சென்னை, நவ.9 மூடநம்பிக்கைப் பண்டி கையான தீபாவளியை பல ஆண்டுகளாகக் கொண்டாடாத கிராம மக்கள் உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 12 கிராமங்களில் கடந்த 72 ஆண்டுகளாக தீபாவளி கொண்டா டப்படுவதில்லையாம்.
எஸ்.மாம்பட்டி ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி மற்றும் இந்திரா நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தீபாவளியை மற்றொரு சாதாரண நாளாகவே கடந்து செல்கின்றனர். தீபாவளி நாளில் இந்தக் கிராமங்களில் பட்டாசு சத்தம் கேட்பதில்லை. புத்தாடை அணிந்தவர்களையும் காண முடிவதில்லை. வழக்கம்போல மக்கள் விவசாயப் பணிக்காக வயல்களுக்குச் சென்றுவிடுகின்றனர்.
அந்தப் பகுதிகளில் தீபாவளிக்கான எந்த அறிகுறியும் தென்படாது. இப்பகுதி மக்கள் புரட்டாசி, அய்ப்பசி மாதங்களில் விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம். முந்தைய காலங்களில் பெரும்பாலானோர் வசதியில்லாத நிலையில் இருந்ததால், வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயப் பணிகளை மேற்கொண்டனர். தை மாதத்தில் அறுவடை முடிந்ததும். வாங்கிய கடனுக்காக நெல் தானியங்களை வழங்கி வந்தனர்.
இதனால் அய்ப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அவர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்தது. பலரும் தீபாவளி கொண்டாடவும், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில், 1954 ஆம் ஆண்டு ஊர்க்கூட்டம் கூட்டிய மக்கள், இனி தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என முடிவு செய்தனர். அந்த முடிவை 71 ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே அமைந்துள்ள கிட்டாம்பாளையம் கிராமம், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளியன்று பட்டாசு வெடிக்காத பழக்கத்தைப் பின்பற்றி வருகிறது.
ஊரின் பல பகுதிகளில் வளர்ந்து நிற்கும் பழைமையான ஆலமரங்கள், அரச மரங்கள், நாவல் மரங்கள் உள்ளிட்ட மரங்கள் பல உயிரினங்களுக்குத் தங்குமிடமாக உள்ளன. குறிப்பாக, நூற்றுக்கணக்கான வவ்வால்களும் பல்வேறு பறவைகளும் இந்த மரங்களைச் சார்ந்து வாழ்கின்றன.
கோவை கிட்டாம்பாளையம்
விழாக் காலங்களில் எழும் பட்டாசு வெடிச்சத்தம் மனிதர்களுக்கு சில நொடி பரவசத்தை கொடுக்கலாம். ஆனால், அதே சத்தம் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை ஏனோ பலரும் நினைப்பதில்லை.
இந்தத் திடீர் அதிர்வுகளால் அவை தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளி யேறுவதுடன், கூடுகளில் இருக்கும் குஞ்சு களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்தப் பாதிப்புகளை, கிட்டாம்பாளையம் கிராம மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதுமட்டுமல்ல, தங்களுடைய கொண்டா ட்டத்தால் மற்ற உயிர்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று முடிவும் செய்தனர்.
அந்த முடிவு இன்றுவரை மாறாமலும் தொடர்கிறது… ஒரு தலைமுறை எடுத்த முடிவை அடுத்த தலைமுறையும் ஏற்றுக்கொண்டு வருவது இந்தக் கிராமத்தின் தனித்துவமாக மாறியிருக்கிறது.
வெடிச்சத்தம் பறவைகளையும், வவ்வால்களையும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறையை பின்பற்றுவதாக அவர்கள் தெரிவிக்கின்ற னர். ஒரு பண்டிகைக்காக மட்டும் பட்டாசு களைத் தவிர்ப்பது எளிது. ஆனால், ஊரின் ஒட்டுமொத்த நிகழ்வுகளிலும் அதே கொள்கையைக் கடைப்பிடிப்பது என்பது அந்த மக்களின் வாழ்க்கையோடு இயற்கைப் பாதுகாப்பு எந்த அளவுக்கு இணைந்திருக்கிறது என்பதைக் காட்டு கிறது.
குழந்தைகளிடம் தொடங்கும் மாற்றம்
பட்டாசு வெடிப்பது குழந்தைகளுக்கு இயல்பாகவே ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. வண்ண வண்ண மத்தாப்புகள், சத்தமாக வெடிக்கும் பட்டாசுகள் எனத் தீபாவளியின் மகிழ்ச்சியை அவர்கள் தங்க ளுக்கான விதத்தில் எதிர்பார்ப்பார்கள். ஆனால், கிட்டாம்பாளையத்தில் வளரும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியின் இன்னொரு முகம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தங்களைச் சுற்றி வாழும் பறவைகளும், உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டி யவை என்பதைச் சிறு வயதிலேயே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அத னால் பட்டாசுகள் இல்லாத தீபாவளி அவர்களுக்குப் பழக்கமான ஒன்றாகவே இருக்கிறது.
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லியம்மன் கோயில் தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் (Fruit Bats) தங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இதைக்காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் இருந்த இந்த வவ்வால்கள் நாளடைவில் குறைந்து கொண்டே வந்ததால், கிராம மக்கள் ஒன்று கூடி இவற்றைப் பாதுகாக்க முடிவெடுத்தனர். இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனைப்படி, அன்று முதல் பட்டாசு வெடிப்பதை இக்கிராமத்தில் முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.
நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்களில் சில அழிந்த நிலையில், புதிதாக இலுப்பை, வேம்பு, புளியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை கடந்த பத்தாண்டுகளில் வளர்த்து தோப்பாக மாற்றியுள்ளனர்.
இரவில் கல்வராயன் மலைப் பகுதிக்கு இரை தேடி சென்றுவிட்டு, காலையில் வந்து தங்கும் வவ்வால்களை கிராம மக்கள் யாரும் துன்புறுத்துவது இல்லை. தொடக்கத்தில் வவ்வால்களை வேட்டையாடி வந்த கும்பலைக் கூட, கிராம பொதுமக்கள் விரட்டி அடித்து விட்டனர். இந்த பழந்தின்னி வவ்வால்களை தங்களின் வளத்தைப் பெருக்கும் பாதுகாவலர்களாக நினைக்கின்றனர் அடரி கிராம மக்கள்.
திட்டக்குடி வட்டம், கொரக்கை கிராமத்தில் உள்ள சாந்தப்ப அய்யனார் கோயில் அருகில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த புளியன்மரத்தில், அரிய வகை பழந்தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. கிராமத்திலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ள அப்பகுதியிலும் பட்டாசு வெடித்தல், ஒலி எழுப்பும் செயல்களை கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராமத்திலும், நூற்றாண்டு பழைமையான பெரிய மரம் ஒன்றில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராம மக்கள், இந்த வவ்வால்களுக்காக, பட்டாசு வெடிப்பதே கிடையாது. இதை ஒரு கிராம கட்டுப்பாடாகவே வைத்திருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் கவுதாசபுரம் கிராமத்தில்
500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் ஏரிக்கரையில் இருந்த பழைமையான மாமரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றன. வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிப்பதில்லை.
