போபால்,ஏப்.10- மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் தானோராவில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் மூன்று, நான்கு புரட்சிகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றுள் ஒன்று, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட பெண்கள் மற்றும் ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டமாகும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப் படும். இதனால் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும்.
வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் ஓராண்டு பயிற்சி அளிக்க சட்டம் கொண்டுவரப்படும். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும்.
பயிற்சி முடிந்த பிறகு அவர்கள் திறமையாக பணி யாற்றினால் அதே இடத்தில் வேலைவாய்ப்பு பெறலாம். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவரப்படும்.
அரசு ஊழியர்கள் நியமனத்தில் ஒப்பந்த முறை ரத்து செய்யப்படும். 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். ஆஷா பணியாளர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர் களுக்கும் ஊதியம் இரட்டிப்பு ஆக்கப்படும்.
பழங்குடியினரை ‘வனவாசி’ என்று பா.ஜனதா சொல்கிறது. உண்மையில் அவர்கள் ‘ஆதிவாசிகள்’ ஆவர். வனப் பகுதியின் உண்மையான உரிமையாளர்கள். ஆனால் அவர்களிடம் இருந்து நிலத்தையும், தண்ணீர், நிலம், வனம் மீதான அவர்களின் உரிமையையும் பறிக்க ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். அவர்களின் நிலங்களை பறித்து தொழில் அதிபர்களுக்கு அளிக்க விரும்புகிறார்கள்.
நாட்டின் 200 முன்னணி நிறுவனங்களில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த யாரும் உரிமையாளராகவோ, மூத்த நிர்வாகியாகவோ இல்லை. 90 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே ஆதிவாசி ஆவார்” என்று அவர் பேசினார்.