உலகெங்கும் கூகிள் நிறுவனம் ஒவ்வொரு மொழியை தேர்வு செய்து Google News AI Lab எனும் செய்திக்கான செயற்கை நுண்ணறிவு ஆய்வகத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழியில் Google News AI Lab (தமிழ்) தொடங்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை தமிழ் மொழியில் இருந்து தொடங்குவது இதுவே முதல்முறை ஆகும். இத்திட்டத்தின் காலம் 15 மாதங்களாகும்.
92 ஆண்டுகாலமாக பகுத்தறிவுச் செய்தி நாளேடாக இயங்கி வரும் ‘விடுதலை’, கூகிள் நிறுவனத்தால் செய்தி செயற்கை நுண்ணறிவு ஆய்வகத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விடுதலையுடன் சேர்த்து 13 செய்தி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 8,9 ஆகிய இரண்டு நாள்கள், சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் விடுதியில் Google மற்றும் Searce நிறுவனத்தால் ‘விடுதலை’ உட்பட 13 செய்தி நிறுவனங்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் ‘விடுதலை’ சார்பாக முரளி கிருஷ்ணன் சின்னதுரை, அருள் ராமு மற்றும் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
