டெல் அவிவ், அக். 31- இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான 99 சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை.
இந்த தேர்தலில் அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அவர்கள் உருவாகியுள்ளனர்.
மொத்தமுள்ள 120 இடங்களைக் கொண்ட இஸ் ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு நேற்று (30.10.2026) அதிகாலை (இந்திய நேரம்) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 53 இடங் களிலும், முன்னாள் ராணுவ தலைமை தளபதி காடி அய்சன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார்கள், பிழைகள் போன்றவை திருத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வருகின்ற நவ. 4 ஆம் தேதி இஸ்ரேல் அதிபர் அய்சக் ஹெர்சோகிடம் சமர்ப் பிக்கப்படும். அதன்பின்னர், தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆட்சியமைக்கத் தகுதியான தலைவரை அதிபா் அழைப்பார். புதிய பிரதமர் வருகின்ற நவ. 10 ஆம் தேதி பதவியேற்ற பிறகு, குறிப்பிட்ட காலத்துக்குள் நாடாளுமன் றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இந்த நிலையில், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அரபு கட்சிகள் உருவாகியுள்ளன.
நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணியும் அரபு கட்சிகளும் இணைந்தால் 67 உறுப்பினா்களின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்க்கட்சி கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ‘அரபு கட்சிகளின் ஆதரவுடன் அமையும் எந்தவொரு அரசும் நாட்டுக்கு ஆபத்தானது’ என்று பெஞ்சமின் நெதன்யாகுவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகி யிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஒருவேளை எந்தத் தலைவ ராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத் தோ்தலைச் சந்திக்க நேரிடும்.
