டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆவின் பால் பொருட்களின் விலை இன்று முதல் கடும் உயர்வு! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின், நெய், வெண்ணெய் உள்ளிட்ட 67 பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது; புதிய விலைகள் அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருகின்றன. 500 கிராம் நெய் விலை ரூ.320–ரூ.325 ஆகவும், 500 மி.லி. தயிர் ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது; கூடுதல் வருவாயில் 90% உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என ஆவின் தெரிவித்துள்ளது.
* நவம்பர் 1 டில்லி பேரணியை தடுக்க அரசு சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு! நவம்பர் 1-ஆம் தேதி டில்லியில் நடைபெற உள்ள பேரணியை தடுக்க, எஸ்.அய்.ஆர் நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை அல்லது பிரதமர் மோடி அவரைப் பதவியிலிருந்து நீக்கும் வரை போராட்டம் தொடரும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தலைமைத் தேர்தல் ஆணையர் விலகும் வரை அல்லது அவரை பிரதமர் நீக்கும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி! எஸ்.அய்.ஆர். நடவடிக்கையில் வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கான பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரத்திற்கு எதிர் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு! பீகார் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்க மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஸ்டிங் ஆபரேஷனில்’ பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்: சித்தராமையாவை சந்தித்ததே இல்லை! சித்தராமையாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அவரை மிரட்டும் நோக்கில் காணொலி போலியாகத் தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். அக்டோபர் 6-ஆம் தேதி அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி இந்து:
* வந்தே மாதரம் தொடர்பான மனுக்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! ஆறு சரணங்களை கொண்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுமாறு மக்களைக் கட்டாயப்படுத்தும் அரசாணைகளை எதிர்த்து, பூலே–அம்பேத்கரிய சிந்தனையாளர் மற்றும் கேரளாவின் முன்னாள் அதிகாரி தாக்கல் செய்த மனுக்களுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட மதத்தின் தெய்வங்களைப் போற்றும் பாடலைத் தேசியப் பாடலாகத் திணிப்பது மதச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
* மருந்து விலையை விட மக்களின் உயிரே முக்கியம்: உச்சநீதிமன்றம்! மருந்துகளின் விலையை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசின் அணுகுமுறையை உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. எந்த மருந்து அத்தியாவசியமானது, எது அத்தியாவசியமற்றது என்பதை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி மேத்தா, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) செயலற்ற நிலையில் இருப்பதாக கவலை தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
* “ஏமாற்றும், வஞ்சகமான, இரட்டை வேடம் கொண்ட” – தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரம், காங்கிரஸ் விமர்சனம். எஸ்.அய்.ஆர், தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. படிவம் 6 தொடர்பான மாறுபட்ட நிலைப்பாடுகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் ஒருதலைப்பட்ச முடிவுகள், ECINET மற்றும் தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘பிரேக்கிங் பேட்’ தொடர்ந்து ‘பிரிசன் பிரேக்’ – 17 கைதிகள் தப்பியதை சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலின் விமர்சனம்! தமிழ்நாட்டில் 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பியதை தொடர்ந்து, “பிரேக்கிங் பேட் தொடரில் தொடங்கி, இப்போது தமிழ்நாட்டில் ‘பிரிசன் பிரேக்’ தொடங்கிவிட்டது!” என்று எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் பதிவு. பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தனை கைதிகள் எப்படித் தப்பினர் என்றும் கேள்வி.
– குடந்தை கருணா
