த.வெ.க. ஆட்சியில் நான்கு மாதங்களில் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தமிழ்நாடு முதலிடம்! தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

- Advertisement -

சென்னை, அக். 14- “த.வெ.க. ஆட்சியில் 4 மாதங்களில் பண வீக்கத்திலும், விலைவாசி உயர்விலும்தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்… எதில் தெரியுமா? பண வீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!

இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத் துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.

மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ லண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச் சந்தையில் வாங்கப் போகிறார்களாம்.

திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?

இது யார் வீட்டுக் காசு சார்? அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை ‘பர்ச்சேஸ்’ செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து சிஎம் ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன?

இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.

இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் தவெக அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ உடுப்பி, லண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *