சென்னை, அக். 26- தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடப்பு நிதியாண்டின் (2026-2027) கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் மூலம் ரூ.12.36 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 2,900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று (25.10.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பின் முக்கிய அம்சங்கள்:
குட்கா மற்றும் ஹவாலா பணம்
ரயில்களில் கடத்த முயன்ற தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டு, ரூ.12.36 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ எடையுள்ள ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பெட்டி
சென்னை ரயில்வே கோட்டத்தில் மகளிருக்கான சிறப்புப் பெட்டிகளில் விதிமீறிப் பயணித்த 309 ஆண் களிடமிருந்து ரூ.4.07 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் பயணித்த 565 பேரிடமிருந்து ரூ.5.11 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது.
அனுமதியின்றி வாகனம் நிறுத்துதல்
ரயில் நிலையங்களில் அனுமதியின்றி வாகனம் நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக 12,112 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.55.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.:
குழந்தைகள் மீட்பு
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுற்றித் திரிந்த 242 குழந்தைகள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
97 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 110 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.19.06 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் 16 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னை ரயில்வே கோட்டத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 2,900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
