சென்னை, நவ. 14- மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்த திருவாரூர் காவல்துறைக்கு தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.
தி.மு.க. அய்.டி.விங் எழுப்பியுள்ள கேள்வி வருமாறு:
என்னது… தமிழ்நாட்டில் இனி பொதுமக்களே காவல்துறை வேலையையும் பார்க்கணுமா?
சந்தேகப்படும் வாகனங்களை மக்களே கண்காணிக்கணும்! அந்நியர்களை மக்களே கவனிக்கணும்! வீட்டுக்கு மக்களே சிசிடிவி மாட்டணும்! நகைகளை மக்களே பாதுகாக்கணும்!
திருவாரூர் காவல்துறையின் அறிவுரைகளைப் பார்த்தால், அடுத்து “திருடனைப் பிடித்தால் மக்களே பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும். முடிந்தால் எப்.அய்.ஆர்.-ஐயும் நீங்களே எழுதிக்கொண்டு வரவும்!” என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
முதலமைச்சரே, மக்கள் தங்கள் வீட்டையும் பார்த்துக் கொண்டு, காவல்துறை வேலையையும் செய்ய வேண்டுமென்றால்…
காவல்துறை எதற்கு? காவல்துறையைக் காவல் காக்கவா?
விழிப்புணர்வு அவசியம்தான்! ஆனால் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தானே?
காவல் துறைக்கு பொறுப்பு வகிப்பவருக்கு வேறு என்ன பெரிய வேலை?
இது தமிழ்நாடா? இல்லை ஒவ்வொரு வீடும் தனிக் காவல் நிலையமாக மாற வேண்டிய போர்க்களமா?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
