தமிழ்நாட்டில் அரிசி விலை மேலும் உயரும் அபாயம்! 25 விழுக்காடு ஆலைகள் மூடும் நிலை!

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தென்காசி, அக். 10-  பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், அரிசி விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை கவலையடையச் செய்துள்ளது என தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் சி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அரிசி விலை அதிகரித்து வரும் நிலையில், சில அரிசி ஆலைகள் பல்வேறு நெருக்கடிகளால் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரிசி விலை உயர்வுக்காக காரணங்கள், விலை உயர்வை கட்டுப்படுத்த மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் சி.அன்பழகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

“தமிழ்நாடு மட்டும் நெல் மகசூலில் பற்றாக்குறை மாநிலமாகவே உள்ளது. தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து நெல் மற்றும் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்கியதால் பெரும்பாலான விவசாயிகள் பெரும்பாலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அதிக நெல் விளைச்சல் தரும் மாவட்டங்களில் மழை அளவு குறைந்ததால் நெல் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆகவே தனியார் அரிசி ஆலைகள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்களில் அதிக விலை கொடுத்து நெல் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் விரும்புகின்ற மிகவும் சன்னரக அரிசியின் தரத்தை மேம்படுத்தி தயாரிப்பதற்காக அதிநவீன இயந்திரங்களை நிறுவ வங்கிகளில் அதிக கடன் பெற்று ஆலைகளை எப்படியாவது இயக்கினால் தான் வங்கியில் பெறப்பட்ட கடன் தொகையை கட்ட முடியும் என்ற நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மின் கட்டண உயர்வு ஆண்டுக்கு 6 சதவீதம், மின் நிலுவைக் கட்டணம் எல்.டி. (LT) இணைப்புக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35இல் இருந்து ரூ.170 ஆகவும், எச்டி (HT) இணைப்புக்கு ரூ.300இல் இருந்து ரூ.575 வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் மின் கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

அரிசி ஆலைகளுக்கு தேவையான தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து கொடுத்து, ஆலைகளை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அன்றாடம் உழைக்கும் மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 5 கிலோ 10 கிலோ பைகளில் வாங்கும்போது 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் 5, 10 கிலோ அரிசி பைகளின் அடக்க விலை உயர்வு, மின் தட்டுப்பாடு காலங்களில் ஜெனரேட்டர்களுக்கான டீசல் விலை உயர்வு, பணியாளர்கள் கூலி உயர்வு மற்றும் வாகன செலவு உயர்வு போன்ற காரணங்களால் தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளதும் அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நெல் தட்டுப்பாடு காரணமாகவும், தயாரிப்பு செலவு அதிகரிப்பாலும் கடனுக்கான தவணைத் தொகை கட்ட முடியாமல் 20 முதல் 25 சதவீத நவீன அரிசி அலைகள் இயக்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளன. அரிசி ரகங்களில் சன்ன, மிக சன்ன ரகங்கள் (HMT,RNR, அட்சயா, அம்மன்) மட்டுமே விலை அதிகம் உயர்ந்துள்ளது.

உருட்டு அரசி ரகங்களான ஏடிடி 45, டீலக்ஸ் பொன்னி, பிபிடி பொன்னி மற்றும் இட்லி அரிசி வகைகளில் விலை ஏற்றம் சற்று குறைவாகவே உள்ளது. நெல் வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும் என்றார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *