எச்சரிக்கை! சேலம் வெள்ளிக் கொலுசுத் தொழில் வட மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது!

சேலம், அக். 12– வெள்ளிக் கொலுசுத் தொழில், வட மாநிலங்களுக்கு இடம் மாறும் சூழல் உருவாகி வருவதால், உற்பத்தியாளர்கள் கவலை அடைந் துள்ளனர். இதன் எதிரொலியாக, ஆண்டுதோறும் விழாக் கால ஆர்டர்கள் குறைந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் முக்கியத் தொழில்களில் ஒன்றாக சேலம் வெள்ளிக்கொலுசு உற்பத்தி விளங்குகிறது. சேலம் வெள்ளிக் கொலுசுகள் தரமாகவும், கைவேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருப்பதால், பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சேலத்தில் சாவித்திரி, மேனகா, குஷ்பூ, எஸ்.செயின் ஆகிய பெயர்களில் கொலுசுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கால் மெட்டி, மோதிரம், இடுப்புச் செயின், குழந்தைகளுக்கான கால் தண்டை உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்களும் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளி ஆபரணங்கள் என்றாலே சேலம் என்ற பெருமையும் உள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையால், வெள்ளிக்கொலுசுத் தொழிலில் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை, நவீன மயமாக்கல் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் வெள்ளிக்கொலுசுத் தொழில் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து, சேலம் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத் தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது:

சேலம் மாநகரைச் சுற்றியுள்ள பகுதி களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளிக்கொலுசுப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

ஒரு வெள்ளிக்கொலுசு, வெவ்வேறு 10 இடங்களில் படிப்படியாக உருவாக்கப்பட்டு முழுமையடைகிறது. மேலும், வெள்ளியின் அதிக மதிப்பு, தொழிலாளர்களுக்கு முன்பணம் வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால் இத்தொழிலுக்கு அதிக முதலீடு தேவைப் படுகிறது.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களிடையே ஒற்றுமை குறைவாக உள்ளது. நவீன இயந்திரங்கள் இல்லாமை, புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதில் ஆர்வமின்மை உள்ளிட்ட சிக்கல்களும் உள்ளன.

ஆள் பற்றாக்குறையால் இத்தொழிலில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடத் தொடங்கினர். அவர்களில் பலர் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டனர். இந்தச் சூழலை பயன்படுத்தி, வெளி மாநிலங்களில் இருந்து கொலுசு வாங்க வரும் வியாபாரிகள், குஜராத், மகாராட்டிரா உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களிலேயே அதிக முதலீடு செய்து, ஒரே கூரையின் கீழ் வெள்ளிக்கொலுசுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

எனினும், தரத்தின் அடிப்படையில் சேலம் வெள்ளிக்கொலுசுகளுக்கு சந்தையில் அதிக மதிப்பு உள்ளது. ஆனால், குறைந்த எடை, குறைந்த விலை காரணங்களால் வட மாநில வெள்ளிக்கொலுசுகளுக்கும் சந்தையில் வரவேற்பு உள்ளது. இதனால், சேலத்துக்கு வரும் வெள்ளிக்கொலுசு ஆர்டர்கள் ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன.

தற்போது, சேலத்தில் வெள்ளிப் பட்டறைகளின் எண்ணிக்கை 7 ஆயிர மாகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு விழாக் காலத்தில் ஆர்டர்கள் 40 சதவீதம் வரை குறைந்த நிலையில், நிகழாண்டு மேலும் அதிகமாகக் குறைந்துள்ளது.

பல பட்டறைகளுக்கு இதுவரை விழாக் கால ஆர்டர்கள் வரவில்லை. எனவே, இடம் மாறும் சேலம் வெள்ளிக் கொலுசுத் தொழிலைப் பாதுகாக்க உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசும் இத்தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *