ஜப்பான் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி சிறப்புரை

- Advertisement -

டோக்கியோ, அக்.18 யாரையும் கேள்வி கேட்பதற்கு, யாரையும் ஒதுக்கி வைப்பதற்கு, யாருடைய உறவும் வேண்டாம் என்று சொல்வதற்கு, அந்தத் தைரியம் பெரியாருக்கு இருந்ததால்தான், கடைசி வரை அவரால் மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது. அவரால் தன்னை மாற்றிக் கொள்ளாமல், இந்தச் சமூகத்தை மாற்ற முடிந்தது என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள்.

இரண்டாம் நாள் மாநாடு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த 11, 12 ஆகிய நாள்களில் நடைபெற்ற அய்ந்தாவது பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டின் இரண்டாம் நாளில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அறிவியல்தான்  இந்த உலகத்தினுடைய எதிர்காலம்!

‘‘நீ உடைத்தால், அதை என்னால் கட்டி எழுப்ப முடியும்’’ என்ற நம்பிக்கை இருந்த தலைவர் தான் தந்தை பெரியார் அவர்கள். அதனால், அவருக்கு எந்தப் பயமும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு தலைவர், அறிவியல்தான்  இந்த உலகத்தினுடைய எதிர்காலம். நேற்று நான் இங்கே பேசும்போதுகூட, பெரியார் அவர்கள், எதிர்காலத்தைப் பற்றி கணித்து வைத்திருந்த நிறைய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டுக்கு முதன்முதலாக,  அண்ணா யூனிவர்சிட்டிக்குக் கம்ப்யூட்டர் வந்த பொழுது, அது கிட்டத்தட்ட ஒரு அறை முழுவதும் பெரிய அளவுக்கு, முதன்முதலில் வந்த அந்த கம்ப்யூட்டர் இருந்தது. நடக்க முடியாமல் இருந்தபோது, வீல் சேரில் அமர்ந்து சென்று, அதை பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி, அதைப் பார்த்துவிட்டு வந்த ஒரு 90 வயது கிழவன் இருந்தார் என்றால், அது தந்தை பெரியார் அவர்கள்.

அவ்வளவு ஈர்ப்பு அவருக்கு, அறிவியலின்மீது.  அவ்வளவு ஒரு நம்பிக்கை, ஆணித்தரமான நம்பிக்கை, உலகை மாற்றக்கூடிய ஒன்று அதுதான் என்று.

பாரம்பரியமாகச் சாப்பிட்ட கம்பு, சோளம் போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டார்கள!

ஏன்?  இன்றைக்கு நாம் சாப்பிடுகின்ற உணவை எடுத்துக்கொண்டால், உணவைப்பற்றிப்  பேசும் பொழுது, நாம் என்ன சொல்கிறோம்,  ‘‘அரிசி வேண்டாம்; கிளைசமிக் இன்டெக்ஸ் அதிகம் இருக்கிறது அதில். அரிசி சோறுக்கு மாறியது தவறு; ‘கோ பேக், கோ பேக் டு மில்லட்ஸ்’, ‘கோ பேக் டு யுவர் ட்ரெடிஷனல் புட் கிரைன்ஸ்’ என்றார்கள்.  இதைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்கள் பேசி இருக்கிறார். அது என்னவென்றால், ‘‘தமிழர்கள், பார்ப்பனர்களைப் பார்த்து, அவர்களுடைய உணவு வகைகளை மறந்துவிட்டார்கள். அவர்கள், தாங்கள் பாரம்பரியமாகச் சாப்பிட்ட கம்பு, சோளம் போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அரிசி, சோறு – அதுவும் தோல் நீக்கி, பாலிஷ் செய்த அந்த அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இது மிகத் தவறு. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவோ, அதை நாம் கற்றுக்கொள்ளவில்லை. படிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை.  தன் இனத்திற்காகப் பாடுபட வேண்டும்; அதற்கு ஒரு  கஷ்டம் வந்தாலும், ஒன்றாகச் சேர்ந்து நின்று, அதற்காகப் பாடுபட வேண்டும் என்கிற அந்த உணர்வை நாம் கற்றுக்கொள்ளவில்லை.

நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்;  ஒரு சிந்தனை ஓட்டத்தில், இந்த பக்கம் ஒருவர் இருப்பார்; அதற்கு நேர் எதிராக, ஒரு பத்தாயிரம் மைலுக்கு அந்தப் பக்கம் இன்னொருவர் இருப்பார். ஆனால், கஷ்டம் என்று வரும்போது, அந்த ஒரு நூல் கோடு வந்து, அப்படித் தூக்கும். வண்டியை எடுத்துக்கொண்டு ஓடுவார்கள், காப்பாற்றுவதற்கு. ஆனால், அதை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை. ‘படி, அதுதான் உன்னுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.’ இதைக் கற்றுக்கொள்ளாமல், அவன் சாப்பாடு, அவன் வாழ்க்கை முறை என்று சொல்லி, அதுதான் அடுத்த படிநிலை என்று உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாய்’’ என்று சொன்னார்.

தந்தை பெரியார் நமக்கு கொடுத்த வார்னிங்!

இன்றைக்கு ‘சான்ஸ்கிரிடைசேஷன்’  (சமஸ்கிருத மயமாக்கல்) என்பதை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அன்றைக்கே தந்தை பெரியார் அவர்கள், நமக்கு கொடுத்த வார்னிங். அவர்களைப் பார்த்து நீ, கோடு போட்டுக் கொள்ளாதே! என்பதைத் திரும்பத் திரும்ப திரும்பச் சொன்னார்.

இட ஒதுக்கீடு என்றால் என்ன?

ஆனால், அதை மறந்துவிட்டு, இன்றைக்குத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லவா! நாம் அடுத்த தலைமுறைக்கு இந்தச் செய்திகளை எல்லாம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை, சொல்லவில்லை. அது, அதுதான். நாம் வேறு யாரோவாக ஆகிவிட்டோம். இன்றைக்கு, நாம் அவர்கள் இருந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு, நமக்குக் கீழ் இருக்கிறவர்களை, அங்கேயே இருக்க வேண்டும். எனக்கு நடந்து போவதற்கு அவர்கள் மெத்தையாக இருந்தால், எனக்கு வசதியாக இருக்கும் என்று சொல்லக்கூடிய அதுதான். இங்கே உரையாற்றும்பொழுதுகூட குறிப்பிட்டார்கள், இட ஒதுக்கீடு என்றால், மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரப்படுவது மட்டுமே என்பது. நான் இட ஒதுக்கீட்டின் வழியாக வந்தேன் என்பதைத் தெரியாமல் உட்காந்திருப்போம் அல்லவா, அதுதான்.

நாம் கொண்டு போய்ச் சேர்க்காததும், அதே நேரத்தில், நாம் வேறு யாரோ, என்று நாம், நம்பத் தொடங்கி விட்டோம் அல்லவா, அதுதான் இன்றைய நிலை. அதனால்தான், திரும்பத் திரும்ப திரும்ப இந்தச் செய்திகளை, நாம் யாராக இருந்தோம்? நம்முடைய தாத்தா, பாட்டி எப்படி இருந்தார்கள்? பாட்டி ரவிக்கை போடுவதற்கே எவ்வளவு போராட வேண்டி இருந்தது? படிப்பதற்கு எவ்வளவு போராட வேண்டி இருந்தது? தாத்தா, தெருவில் நடந்து போவதற்கு எவ்வளவு போராட வேண்டி இருந்தது? இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்கவேண்டும். அவர்களுக்கு நிறையக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்கிறோம். அவர்களைத் தூங்க வைப்பதற்கு, ராமாயணம் சொல்கிறோம், மகாபாரதம் சொல்கிறோம், முருகன் கதைகள் சொல்கிறோம். ஒவ்வொரு மதத்துக்கும் கதைகள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்கிறோம். வெள்ளைக்கார கதைகள் நிறையச் சொல்கிறோம். ‘ரெட் ரைடிங்ஹுட்’ சொல்லுகிறோம். எல்லாக் கதைகளையும் சொல்லுவோம். ஆனால், நம்முடைய கதைகளை அவர்களுக்குச் சொல்லவேண்டும். இன்றைக்கு மதியம் பேசிக் கொண்டிருக்கும்போது,  அருள்மொழி அவர்கள் சொன்னார்கள். குழந்தைகளிடம் நம்முடைய செய்திகளை, நம்முடைய கதைகளை, நம்முடைய வலிகளைக் கொண்டுபோய் அவர்களிடம் பதிய வைக்க வேண்டும்; சேர்க்க வேண்டும் என்று.

அது மிக முக்கியமான ஒரு கடமை. இங்கே இருக்கக்கூடிய பெற்றோர்களாக இருக்கட்டும். இந்தச் செய்திகளைக் கொண்டு போய்ச் சேர்க்கக்கூடியவர்களாக இருக்கட்டும். அடுத்த தலைமுறைக்கு, அது எந்த வயதாக இருந்தாலும், நம்முடைய வாழ்க்கையை, நாம் தாண்டி வந்திருக்கக்கூடிய அந்தத் தூரத்தை, அந்தப் பயணத்தை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை என்றால், சிலிக்கான் வேல்யூவில் முன் அமர்ந்துகொண்டு நிச்சயமாக கேட்பார்கள். நிச்சயமாகச் சொல்லுவார்கள் 12 ஆம் வகுப்பில், ஜாதி சர்டிபிகேட் கேட்கிறதல்லவா, அரசாங்கம். அப்பொழுதான் ஜாதி பிறக்கிறது, அந்த இடத்தில் தான் ஜாதி பிறக்கிறது என்று அவர்களுடைய மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

சமூகநீதியை நிலைநிறுத்துவது நம்முடைய கடமையாகும்!

அதற்கு முன்புவரை என்ன ஜாதி என்று தெரியுமா? கல்யாணம் செய்து வைத்தால், என்ன ஜாதி என்று பார்க்காமல் செய்து வைப்பது. ஆனால், ஜாதி என்பது, அந்த சர்டிபிகேட்டில்தான் இருக்கிறது என்று நாம், அவர்களை நம்ப வைத்து, அந்தப் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தாண்டி, ஜெயகாந்தன் அவர்கள் மேடையில் வந்து விமர்சனம் செய்த பொழுது, பெரியார், ‘‘யார் அந்தப் பையன்? நம்ம பையனா, இல்லையா?’’ என்று கேட்டார். அவருக்கு ஒரு பெருமை. ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பையன், மேடையில் ஏறி, இந்த அளவுக்குப் படித்துவிட்டு வந்து, தன்னைத் திட்டினால் கூட பரவாயில்லை, அந்தப் பையன் இந்த அளவுக்கு வந்திருக்கான் என்பதைப் பெருமையாக நினைத்த ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அந்த டிபேட்தான், இன்றைக்கு இந்த சமூகத்தில், இந்த நாட்டில் குறுகிக்கொண்டே வருகிறது. அடுத்தத் தலைமுறைப்பற்றிப் பேசினோம் இல்லையா, அவர்களுடைய சவால்கள், அவர்கள் சந்திக்கக்கூடிய விஷயங்கள், தட்பவெட்ப மாறுதலாக இருக்கட்டும், ஏஅய் ஆக இருக்கட்டும், எல்லாமே  வேறு ஓர் உலகம். அப்படிப்பட்ட அந்த ஒரு உலகத்தில், அவர்களுடைய சவால்கள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அந்த இடத்தில் கொண்டு போய், இந்த சமூகநீதி என்பதை நாம் நிலைநிறுத்துவது நம்முடைய கடமையாகும்.

ஏனென்றால், இன்றைக்குக் கிளைமேட் மாறுதல் வருகிறது. கிளைமேட் மாறுவதால், ஓரிடத்தில் வசிக்கின்ற மக்கள், இனிமேல் வாழத் தகுதியில்லாமல் அந்த இடம் மாறும்போது,  அந்த இடத்தை விட்டு, அங்கே வாழக்கூடிய மக்கள், வேறு ஓரிடத்திற்குப் புலம் பெயர்ந்து போக வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்படித் தள்ளப்படும்போது, அப்படி யார் அதிகமாகத் தள்ளப்படுகிறார்கள்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அடித்தட்டு மக்களாக இருக்கக் கூடியவர்கள்தான்!

ஒரு வசதியான, இல்லையென்றால் நிறைய படித்த, பாரம்பரியமாகப் படித்த ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடி யவர்கள் அந்த நிலைமைக்குத் தள்ளப்படுவதில்லை. இந்தச் சமூகத்தில், அடித்தட்டில் இருக்கக்கூடிய, அடித்தட்டில் அதிகமாக இருக்கக்கூடியது ஒடுக்கப்பட்ட மக்கள்தான், பிற்படுத்தப்பட்ட மக்கள்தான்; இல்லையென்றால், மிகவும் பிற்படுத்தப்பட்ட  மக்கள். இவர்கள்தான் வாழும் இடத்தை விட்டு, துரத்தி அடிக்கப்படுகிறார்கள். அது தட்பவெப்ப மாறுதலாக இருக்கட்டும், ஏய் ஆக இருக்கட்டும்.  நிறைய வேலைகள்  இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஒரு மெக்கானிக்கலாக நாம் செய்யக்கூடிய  நிறைய வேலைகளை நாம் தொலைத்துவிடுவோம்.

அடுத்த கட்டமாக, ஓர் அச்சம் எழுகிறது. அந்த வேலைகளில் இருக்கக்கூடியவர்கள் மறுபடியும் ஒடுக்கப்பட்டவர்கள்தான். மறுபடியும் அந்த ஜாதி தாண்டி வந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தினரின் மேல் அடிமேல் அடியாக அவர்கள்  மேல் விழப்போகுது என்கிறபோது, அதை நாம் எதிர்கொள்வது எப்படி என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். இவைதான் திராவிட இயக்கத்தினுடைய அடுத்த கட்டத்தில், நமக்கு முன்னால் இருக்கக்கூடிய கேள்விகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதே நேரத்தில், மனிதநேயம் என்பதைப்பற்றி  பேசும்பொழுது, நாம் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்கவேண்டும். எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக நாம் மாறிவிட வேண்டும் என்று நம்மை, நாமே மாற்றிக் கொள்கிறோம்.

அந்தத் தைரியம் நமக்கு இல்லை என்றால், எதுவுமே மாறாது!

நாம் சமரசம் செய்துகொள்கிறோம். கடவுள் நம்பிக்கை இருக்கக்கூடிய, மத நம்பிக்கை, ஜாதி நம்பிக்கை இருக்கக்கூடியவர்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டார்கள். ஆணவக் கொலை என்ற அளவுக்குப் போகக்கூடியவர்களுக்கு, திடீரென்று அந்த மனத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்லக்கூடிய அந்த நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நாம், நம்முடைய அடித்தளமாக இருக்கக்கூடிய, நம்முடைய நம்பிக்கைகளை, ஒரு நிமிஷத்தில் விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம். அம்மாவுக்குப் பிடித்த கோயிலுக்குப் போக வேண்டுமா? எனக்குப் பிடிக்காது; எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா கேட்கிறார்கள். பரவாயில்லை, நான் விட்டுக் கொடுத்துவிட்டுப் போகிறேன். அம்மாவிற்காக விட்டுக் கொடுங்கள்; அப்படியே விடாப்பிடியாக யாராலேயும் வாழ முடியாது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், And we always compromise at the end, or we compromise…  அதை நாம் சிந்தித்துப்  பார்க்கவேண்டும். ஒரு குடும்பத்தில், ஒரு வீட்டில்,  எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில்,  ஜாதி என்பது தீண்டாமை என்று பிராக்டீஸ் செய்கிறார்கள். யாரும் வீட்டுக்குள்ளே வரக்கூடாது; எங்கள் வீட்டுக் கதவுகளைத் தாண்டி யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரு குடும்பம் இருந்தால், ‘‘உன் வீட்டு வாசலை நான் மிதிக்க மாட்டேன்’’ என்று சொல்லக்கூடிய அந்தத் தைரியம் நமக்கு இல்லை என்றால், எதுவுமே மாறாது.

ஒரு ஜாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கக்கூடிய, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை இந்தச் சமூகம் ஒதுக்கி வைக்கிறது. ஆனால், நாம் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோமா? என்றால், கிடையாது. 15, 16  வயதில் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைக்கிற குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோமா? கேள்வி கேட்கிறோமா? ஏனென்றால், அதைக் கேட்பதற்குத் தைரியம் இல்லை.

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருந்ததால்தான், கடைசி வரை அவரால் மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது!

இந்தத் தைரியம், தந்தை பெரியாருக்குத் தன்னு டைய வாழ்நாள் முழுவதும் இருந்தது. யாரையும் கேள்வி கேட்பதற்கு, யாரையும் ஒதுக்கி வைப்பதற்கு, யாருடைய உறவும் வேண்டாம் என்று சொல்வதற்கு, அந்தத் தைரியம் அவருக்கு இருந்ததால்தான், கடைசி வரை அவரால் மாற்றங்களைக் கொண்டுவர முடிந்தது. அவரால் தன்னை மாற்றிக் கொள்ளாமல், இந்தச் சமூகத்தை மாற்ற முடிந்தது. இதை நாம் செய்யாதவரை, இந்த காம்ப்ரமைசே வாழ்க்கை – எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்கவேண்டும், அரசியலுக்குள்ளே போய்விட்டோம் என்பதற்காக, எல்லோரையும் மகிழ்விக்கக் கூடியவர்களாக நாம் மாறத் தொடங்கினோம் என்றால், இன்றைக்கு அப்படிப்பட்டவர்கள் தான் தமிழ்நாட்டிலே, ஆட்சியிலே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

They can’t please everybody (அவர்களால் எல்லோரை யும் திருப்திப்படுத்த முடியாது.) ஏனென்றால், தமிழ் சினிமா என்பது,  ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் மாதிரி.  சில படங்களில் எல்லோரும்  விரும்பும் எல்லாம் இருக்கும். பாட்டு கேட்கவேண்டுமா? சோக பாட்டு இருக்கா? இருக்கிறது. ஒரு ரொமாண்டிக் சாங் இருக்கா? இருக்கிறது. பைட் இருக்கா? பைட் இருக்கிறது. பாசம் இருக்குமா? பாசம் இருக்கும். வேறு ஏதாவது ஒரு புரட்சியான இரண்டு கருத்துகள் இருக்கா, இருக்கிறது. எல்லாமே இருக்கும். உங்களுக்கு எது வேண்டும் என்றாலும், எடுத்துக்கொண்டு வரலாம். அதைத்தான் இன்று அரசியலிலே நாம் தேடி கொண்டிருக்கிறோம். எனக்கு என்ன வேண்டுமோ, அது என்னுடைய லீடர் வந்து, அதை பிரதிபலிக்கும். அவர்களுக்கு என்ன வேண்டுமோ, இவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர் டெலிவர் செய்வதற்கான தகுதி இருக்கா, இல்லையா? என்று நமக்கு தெரியாத ஒன்றாக, அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால், கடவுள்களை ஓரிடத்தில் வைத்திருந்தோம்;  அதைக் கொஞ்சம் மாற்றிவிட்டு, கட்–அவுட் வைக்கத் தொடங்கி விட்டார்கள்.

வீழ்த்தப்படுவது நாமாக மட்டுமே இருப்போம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

அந்த இடத்தில், அந்தக் கட்–அவுட்டை கேள்வி கேட்க வேண்டும். அந்தக் கேள்வி கேட்கக்கூடிய தைரியம், எப்படி சமூகத்தைப் பார்த்துக் கேள்விகளைக் கேட்டு கொண்டிருக்கிறோமோ, தொடர்ந்து கேட்க வேண்டுமோ, அதே தைரியம் நமக்குத் தொடர்ந்து இருக்கும் வரை, திராவிடம் நீடிக்கும்! இந்தத் தமிழ்நாடு காப்பாற்றப்படும்! இங்கே இருக்கக்கூடிய மக்கள்,  இந்தச் சமூகத்தை, இந்த உலகத்தைத் தமிழர்களால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியும். ஆனால், அந்தக் காம்ப்ரமைசஸ் என்ற இடத்துக்குள் நாம், மறுபடியும் மறுபடியும் மறுபடியும் போய்ச் சிக்கும் பொழுது, நிச்சயமாக வீழ்த்தப்படுவது நாமாக மட்டுமே இருப்போம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மறுபடியும் இங்கே இந்த வாய்ப்பளித்த உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கருத்தரங்கத்தை இவ்வளவு சிறப்பாக நடத்தி கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள், நன்றி!

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *