இந்தியா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி! டாலர் இருப்பை விற்கும் ரிசர்வ் வங்கி – ஜிடிபியிலும் பசிக் குறியீட்டிலும் பின்தங்கும் இந்தியா!

5 Min Read
- Advertisement -

மும்பை, அக்.26 இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு நெருக்கடியில் திணறி வருகிறது என்பதை அண்மையில்  நடந்த மூன்று  நிகழ்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 100-அய் தொடாமல் இருக்க அவற்றுள் முதன்மை யானது,  ரிசர்வ் வங்கியின் அதீத டாலர் விற்பனையாகும்.

மோடி ஆட்சியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது.  மோடி பதவியேற்ற பொழுது ரூபாயின் மதிப்பு 58ஆக இருந்தது. இன்று சுமார் 94 முதல் 96 வரை உயர்ந்துள்ளது. மோடி ஆண்ட 12 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு சுமார் 63% வீழ்ச்சியடைந்துள்ளது.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வேகமாக 100-அய் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அவ்வாறு ரூ.100 என்பதைத் தாண்டினால், இது பொருளாதார ரீதியான சரிவு என்பது மட்டுமல்ல; அரசியல் ரீதியாகவும் மோடி ஆட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவையும் உளவியல் அடிப்படையில் மக்களிடம் அதிருப்தியையும் விளைவிக்கும் என்று கருதி,  இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கியுள்ளது.

டாலர் இருப்பை விற்ற ரிசர்வ் வங்கி

ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, சிறப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 140 பில்லியன் டாலர் மூலதனத்தில் 50% அளவான சுமார் 70 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பு ரூ.5,56,000 கோடி) ரிசர்வ் வங்கி வெளிச்சந்தையில் விற்றுள்ளது. இது ஒட்டுமொத்த ரிசர்வ் வங்கியின் டாலர் இருப்பில் 7 முதல் 8% ஆகும். இதற்கு முன்பு 2008 உலகப் பொருளாதார நெருக்கடியின் பொழுது சுமார் 35 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி விற்றது. இப்பொழுது அப்படிப்பட்ட கூர்மையான நெருக்கடி இல்லை எனினும், ரிசர்வ் வங்கி இரு மடங்காக 70 பில்லியன் டாலர்களை விற்றுள்ளது. அதன் மூலம் ரூபாய் மதிப்பு சரிவு 100 வரை போகாமல் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தலையிடுவது வழக்கமானது தான் என்றாலும், இந்த அளவிலான பெரும் டாலர் தொகையை வெளிச்சந்தையில் விற்றதில்லை.

இப்பொழுது டாலருக்கு நிகரான ரூபாய் 94 முதல் 96 வரை இருந்தாலும், அது நீடிக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்  நிகழும் போர் அபாயம் குறித்த அச்சம் நிலவுகிறது. மறுபுறம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க முனைந்துள்ளது. இதன் விளைவாக ஏற்றுமதியில் சில சாதகங்கள் ஏற்பட்டாலும், இந்தியாவின் இறக்குமதி அதிகமாக இருப்பதால், லாபத்தைத் தேடி அலையும் நிதி மூலதனம் சார்ந்த அந்நிய முதலீடு வெளியேறும் சூழல் உருவாகும். இவை ரூபாய் மதிப்பில் மேலும் சரிவை விளைவிக்கும். இதனால் விலைவாசி உயர்வு, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, நிதிப் பற்றாக்குறை, முதலீடுகள் வெளியேற்றம் ஆகிய பாதிப்புகள் உருவாகும்.

இந்தியா தனது கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயரும். இந்திய ரூபாயைச் சரிவிலிருந்து தடுக்கும் எந்தத் திட்டமும் பா.ஜ.க. அரசாங்கத்திடம் இல்லை. அதற்கு நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகள் இருக்க வேண்டும். மேலும் விலை குறைவான எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து கைவிடுவதை நிறுத்த வேண்டும். ஆனால் இதனைப் பா.ஜ.க.விடம் எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கதேசத்தை விடப்
பின்தங்கும் இந்தியா

பன்னாட்டு நாணய நிதியம் (IMF) 2026-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, 2026-ஆம் நிதியாண்டில் வங்கதேசத்தின் தனிநபர் ஜிடிபி 2,911 அமெரிக்க டாலர்களாகவும், இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2,812 அமெரிக்க டாலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஜிடிபி. கணக்கில் மதிப்பிடும் பொழுது இரு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஒன்று ஒட்டுமொத்த ஜிடிபி, மற்றொன்று தனிநபர் சராசரி ஜிடிபி. இந்தியா ஒட்டுமொத்த ஜிடிபியில் வங்கதேசத்தை விட முன்னணியில் இருந்தாலும், தனிநபர் சராசரியில் பின்தங்கியுள்ளது. தனிநபர் சராசரி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்தத் தொகை கிடைக்கிறது என்பது பொருள் அல்ல. எனினும் ஒட்டுமொத்த ஜிடிபி., எவ்வாறு குடிமக்களிடையே விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.  (அவ்வாறு விநியோகிக்கப்படுவதற்கான சமத்துவச் சூழல் இந்தியாவிலும் இல்லை; வங்கதேசத்திலும் இல்லை. எனினும் தனிநபர் ஜிடிபி என்பது கணக்கில் கொள்ள வேண்டிய முக்கியக் குறியீடு.)

இதில் இந்தியா வங்கதேசத்தை விடப் பின்தங்கியுள்ளது எனவும், இது மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் மதிப்பிடுவது மோடி அரசாங்கத்தின் இன்னொரு பொருளாதாரத் திறமையின்மையைக் காட்டுகிறது. 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார். ஆனால் அமெரிக்கா அல்லது சீனாவுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக இந்தியா வங்கதேசத்துடன் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய வளர்ச்சியின் பலன்கள் பெரும் பகுதி வசதி படைத்தவர்களிடம் சேர்வது மட்டுமல்ல; மேலாண்மை, வறுமை, அமைதியின்மை ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தைக் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளன. இந்த நிலையை மாற்றும் எந்தத் திட்டமும் பா.ஜ.க. அரசிடம் இல்லை. ஏனெனில் அது ஒரு சில பெரும் பணக்காரர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் தந்தால் போதுமானது என நினைக்கின்றது.

இந்தியாவின் பசி குறியீடு

அண்மையில் வெளியிடப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான பன்னாட்டுப் பசி குறியீட்டில் மொத்தம் உள்ள 122 நாடுகளில் இந்தியா 100-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. பசி குறியீட்டைத் தீர்மானிப்பதற்குக் குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற எடை, 5 வயதுக்குள் குழந்தைகள் இறப்பு ஆகிய அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 9.8% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 29.3% பேர் வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் இருக்கிறார்கள். உயரத்திற்கேற்ற எடை இல்லாத குழந்தைகளின் விகிதம் 19% ஆக உள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக அதிகமுமாகும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.7% என உள்ளது.

பசிக் குறியீட்டில் இந்தியாவின் அண்டை நாடான சீனா மிகக் குறைவான தீவிரத் தன்மை கொண்ட நாடாக உள்ளது அது பசிக் குறியீட்டுத் தர வரிசையில் முதல் 24 வளர்ந்த நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. பசிக் குறியீட்டு மதிப்பெண் 5க்கும் குறைவாகவே உள்ளது.

இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகள் முறையே 10.2, 14.6, 19.2 மதிப்பெண்களுடன் 50,72,84ஆம்  இடங்களில் மிதமான தீவிரத் தன்மை கொண்டுள்ளன.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 24.1,  26.6, 28.6 மதிப்பெண்களுடன் 100, 106, 108 ஆகிய இடங்களைப பிடித்து தீவிரமான நச்சினை உள்ள நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுடனும் ஆப்கானிஸ்தானுடனும் இணைந்து தீவிரமான பசி கொண்ட நாடு என இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.  பசியும் வறுமையும் தீராமல் எப்படி இந்தியா வளர்ந்த நாடாக மாற இயலும்? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டு கடந்த 12 ஆண்டுகளில் தீவிரப்படுத்தப்பட்ட நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக இந்திய பொருளாதாரம் மக்களுக்கு ஏராளமான துன்பங்களைத் தந்துள்ளதாகவும்,  தற்போது இதனை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்றும் பொருளாதாரத்தைக் கூர்ந்து நோக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *