ஆலந்தூர், நவ. 24- குழந்தை பிறக்க பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.56 லட்சம் மோசடி செய்த கும்பகோணம் ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவரது மனைவி காயத்ரி (38). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இதனால் கடந்த 2023-ஆம் ஆண்டு குடும்பத்துடன் கும்பகோணம் சென்றனர். அப்போது, குழந்தை பாக்கியம் மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்து தீர்வு காணப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு காயத்ரி பேசினார்.
மறுமுனையில் பேசிய கும்ப கோணத்தைச் சேர்ந்த ஜோதிடர் ராம நிரஞ்சன் (42) என்பவர், உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு பரிகாரம் செய்து தீர்வு காண்பதாக கூறினார். இதனை நம்பிய காயத்ரியிடம் இருந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை கூகுள் பே மூலம் சிறுகச் சிறுக என மொத்தம் ரூ.56 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கூறியபடி குடும்ப பிரச்சினைகள் எதுவும் தீரவில்லை. இதற்கிடையே, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசனுக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி, பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த பணம் மற்றும் நகைகளை விற்றுத் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி ஜோதிடரிடம் கேட்டார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ராமநிரஞ்சன் மோசடி செய்துவிட்டார்.
இதுகுறித்து காயத்ரி பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பரங்கிமலை காவல்துறை துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் பசுபதி மற்றும் பழவந்தாங்கல் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்துமகா சபா மாநில பொதுச் செயலாளர்
விசாரணையில், கும்பகோணத்தில் ஜோதிடராகவும், கார் விற்பனை தொழிலும் செய்து வரும் ராம நிரஞ்சனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராம நிரஞ்சன், அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக இருப்பதாக கூறப்படுகிறது.
