ஆகஸ்ட் முதல் வாரத்தில் எனது இணையர் செல்வம், “ஜப்பான் மாநாட் டிற்குச் செல்ல இருவருக்கும் முன்பதிவு செய்துள்ளேன்” என்று கூறினார். எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி! அதற்கு முன்பாக ஜப்பான் மாநாடு குறித்து ‘விடுதலை’யில் செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன. ஜூலை மாதம் மதுரை சுப.முருகானந்தம் மகனின் இணையேற்பு விழாவிற்காக நாங்கள் மதுரை சென்றி ருந்தோம். அப்போது நான், கவிதா, தேன்மொழி ஆகிய மூவரும் தோழர் வி.சி.வில்வத்தை நேரில் சந்தித்து விசாரித்தோம்.
ஜப்பான் பயணத்தில் ஏமாற்றம்!
எனது இணையரும் பயணத்தை உறுதி செய்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேநேரம் நாள்கள் நெருங்க, நெருங்கப் பயமும் ஏற்பட்டது. காரணம், உடல்நிலை சரியில்லாத நிலையில், அங்குள்ள குளிரைத் தாங்க முடியுமா? என்று தோன்றியது. மற்றவர்களுக்கு ஏதேனும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவேனோ என்கிற அச்சமும் எழுந்தது.

நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அக்டோபர் 9ஆம் தேதியும் வந்தது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து, சென்னையில் இருந்து புறப்படத் தயாரானோம். பிறகுதான் ஜப்பான் நாட்டிற்கு ஆசிரியர் எங்களுடன் வரவில்லை என்கிற செய்தி தெரிந்தது. அதற்கு முன்னதாக அளவில்லாத மகிழ்ச்சியில் இருந்தேன். “ஆசிரியருடன் பயணம் செய்யப் போகிறோம்” என்பதும், “அயல்நாடு ஒன்றில் ஆசிரியருடன் மாநாட்டில் பங்கேற்கப் போகிறோம்” என்பதும் அளவு கடந்த மகிழ்ச்சி யாக இருந்தது. ஆனால் ஆசிரியரின் உடல்நிலைக் காரணமாக அவர் வரவில்லை என்கிற செய்தி அறிந்து மிகவும் வருத்தமாக இருந்தது. எனினும் அய்யாவின் உடல்நிலை தானே நமக்கு முக்கியம். நமக்கு மட்டுமில்லை, இந்த நாட்டிற்கும் முக்கியம் என்று அறிந்து எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
சென்னை – டோக்கியோ விமானப் பயணம்!
விமான நிலையத்திற்கு எங்களை வழியனுப்ப வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவித்து வாழ்த்தினர். சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பலரும் வழியனுப்ப வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரையும் பார்த்ததும் எனக்கு உற்சாகமும் கிடைத்தது. விமான நிலையத்திற்குள் எல்லாம் ஏற்பாடுகளும் முடிந்து விமானத்திலும் ஏறி அமர்ந்தோம். விமானம் ஒன்றேகால் மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. எனினும் பயணத்தை நான் இரசித்துக் கொண்டே சென்றேன். காலையில் சிங்கப்பூரில் இறங்கினோம். எங்களுக்காக “டோக்கியோ” செல்லும் விமானம் காத்துக் கொண்டிருந்தது. மிக, மிக அவசரமாகச் சென்று விமானத்தில் ஏறினோம். நாங்கள் 30 பேர் கொண்ட குழு என்பதால் விமானம் எங்களுக்காகக் காத்திருந்தது.
ஜப்பானில் மாலை 4 மணிக்கு “ஹனேடா” விமான நிலையத்தில் இறங்கி, பரிசோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே வரும்போது 6 மணி ஆகிவிட்டது. ஜப்பான் சென்றதும் பார்த்தால், ஓசூர் அளவிற்கான குளிர்தான் இருந்தது. எனவே, நான் பயந்தவாறு தட்பவெப்பம் இல்லை. விமான நிலையத்தில் எங்களை வரவேற்கத் தோழர்கள் கமலக்கண்ணன், கோவிந்தபாசம், பிரதிக், பிரபு, சந்தீப், சிவா உள்ளிட்ட தோழர்கள் வந்திருந்தனர். எங்களை அழைத்துச் செல்வதற்காகப் பேருந்தும் காத்திருந்தது. எங்கள் அனைவரையும் பேருந்தில் ஏற்றித் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். பேருந்தில் செல்லும் போது அதில் இருந்த ஒலிபெருக்கியில் தோழர் கமலக்கண்ணன் குறித்து விரிவான அறிமுகத்தை வி.சி.வில்வம் எங்களுக்குத் தெரியப்படுத்தினார். பின்னர் ஒரு வார காலம் நமது பயணத் திட்டம் என்ன என்பதை கமலக்கண்ணன் அழகாக விளக்கினார்.
வாழ்க்கையில் நான் அனுபவித்ததில்லை!
பிறகு “ஸ்மைல்” என்கிற விடுதிக்கு வந்தோம். 2024ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்களும் இங்குதான் தங்கி இருந்தார்கள் என்கிற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். நாள்தோறும் ஒவ்வொரு இடத்திலும் தமிழ்நாடு உணவுகள் கிடைத்தன. ஒவ்வொரு உணவக உரிமையாளர்களும் அவ்வளவு அன்போடு கவனித்துக் கொண்டார்கள். அக்டோபர் 11, ஞாயிறு மாலையில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஆசிரியர் அவர்கள் காணொலியில் பேசினார். காலையில் தொடக்கவுரையும், மாலையில் மாநாட்டுச் சிறப்புரையும் இருந்தது. மாநாட்டில் பேசிய அனைவருமே சிறப்பாக உரையாற்றினார்கள். இனிதே சிறப்பாக மாநாடு முடிந்தது!

இந்த மாநாட்டிற்காக 5 மாதங்களாக உழைத்தத் தோழர்கள் அனைவரையும் மனமாரப் பாராட்டுகிறோம்! மாநாடு முடிந்த அன்று இரவு எங்கள் அனைவருக்கும் ஜப்பானிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய சிறீநிதி மற்றும் விஜய் ஆகிய இருவரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் பாடிக் கொண்டிருக்கும்போது நாங்கள் உணவு சாப்பிட்டோம். அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதுபோன்ற வாழ்க்கையை நான் அனுபவித்ததில்லை. மிகவும் சிறப்பாக இருந்தது.
புல்லட் இரயிலில் பயணம்!
அடுத்த நாளில் இருந்து பிறகு சுற்றுலாப் பயணம் தொடங்கியது. முதலில் மிகப் பெரிய பூங்காவிற்குச் சென்றோம். அடுத்து ஒடைபா எனும் இடத்திற்குச் சென்றோம். அது கடலின் உப்பங்கழி அல்லது பின்நீர் (Sea Backwaters). தொடர்ந்து டீம்-லேப்ஸ் எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு சென்று வந்த பிறகு ஒவ்வொருவருக்கும் 20 வயது குறைந்துவிடும் என வி.சி.வில்வம் கூறினார். அவ்வளவு அழகும், பிரமிப்பும் அங்கு இருந்தது. 2024ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்களும் அந்த இடத்தைப் பார்த்து மிகவும் விரும்பியதாகக் கூறினார்கள்.
அடுத்து “ஸ்கை ட்ரீ டவர்” பார்த்தோம். உயரத்தில் இருந்து டோக்கியோ நகரம் முழுவதும் தெரிந்தது. எங்களை அது வியப்பில் ஆழ்த்தியது. அடுத்த நாள் புகழ்பெற்ற “மவுண்ட் ஃபுஜி” சென்றோம். செல்லும் வழியெல்லாம் கிராமங்களைப் பார்த்துச் சென்றோம். அந்த மலை உயரத்தில் மட்டும் நல்ல குளிராக இருந்தது. குளிர் தாங்க முடியவில்லை. இடம் மிக அருமையாக இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த எரிமலை வெடித்துள்ளது. பிறகு ஒரு கிராமத்தில் இறங்கி சுற்றிப் பார்த்தோம். திரும்பி வரும் போது “புல்லட்” இரயிலில் வந்தோம். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
விமான நிலையத்தில் ஆசிரியர்!
மறுநாள் ஒரே விலைக்கடை என்று சொல்லக் கூடிய, அதாவது எந்தப் பொருளை எடுத்தாலும் ஒரு குறிப்பிட்ட விலை தான், (100 யென் ஷாப் – 100 yen shop) – அங்கு அழைத்துச் சென்றார்கள். தோழர்கள் அனைவரும் பிஸ்கட், சாக்லேட், வீட்டு உபயோகப் பொருள்கள் என கணிசமாக வாங்கினர். நாங்கள் தமிழ்நாடு திரும்பும் வரையிலும் எங்களை அன்போடு வழிநடத்திய ஜப்பானியத் தோழர்கள் ரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம், வி.குன்றாளன் – அவர்களோடு இணைந்த தோழமைக்குரிய தன்னார்வலர்கள் என ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை விமான நிலையம் நிலையத்தில் எங்களை வரவேற்க, ஆசிரியர் அய்யா வந்ததை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தலைவரை வரவேற்கத் தொண்டர்கள் வருவார்கள். ஆனால், இங்கே தொண்டர்களை வரவேற்கத் தலைவர் வந்திருந்தார். ஆசிரியரைக் கண்டதும் அளவில்லாத மகிழ்ச்சி! ஒவ்வொருவருக்கும் பயனாடை அணிவித்து இனிதே வரவேற்றார்கள். ஒவ்வொருவரும் இனிதே இல்லம் திரும்பினோம். ‘பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்’ என்பதற்கு ஜப்பான் மாநாடு ஒரு எடுத்துக்காட்டு!
ஜப்பானிய நடைமுறையும்! பெரியார் கொள்கையும்!
ஜப்பானில் ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் வாழ்க்கை அமைந்துள்ளது. மதிப்போடும், சுயமரியாதையோடும் பெண்கள் வாழ்கிறார்கள். ஒரு நிமிடம் கூட நேரம் தவறுவதில்லை. அந்தளவு நேரத்தைப் பின்பற்றுகிறார்கள். அதேபோல பொதுவிதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்கிறார்கள். மிகக் குறைந்த போக்குவரத்தில் வாகனமற்ற சாலைகளில் நடக்கும் போதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுகிறார்கள். பொது இடங்களில் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வாகனத்திற்கும் இடையிலும் நல்ல இடைவெளி இருக்கிறது. அதிகமாக மிதிவண்டியைப் பயன்படுத்துகிறார்கள். தந்தை பெரியார் கொள்கையில் நாம் படித்தவற்றை நேரில் ஜப்பானில் பார்த்துத் திரும்பினோம்!
