21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!

3 Min Read
- Advertisement -

தந்தை பெரியாரின் 119-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் 1997-ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பழனியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவில் (அன்றைய பொதுக் குழுவின் பெயர்) திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய உரையின் சில பகுதிகள்:

“விடுதலையை இண்டர்நெட்டில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்துப் பயன்பெறுகிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டை பெரியார் நூற்றாண்டாக்கிடும் திட்ட இலக்கோடு செயல்படும் நாம் தற்காலத்தில் கற்காலத்தைத் தாண்டி, பொற்காலப் புது யுகத்தினை மக்களுக்கு உழைக்க உறுதி பூண்டு ஓய்வறியா உழைப்பினை – தன்னலம் துறந்த தொண்டறத்தினை, பதவி, புகழ் வேட்டை அறியாக் களப்பணியை முன்னாலே நிறுத்துவதில் சிறப்பான வகையில் மக்கள் ஆதரவினைப் பெற்று வருகிறோம்.

கொள்கை பலமற்ற மனித குலத்தினை கூறுபோடுவோர், அவர்களின் இயக்கத்தை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்கின்ற நிலையில், மனித நேயத்தினையே மய்யப்படுத்தியுள்ள அரிய தத்துவ மாமலை பெரியார் தம் தத்துவத்தை உலகளாவச் செய்திட நாம் உழைப்பதுதானே நியாயம். பெரியார் விட்ட பணி முடிக்க எடுத்த சூளுரையில் உண்மையான செயலாக்கமாகவும் இருக்க முடியும்!

இதற்கு முன் இருபதாம் நூற்றாண்டில் பெரியார் தேவைப்படுவதை விட, 21-ஆம் நூற்றாண்டில்தான் அதிகம் தேவைப்படுவார் – பெரியார் என்பது ஒரு வாழும் மானுடவியல் தத்துவம் – மனித குலத்தின் மகத்தான விடிவு. அதனை உருவாக்கிட நாம் எதையும் கட்டுப்பாடு காத்து பழமைவாதச் சக்திகளுடன் ஜாதி – மத பேத மூடத்தனத்தின் முகவர்களை எதிர்த்து முழுப் போரை நடத்திட ஆற்றல் பெற்று பெரியாரின் இராணுவமாக ஆகிட வேண்டும்.

21-ஆம் நூற்றாண்டினை பெரியார் நூற்றாண்டாக்கிட உழைப்பதில் உங்களைப் போலவே நானும் எனது பங்கினை இறுதிமூச்சு அடங்கும்வரை கொடுப்பதற்கு மிகுந்த திடச் சித்தத்துடன் பணியாற்றிடவே உறுதி பூண்டு உழைக்கிறேன்.

பின்னர் ஏன் தயக்கம்? நிறைந்தும் விரைந்தும் செயல் செய்தால் ஞாலம் கூடும். உலகம் பெரியார் மயமாகிவிடுமே!

உலக நாடுகளின் பல முக்கிய நகர்கள் பவ்லவற்றிலும் வருங்காலத்தில் இத்தகைய புத்தகச் சந்தைகளும், பெரியார் தத்துவக் கருத்துக் கொள்கை பரப்பல்களும் நிகழும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளன”

என்று எடுத்துரைத்து, ‘‘இதற்கான பல்வேறு திட்டங்களையும், அச்சுப் புத்தகம் என்பதே பழமையாகிவிடும் என்பதால், அடுத்தடுத்த தொழில்நுட்பத்தைக் கைக் கொண்டு வெளியிடுவோம்’’ என்றும் முன்னோக்கான திட்டங்களை அடுக்குகிறார்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் அந்த உரை நிகழ்த்தப்பட்ட 30-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த 30 ஆண்டுகளில் இந்தத் திசையில் எத்தகைய பயணத்தை நாம் மேற்கொண்டுள்ளோம் என்பது ஊக்கம் தருவதாகவே அமைந்திருக்கிறது. புதிய தொழில் நுட்பங்களைக் கைக்கொண்டு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், பிற மொழியினரையும் சென்றடைகிறோம். உலக நாத்திகர் மாநாடுகள் தந்தை பெரியார் மண்ணில் நடைபெறுகின்றன. பல மொழிகளிலும் தந்தை பெரியாரின் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமேசான் தளத்தில் ஒரே நாளில் 50,000 பதிவிறக்கங்களைத் தந்தை பெரியாரின் புத்தகங்கள் பெற்றுச் சாதனை படைத்திருக்கின்றன. உலகின் பல நாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாக்களும், கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.

ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் என அய்ந்து பெரியார் பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டு, உலக அறிஞர்கள் தந்தை பெரியாரைக் குறித்து ஆய்வு செய்துள்ளனர். உலகின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் பெரியார் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், குவைத், பஹ்ரைன் நாடுகளில் பெரியாரைக் குறித்து தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி, தோழர்கள் விவாதிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற மேலவை, தந்தை பெரியாருக்குப் புகழாரம் சூட்டுகிறது, பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்துக்குப் பாராட்டு தெரிவிக்கிறது. பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கருத்துகளின் முக்கியத்துவத்தை இன்று உலக நாடுகள் விவாதித்துச் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்கின்றன.

பெரியார் என்பது மனிதகுலத்தின் மாமருந்து. அதை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கான விதைகளை விதைத்து, பயிர்களைக் காத்து இன்று அதன் அறுவடையைக் கண்டு வரும் ஆசிரியர் கி.வீரமணி, மேலும், புதிய களங் களிலும் பெரியாரியத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார்.

21-ஆம் நூற்றாண்டின் கால் பகுதியைக் கடந்திருக்கும் நாம், ஒரு நெடும்பாதையில் தொடரும் பயணத்தின் இடையில், தடம் மாறாமல் அப் பாதையில் கடந்திருக்கும் தொலைவையும், அதில் பதித்துள்ள மைல்கற்களையும் திரும்பிப் பார்க்கும் அரிமா நோக்கு, பெரியாரை உலக மயமாக்கும் இலக்கை அடைவதற்கான பயணத்தை இன்னும் வேகமாகவும், ஊக்கத்துடனும் நடத்தத் தூண்டுமன்றோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *