பகுத்தறிவாளர்கள் படித்துத் தொலைக்க வேண்டியுள்ளது – என்ன செய்வது?

7 Min Read
- Advertisement -

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் பற்றியும், அவற்றின் புராண அளப்புகள் பற்றியும் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிறீமத் பாகவத புராணத்தின் படி பெருமாள் எடுத்தது 10 அவதாரங்கள் கிடையாது. பெருமாள் எடுத்தது மொத்தம் 24 அவதாரங்கள்.

பெருமாள் எடுத்த 24 அவதாரங்கள் எவை, அவற்றில் பலரும் அறியாத சிறப்பான அவதாரங்கள் எவை, பெருமாளை எப்படி வழிபட வேண்டும், பெருமாள் நாமங்களை சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெருமாளின் அவதாரங்கள் என்றதுமே அனை வருக்கும் நினைவிற்கு வருவது தசாவதாரங்கள் தான். பெருமாள், தசாவதாரங்கள் எனப்படும் 10 அவதாரங்கள் எடுத்துள்ளார் என்பார்கள். இவற்றில் ஒன்பது அவதாரங்கள் ஏற்கனவே எடுத்து விட்டார். பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை கலியுகத்தின் முடிவில் எடுப்பார். பெருமாள், கல்கி அவதாரம் எடுத்த உடன் உலகம் அழிந்து விடும் என பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

“எப்போது எல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போது எல்லாம் தர்மத்தை மீண்டும் ஸ்தாபனம் செய்வதற்காக நான் யுகம்தோறும் அவதாரம் எடுப்பேன்” என பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த கூற்றின் படி பார்த்தால் தர்மத்தை காப்பதற்காக பெருமாள் 10 அவதாரங்களை மட்டும் தான் எடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படி பெருமாள் யுகம்தோறும் அவதாரம் எடுத்திருந்தால் இதுவரை எத்தனை அவதாரங்களை அவர் எடுத்துள்ளார்? புராணங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மை என்ன என்பதை விளக்குகிறார் சாஸ்திர சம்பிரதாய ஆன்மீகப் பேச்சாளர் – ஜோதிடர் டாக்டர். சிறீரங்கத்து கோவிந்த பட்டர்.

பெருமாள் எடுத்த 10 அவதாரங்களுடன் சேர்த்து, அவர் மொத்தமாக 24 அவதாரங்கள் எடுத்துள்ளார். இது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. நாம் கொண்டாடுவது பெருமாளின் 10 அவதாரங்களைத் தான். கலியுகத்தில் பெருமாள் கல்கி அவதாரம் எடுப்பார். அவர் அவதாரம் எடுத்ததும் உலகம் அழிந்து விடும் என்பது உண்மை தான். இது ஒரு புறம் இருக்கட்டும். சிறீமத் பாகவத புராணத்தின்படி, பெருமாள் எடுத்த 24 அவதாரங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  1. ஆதிபுருஷர் – பிரம்மாவை தோற்றுவித்தவர், 2. சனகாதி முனிவர்கள் (நான்கு குமாரர்கள்: சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்), 3. நாரதர், 4. நர-நாராயணர் 5. கபிலர் 6. தத்தாத்ரேயர் 7. யக்ஞர் 8. பிருது 9. ரிஷபதேவர் 10. அம்சம் 11. ஹயக்ரீவர் 12. மச்ச அவதாரம் 13. கூர்ம அவதாரம் 14. மோகினி அவதாரம் 15. தன்வந்திரி 16. நரசிம்மர் 17. வாமணர் 18. வியாசர் 19. பரசுராமர் 20. சிறீராமர் 21. பலராமர் 22. கிருஷ்ணர் 23. புத்தர் 24. கல்கி

பெருமாள் எடுத்த 24 அவதாரங்களில் ஒன்றான தத்தாத்ரேயர் அவதாரம் பற்றி பலருக்கும் தெரியாது. பெருமாளின் சிறப்புமிக்க அவதாரங்களில் இவரும் ஒருவர். சவுராஷ்டிர சமூக மக்களின் கடவுளாக திகழ்பவர் இவரே. தத்தாத்ரேயர், ரங்கநாதர் மீது தீராத பக்தி கொண்டவர். இவர் ரங்கநாதர் மீது ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார். ஒருமுறை தஞ்சையில் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. வறட்சியால் விளைச்சல் இல்லாமல் போனதால் மக்கள் அடுத்த உணவிற்கே கஷ்டப்பட்டனர். எவ்வளவோ யாகங்கள் உள்ளிட்ட பல பரிகாரங்கள் செய்தும் மழை வரவில்லை. அப்போது ஒருவர் சிறீரங்கத்தில் இருக்கும் தத்தாத்ரேயர் பற்றி சோழ மன்னனிடம் சொல்கிறார். அவர் பாடினால் நிச்சயம் மழை வரும் என்கிறார். மன்னனும், தத்தாத்ரேயரை வந்து பார்க்கிறார். ஆனால் தத்தாத்ரேயரோ, ரங்கனை விட்டு நான் எங்கும் வர மாட்டேன் என உறுதியாக சொல்கிறார்.

இருந்தாலும் மக்கள் தவிப்பதைக் கண்டு மனம் இரங்கிய தத்தாத்ரேயர், “வேண்டுமானால் நான் இங்கிருக்கும் காவிரியில் நின்று பாடுகிறேன். அங்கே மழை வரும்” என்கிறார். மன்னரும் அதை ஏற்றுக் கொள்கிறார். சொன்னபடியே சிறீரங்கத்து காவிரியின் நின்று தத்தாத்ரேயர் ரங்கனை நினைத்துப் பாடுகிறார். தஞ்சையில் மழை கொட்டுகிறது. காவிரியில் பெரும் வெள்ளம் வருகிறது. இதைப் பார்த்த மன்னன் ஓடி வந்து, “உங்கள் பாட்டால் மழை பெய்து இப்போது வெள்ளம் ஏற்பட்டு விட்டது. நீங்கள் பாடி, மழையை நிறுத்துங்கள்” என்கிறார். தத்தாத்ரேயரும் பாடி, மழையை நிறுத்துகிறார். சிறீரங்கம் கோவிலில் சவுராஷ்டிர சமூகத்தினருக்கு தனி மரியாதை. பட்டுநூல்காரர் என்று அவர்களுக்கு பெயர்.

பெருமாளின் மற்றொரு சிறப்புமிக்க அவதாரம் தன்வந்திரி அவதாரம். ஒருமுறை ரங்கநாதர், ராமானுஜரை அழைத்து, “பக்தர் ஒருவர் எனக்கு நெல்லிக்காய் சாதம் நைவேத்தியம் படைத்து வழிபட்டார். அது எனக்கு ஜீரணம் ஆகவில்லை. அஜீரணக் கோளாறாக உள்ளது. வயிறு சரியில்லை மருத்துவரை அழைத்து வா” என்கிறார். திகைத்துப் போன ராமானுஜர், “உலகைக் காக்கும் பகவானுக்கு வந்த நோயை சரியாக்க வைத்தியரா? அவரை நான் எங்கு போய் தேடுவேன்?” என்கிறார். “நீ எங்கும் செல்ல வேண்டாம், தன்வந்திரியாக அவதாரம் எடுத்து எனக்கு நானே வைத்தியம் செய்து கொள்வேன். நீ தன்வந்திரிக்கு சன்னதி அமைக்கும் வேலைகளை செய்” என்கிறார் ரங்கநாதர்.

சொன்னபடியே தன்வந்திரி ரூபம் எடுத்து வந்து, தன்னுடைய கையில் இருக்கும் அட்டைப்பூச்சியால் பெருமாளுக்கு ஏற்பட்ட அஜீரணக் கோளாறை சரி செய்கிறார். இன்றும் சிறீரங்கத்தில் பரமபத வாசல் அருகில் ராமானுஜரால் அமைக்கப்பட்ட சன்னதியில் அருள்பாலித்து வருகிறார், தன்வந்திரி பகவான். அடிக்கடி ஏதாவது நோயால் பாதிப்பிற்கு உள்ளாபவர்கள் இங்கு வந்து தன்வந்திரி பகவானை வணங்கி, “ஓம் நமோ தன்வந்திரியே நமோ நமஹ” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். டைமண்ட் கற்கண்டு வாங்கிக் கொடுத்து, உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வந்தால் நோய்களில் இருந்து படிப்படியாக நிவர்த்தி பெற முடியும். சிறீரங்கத்தில் மடப்பள்ளியில் இன்றும் தன்வந்திரி பகவான் இருப்பதாக நம்பப்படுகிறது.

பெருமாளுக்குக் கருணாகரன் என்னும் திருநாமம் உண்டு. அவர் கருணையே வடிவமானவர். நாம் ஒரு தவறு செய்து விட்டால், என்னுடைய பக்தன் தானே என்று திருந்துவதற்காக அவகாசம் கொடுப்பார். அதிலிருந்தும் நாம் திருந்தவில்லை என்றால் சாட்டையால் அடிப்பார்;  பெருமாளிடம் பயபக்தியுடன் வழிபாடு செய்ய வேண்டும் என் பார்கள். ஆனால் பெருமாளிடம் பயம் வேண்டாம்;  உண்மையான பக்தியுடன் வழிபட்டாலே, உடனடியாக மனம் இரங்கி, ஓடி வந்து அருள் செய்வார்.

பலரும் ஜாதகம் சரியில்லை, திருமணம் தடைபடுகிறது; திருமணம் தாமதமாகிறது என பல குறைகளையும் சொல்லி புலம்புவார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: “பொருள்:

“அனைத்து தர்மங்களையும் (கடமைகளையும் பலன்களையும்) என்னிடம் அர்ப்பணித்துவிட்டு, சரணடைவாய்! நான் உன்னை எல்லா பாவங் களிலிருந்தும் விடுவித்து மோட்சம் அளிப்பேன்; நீ கவலைப்படாதே.”

இது பகவான் சிறீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய சரணாகதி தத்துவத்தின் மிக முக்கியமான வரிகளாகும்.

பகவத் கீதையில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லிப் பெருமாளின் திருவடியில் சரணடைந்து விட்டால் நம்மைக் காப்பதற்கு அவர் தயாராக உள்ளார். பக்தன் எப்போது என்னை அழைப்பான், ஓடிச் சென்று அவனுக்கு அனுக்கிரகம் பண்ணலாம் என பகவான் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நாம் தான் முறையாக அவனை சரணடைந்து, நம்பிக்கையுடன் அழைப்பது கிடையாது. கூப்பிடுவது தான் நம்முடைய வேலை. அதனால் தான் கோவிந்தா, கோபாலா, நாராயணா என அவரவருக்கு விருப்பமான பலவிதமான பெயர்களைச் சொல்லி பகவானை பெரியவர்கள் அழைத்தார்கள். யார் என்ன நினைத்து, எப்படி அழைக்கிறாரோ, அப்படிச் சென்று அருள் செய்யக் கூடியவர் பெருமாள்.

நம்மால் கோவிலுக்குச் செல்ல முடிகிறதோ இல்லையோ, ஆனாலும் பகவானின் நாமத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக தான் பலருக்கும் சுவாமியின் பெயர்களை சூட்டுகிறார்கள். கலியுகத்தில் இறைவன் நாமம் பாராயணம் ஒன்று தான் பாவங்களில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கக் கூடியது. அடுத்த பிறவி இல்லாமல் ஆக்கக் கூடியதும் நாமங்கள் தான். வாழ்வில் துன்பங்களைப் போக்கி ஏற்றம் தரக் கூடியது கோவிந்த நாமம் மட்டுமே. அனைவரும் கஷ்டம் இருக்கிறது என சொல்கிறார்களே தவிர ராம நாமத்தையோ, கோவிந்த நாமத்தையோ யாரும் சொல்லுவது கிடையாது. துன்பம் வரும் போதெல்லாம் இறைவனின் நாமங்களை நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

– கட்டுரையை வழங்கியவர்:
டாக்டர் சிறீரங்கத்து கோவிந்த பட்டர்,
சாஸ்திர சம்பிரதாய ஆன்மீகப் பேச்சாளர்,

-‘சமயம்’ தமிழ் இணையதளம், நாள்: 21.10.2026

இப்படியொரு புருடாவைக் கிளப்பி விடு கிறார்கள். கடவுளுக்கே அஜீரணக் கோளாறாம். அந்தக் கோளாறை சரி செய்ய, அந்தக் கடவுளே தன்வந்திரி அவதாரம் எடுத்து சரி செய்து கொள்வாராம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, ‘கேட்பவன் கேனையனாக இருந்தால், எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்’ என்ற புதுமொழிதான் நினைவிற்கு வருகிறது.

வைணவர்கள் கட்டிவிடும் இந்தக் கதையை ஸ்மார்த்தர்கள் ஏற்பார்களா என்பது சுவை மிகுந்த கேள்வியாகும்.

வைணவர்களுக்குள்ளேயே வடகலை, தென்கலை சண்டை சந்தி சிரிக்கிறது.

விஷ்ணு எடுத்தது பத்து அவதாரமா? 24 அவதாரமா? முதலில் வைணவக் குல மே(ல்)தாவிகள் முடிவு செய்யட்டும்!

இதை எல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியுள்ளது. மூடபக்தர்களின் மூளையைப் பழுதுபார்க்கப் பகுத்தறிவாளர்கள் படித்துத்தானே ஆகவேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *