உருவாக்குங்கள்!- இரவிசங்கர் அய்யாகண்ணு

3 Min Read
- Advertisement -

1999 – நான் +2 படித்த ஆண்டு. எல்லோரும் தமிழ்ப் பாடத்தில் மனப்பாடப் பாடல்களை மட்டும் மனனம் செய்து கொண்டிருக்கும் போது, நான் செய்யுள் பகுதியில் உள்ள அனைத்துப் பாடல்களையுமே விரும்பிப் படித்து, கேள்விகளுக்கு எழுதும் பதில்களில் ஆங்காங்கே தூவி விடுவேன். பள்ளியில் நடக்கும் ஆசிரியர் சந்திப்புக்கு என் பெற்றோர் வந்தாலே “உங்க பையனைத் தமிழ் படிக்க வையுங்க”ன்னு சொல்லாத தமிழாசிரியர்களே கிடையாது.

தமிழ்ப் பாடல்களைப் புரிந்து ரசித்துப் படிக்கும் அளவுக்கு, தாவரவியல் பாடத்தில் வரும் உயிரியல் பெயர்களை மனப்பாடம் செய்ய முடியவில்லை. என்ன பண்ணலாம்?

எங்கள் வீட்டில் இருந்த டேப் ரிக்கார்டரில் ஒட்டு மொத்த தாவரவியல் பாடத்தையும் நானே வாசித்துப் பதிவு செய்து விட்டேன். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அதை ஒலிக்க விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அறிவியல் அரங்கம்

எல்லோரும் பாட்டு கேட்கிற டேப் ரிக்கார்டரில் பாடப்புத்தகத்தைப் பதிந்து வைத்துப் படி என்று யாரும் சொல்லவில்லை. அப்படிச் செய்தவர்களையும் நான் கண்டதில்லை. ஆனால், என்னுடைய தேவைக்கு என் வீட்டில் இருக்கும் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்று அந்த வயதிலேயே செய்து பார்க்கத் தோன்றியது.

அதே போல, செயற்கை நுண்ணறிவு கொண்டு படம் வரையச் சொல்வதும் வீடியோ போடுவதும் கேள்வி கேட்பதும் தாண்டி, நம்முடைய அன்றாடத் தேவைகள், பணி, தொழில் தேவைகளுக்கு என்று நாமே வலைத்தள, செல்பேசிக் கருவிகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்தப் புதிய போக்கினை ‘Vibe Coding’ என்கிறார்கள்.

இவ்வாறு செயலிகளை உருவாக்க நீங்கள் மென் பொறியாளராக இருக்கத் தேவையில்லை.

ஒரு செயலியை உருவாக்க ஒரு மென்பொருள் பணியாளரை வேலைக்கு அமர்த்தினால், அவரிடம் எப்படி உங்களுடைய தேவையை எளிமையான மொழியில் சொல்லிப் பெற்றுக் கொள்வீர்களோ அது போலவே நேரடியாக ஏ.அய். உடன் உரையாடி, செயலிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

இது நமக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான தொடர்பை வெறும் நுகர்வோர் என்கிற நிலையில் இருந்து ‘ஏ.அய். கொண்டு படைப்போர்’ என்கிற நிலைக்கு உயர்த்துகிறது.

என்னுடைய தேவைக்கு என்று புதிது புதிதாய் ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்வதற்காக ஒரு செயலி உருவாக்கிப் பார்த்தேன். இது ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பு, பொருள், பயன்பாடு ஆகியவற்றை Flash cards கொண்டு விளக்குகிறது. பொதுவாக, கூகுளில் ஒரு முறை பொருளைத் தேடிப் பார்த்து விட்டு மறந்து விடுவோம். ஆனால், இந்தச் செயலி கொண்டு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களை நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தது. இதையே நான் இன்னும் மெருகேற்றி Duolingo போன்ற ஒரு சேவையாக அனைவருடனும் கூட பகிர முடியும்.

இந்தச் செயலியை உருவாக்க நான் பயன்படுத்தியது Google AI Studio. இணையத்தில் Vercel, Replit, Lovable, Bolt என்று பல வகையான Vibe Coding கருவிகள் இருந்தாலும் எனக்கு Google AI Studio பிடித்திருக்கிறது. அடிப்படையான பல செயலிகளைச் செலவின்றி உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

செயற்கை நுண்ணறிவின் உண்மையான திறன் களையும் பயனையும் அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் படைப்பாளியாக மாறிப் பார்ப்பதும் ஒரு தனி சுகம் தான்தான்.

அப்புறம், ஒன்னு சொல்ல மறந்துட்டேன்…

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியலில் பெற்ற மதிப்பெண்கள் 199/200. பள்ளியில் முதல் மதிப்பெண். மாவட்டத்தில் நான்காவது இடம். முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருந்தால் கலைஞர் அறிவித்த உதவித் தொகை திட்டத்தில் ஒரு பைசா செலவின்றி கல்லூரிப் படிப்பை முடித்திருக்கலாம். ஜஸ்ட் மிஸ்.

 

விஸ்பர் ஃப்ளோ (Wispr Flow)

நீங்கள் ஒவ்வொரு நாளும் நிறைய கணினியில் எழுதுபவரா? அவ்வளவு வேகமாகத் தட்டச்சு செய்ய வராதா? உங்களுக்கு விஸ்பர் ஃப்ளோ (Wispr Flow) கருவி பயனுள்ளதாக இருக்கும்.

 

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 98 மொழிகளில் துல்லியமாக நாம் பேசுவதை அப்படியே எழுத்தாக மாற்றித் தருகிறது. விண்டோஸ், ஆப்பிள், ஆன்டிராய்டு கருவிகளில் பயன்படுத்தலாம். அவ்வளவாக எழுதத் தேவையில்லாதவர்களுக்கு இலவச சேவையே போதுமானதாக இருக்கும். நான் மாதக் கட்டணம் செலுத்தியே பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். கட்டுபடியான விலையில் கிடைக்கிறது.

முயன்று பாருங்கள். முகவரி: https://wisprflow.ai

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *