மதுரை, அக். 24- இந்து மத கோயிலுக்கு செல்லும்போது, பிற மதத்தினர் இந்து மத நம்பிக்கை உள்ளதென கையெழுத்திட வேண்டு மென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த தங்கம் வெங்கடேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பிற மத சின்னங்களைத் தாங்கியிருக்கும் நபர்கள் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களைப் பின்பற்றாதவர்கள், கோயில் கருவறைகள் மற்றும் மண்டபங்களுக்குள் நுழைதல் குறித்த விதி முறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர் முன் நேற்று (23.10.2026) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், உரிய விதிமுறைகளை பின்பற்றியே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இனியும் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘நாங்களும் சமூக வலை தளங்களைப் பார்க்கிறோம். அண்மையில் கூட திருவண்ணாமலையில் குல்லா போட்டு ஒருவர் கோயிலுக்குள் செல்கிறார். இதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா? மதுரை வந்த முதலமைச்சர் கூட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றபோது, முறைப்படி பதிவு செய்து, வெளியே வரும்போது குங்குமம் வைத்து வந்தார். அதை ஏற்றுக்கொள்கிறோம்’’ என்றனர். அப்போது அரசு தரப்பில், பிற மதத்தினர் இந்து மத கோயிலுக்குள் செல்லும்போது உரிய விதிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பிற மதத்தினர் இந்து மத கோயிலுக்கு செல்லும்போது இந்து மத நம்பிக்கை உள்ளது என கையெழுத்திட வேண்டும். விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என உத்தர விட்டு மனுவை முடித்து வைத்தனர்.
