ஜனவரி 22, 2015 அன்று மோடி அரியானாவில் “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” (பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளைப் படிக்கவையுங்கள்) என்ற திட்டத்தை துவங்கினரே!
ஆனால், இங்கே எஸ்.அய்.ஆர்.க்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி பதவி விலகவும் போராட்டம் நடந்த இடத்தில் இருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பானிபட் நகரில் தான் இந்தத்திட்டம் துவங்கப்பட்டது.
இன்று டில்லி போராட்டத்தில் அடிவாங்கிய மாணவிகளில் பலர் அப்போது குழந்தைகளாக இருந்திருப்பார்கள்.

ஆம், காவல்துறையின் கொடூரத்தாக்குதல் நடத்தப்படுவது 13 முதல் 20 வயது வரையிலானவர்கள் மீது என்று தெரிந்தும் தாக்குகின்றனர்.
இது ஒரு ஸ்டேட்டஜி. (வஞ்சகத் திட்டம்) – அதாவது ஆண்களை விட சிறுமிகளை, பெண்களைத் தாக்கினால் இதன் தாக்கம் சமூகத்தில் ஒரு பயத்தை உருவாக்கும். இதனால் இனி எதிர்காலத்தில் பெண்கள் வெளியேவரவே பயப்படுவார்கள் என்ற வஞ்சக திட்டம்தான்!
வரலாற்றில் பின்னோக்கிச் சென்றால் இதே கொடூரம் நடந்ததை உதிரக்கறை படிந்த வரலாற்றுப் பக்கங்கள் கூறுகிறது.

பவுத்தம், சமணம் ஒடுங்கப்பட்டு வேதமரபு தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது, பவுத்த சமணப் பெண்கள் மிகவும் கொடூரமான வன்முறைக்கு ஆளா னார்கள். பவுத்த விகாரைகளின் இருந்த பிக்குனிகள், சமணப்பள்ளியில் இருந்த இயக்கிகள் அனைவரும் தேவதாசிகளாகவும் அடிமைகளாகவும், விற்கப்பட்டனர் என தக்காண வரலாற்று நூல்கள் சொல்கின்றன.
இன்றும் மாரியம்மா, எல்லம்மா, துளஜாவா செல்லம்மா, சவுடேஸ்வரி, பொலிமேரம்மா, மத்தம்மா, கங்கம்மா போன்ற கிராம தேவதைகள் பவுத்த சமணத்தை சேர்ந்தவர்கள், மிகவும் கோரமாக கொல்லப்பட்டவர்கள் – தற்போது தெய்வமாக உள்ளார்கள்.
எதற்காக கொடூரமாக கொல்லப்படவேண்டும் என்றால் மக்கள் அச்சப்பட வேண்டும் என்பதற்காகத்தான்! ஆனால் மக்கள் அவர்களின் தியாகத்தை மறக்கவில்லை இன்றும். இப்பெண் தெய்வங்களுக்கு எடுக்கும் திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
கருநாடகா மற்றும் ஆந்திர மேற்கு எல்லை மாவட்டங்களில் மிகவும் பிரபலமான பெண் தெய்வம் எல்லம்மா இதனை பின்னால் வந்த வேதமரபு ரேணுகாதேவி என்று பெயரிட்டு அதனை ஹிந்து மதத்தோடு சேர்த்துக்கொண்டது.
தக்காணத்தில் கடம்பர்கள் காலத்தில்(முதலாம் நூற்றாண்டுமுதல் 5 ஆம் நூற்றாண்டு வரை) பவுத்தம் மிகவும் சிறந்து விளங்கியது. தெற்கே களப்பிரர்களின் காலகட்டத்தில் தக்காணத்தில் கடம்பர்கள் ஆட்சி இருந்தது. பல்லவ மற்றும் பாண்டியர்கள் சமணம் பவுத்தத்தை பெரிதும் ஆதரித்தனர்.

இந்த நிலையில் வடக்கே 5-ஆம் நூற்றாண்டில் கடம்பர்களின் ஆட்சி வலுவிழந்து போகவே சாளுக்கியர்கள் தலைதூக்கினர், சாளுக்கியர்களைப் பற்றிக் கூறும்போது ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி சாளுக்கியர்கள் பெண்களை நடத்திய விதம் குறித்து விளக்குகிறது.
வேதமரபினர் சாளுக்கியர்களின் இந்த நடத்தையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வேதமரபிற்கு முற்றிலும் எதிராக பெண்கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்ற பிக்குனிகளை கொடூரமாக கொலை செய்ய உத்தரவிட்டனர்.

அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் எல்லம்மா என்ற பெண். அவரை பின்னர் சிவனின் மனைவி பார்வதியின் அவதாரம் என்று கூறி கதை கட்டிவிட்டனர்!
மத்திய மற்றும் தக்காண பீடபூமிப் பகுதியில் மகாத்மா ஜோதிபாபுலேவின் புரட்சிவரை பெண்கள் மிகவும் கொடூரமான அடிமைகளாகவே இருந்தனர்.
அதே போன்ற ஒரு சூழலை மீண்டும் உருவாக்கவே மோடி அரசு பெண்களை குறிப்பாக மாணவிகளை மிகவும் கொடூரமான வகையில் கையாண்டது.
ராகுல்காந்தியோடு ஊடகவியலாளர் சந்திப்பில் காவல்துறையால் தாக்கப்பட்ட பெண் கூறியது:
முதலில் எனது தலை முடியைப் பிடித்து தள்ளினார்கள். நான் முழக்கம் எழுப்பினேன். பூட்சால் (பாத மூடணி) எனது முகத்தை மிதித்தனர். ஒரு பெண் காவலர் எனது காதைத் திருகினார். இதனால் எனது காதுகிழிந்து கம்மல் காது உள்ளே சென்றுவிட்டது. மருத்துவர்கள் சிறிய ஆபரேசன் செய்து அதை வெளியே எடுத்தனர். வயிற்றிலும் வயிற்றில் அடிப்பகுதியிலும் தொடர்ந்து அடித்தனர்.

ஒரு ஆண் காவல் அதிகாரி என்னை அடித்துக் கொண்டு இருந்த காவலர்களிடம், “கொஞ்சம் தள்ளி வேறு அறைக்கு கொண்டு சென்று அடித்து துவையுங்கள் அங்கே கண்காணிப்புக் காமிரா இல்லை” என்றார்.

உடனே என்னைத் தரையோடு இழுத்துச்சென்ற தொடர்ந்து தாக்கினர், ஒரு கட்டத்தில் நான் வலியைக் கடந்துவிட்டேன். “உங்கள் கைவலிக்கும் வரை அடியுங்கள்” சிறிது ஓய்வெடுத்து பிறகு அடியுங்கள்” என்று கூறினேன். அதற்கு ஒரு பெண் காவலர் என்ன கஞ்சா அடித்திருக்கிறாயா? என்று கேலிசெய்தார். எனது உடன் இருந்த ஒரு மாணவியின் தோள்பட்டையில் தொடர்ந்து அடித்ததால் அவரது மூட்டு விலகிவிட்டது, என்று கூறினார்.

காவல்துறையினரின் கொடுமைகளுக்கு இதுவே எடுத்துக்காட்டு ஆகும்.

அச்சமூட்டு!
“தொடர்ச்சியாக அச்சமூட்டு, பின்னர் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சவேண்டும்” என்பதுதான் மோடி அமித்ஷாவின் வஞ்சக எண்ணமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மனு சொல்லும் வழியும் இதுதானே!
