நம்பினால் நம்புங்கள், வாக்காளர் பெயர் – இடித்தான் அவர் (தக்கா மார்னா), தந்தை பெயர் – சர்மாவை ராமன் அடித்தான். இதுதான் உத்தரப் பிரதேச தேர்தல் சீர்திருத்த எஸ்.அய்.ஆர் இறுதிப்பட்டியலில் காணப்பட்டக் கூத்து.
இந்தியாவின் ஜனநாயகம் உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாகக் கூறப்பட்டாலும், அதன் அடிவேரான வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் நடக்கும் அப்பட்டமான முறைகேடுகளும், குளறுடிகளும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கின்றன. அன்றாடம் வெளியாகும் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் சாதாரணமானவை அல்ல.
தேர்தல் ஆணையம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் எஸ்.அய்.ஆர். முடிந்து வாக்காளர் பெயர் பட்டியல் வெளியானது. அதில் பல பெயர்கள் முற்றிலும் நகைப்புக்கிடமாக உள்ளன. வாக்காளர் பட்டியலில் குடிமக்களின் உண்மையான பெயர்களுக்குப் பதிலாக – தந்தையின் பெயருக்குப் பதிலாக ‘ராம் சர்மாவை அடித்தார்’, ஆம் தந்தை பெயர் உள்ள இடத்தில் மேலே உள்ள சொல் உள்ளது.
இது வெறும் அச்சுப் பிழை என்று கடந்து சென்றுவிட முடியாது. அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜகவிற்கு எவ்வகையில் அதிக வாக்குகளைக் கொண்டு சேர்ப்பது என்பதில் தேர்தல் ஆணையமே மும்முரமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
வாக்களிப்பது என்பது இந்தியக் குடிமகனின் ஜனநாயக உரிமையாகும். ஆனால், ஒரு வாக்காளர் தன் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு முன்பாக, வாக்குச்சாவடியில் தனது சரியான பெயரைக் கண்டுபிடிப்பதற்கே போராட வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பெயர் விடுபடுவது, தவறான ஒளிப்படங்கள் அச்சிடப்படுவது போன்ற முந்தைய குளறுபடிகளுடன், இப்போது முற்றிலும் அர்த்தமற்ற சொற்கள் இடம்பெறுவது குடிமக்களை அவமதிக்கும் செயலாகும்.
டிஜிட்டல் இந்தியா மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், டேட்டா என்ட்ரி மற்றும் மென்பொருள் சோதனைகள் இருந்தும் இத்தகைய முட்டாள்தனமானப் பிழைகள் நிகழ்வது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஜனநாயகத்தின் வெற்றி என்பது மக்கள் தங்கள் பிரதிநிதிகளை விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியலிலேயே தெளிவின்மையும், குழப்பமும் நிலவினால், அந்த ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பலவீன மடைந்துவிடும். தேர்தல் ஆணையம் உடனடியாக இத்தகைய தவறுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பிழையற்றத் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், “மக்கள் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதா அல்லது தன் பெயரைக் கண்டு பிடிப்பதற்கே போராடுவதா?” என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் எப்போதுமே பதில் இருக்காது!
