் தரவின்படி இந்தியாவும், பிரேசிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளன. உலக மாட்டிறைச்சி சந்தையுடன் ஒப்பிடுகையில் பிரேசிலிடம் 20 சதவீதம் சந்தையும், இந்தியாவிடம் 20 சதவீதம் சந்தையும் உள்ளன. இதைத் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் உலகளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆய்வுகள்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சுமார் 1.42 மில்லியன் மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது, நடப்பு ஆண்டில் (2024)1.46 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பசு பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், அதன் சில்லரை அமைப்புகளான பஜ்ரங்தள், கவுரக்ஷாதள், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க. போன்றவை மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்றுள்ளன.
கோமாதா எங்கள் குலமாதா என்று கொஞ்சும் கூட்டம்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து கொள்ளைப் பணத்தைக் கொள்ளை அடித்திருக்கிறது.
இவ்வளவுக்கும் பிஜேபி ஆளும் பல மாநிலங்களில் பசுவதைத் தடை சட்டம் உள்ளது.
அரியானாவில் செத்துப்போன பசு மாட்டின் தோலை உரித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று தோழர்களை – அவர்கள் அடைக்கலம் தேடி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையிலும்கூட – அவர்களை வெளியே இழுத்து வந்து கொலை செய்தது சங்கிகள் கூட்டம்.
சந்தைக்கு மாடுகளை ஏற்றிச் சென்றவர்களைக்கூட லாரிகளை மடக்கி, ஓட்டுநர்களையும் உடன் இருந்தவர்களையும் அடித்து நொறுக்கவில்லையா? லாரியின் சக்கரத்தில் கட்டி இழுத்தும் சென்ற கொடுமையை என்ன சொல்ல!
இத்தகைய கோமாதா குலக் கொழுந்துகள்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் (அதில் பசுக்கறி இல்லையோ – சோதனை செய்வார்களோ!) பணம் பறிக்கிறார்கள். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது இவர்களுக்குத் தான் நூற்றுக்கு நூறு பொருந்தும்! அடையாளம் காண்பீர்! வரும் தேர்தலில் பாடம் கற்பிப்பீர்!!