குழந்தைகள் மூலம் ஜோசப் விஜய் வாக்கு கேட்ட சம்பவம் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 22 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தவெக தலைவர் ஜோசப் விஜய், “பெற்றோரை தவெக-வுக்கு வாக்களிக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்” என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு, தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் மூலம் வாக்கு கேட்ட சம்பவம்

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்குரைஞர் வாசுகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் நடைமுறையின் புனிதம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. தவெக  சிறுவர்களை சுரண்டியும் வாக்காளர்களிடம் தங்களது செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில், தவெக தலைவர் ஜோசப் விஜய், தங்களுக்கு வாக்களிக்குமாறு பெற்றோரிடம் அழுத்தம் கொடுக்குமாறு குழந்தைகள் மத்தியில் பேசியுள்ளார். இது அவர்கள் மீது உணர்வுப்பூர்வமாக செல்வாக்கு செலுத்தும் செயலாகும்.

“வெற்றி பெற்ற வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரவில்லை. மாறாக, தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தியது குறித்து  தவெகக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.”  இந்த பொதுநல மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கனிமொழி மதி ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மே 29-ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம், தவெக ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு 2 ஆலோசகர்கள் நியமனம்

அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி நியமனம்

சென்னை, மே 22  தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியப் பொறுப்பில் ஜான் ஆரோக்கியசாமி

சமீபத்திய தேர்தல் களத்தில் தவெக தீவிரமாகப் பணியாற்றி, அக்கட்சியின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியாக இருந்தவர் ஜான் ஆரோக்கியசாமி. பல்வேறு முக்கியத் தேர்தல்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்த அனுபவம் வாய்ந்த இவர், தற்போது முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அரசின் பொது விவகாரங்களைக் கவனிக்கும் மிக முக்கியப் பொறுப்பான ‘பொது விவகாரங்கள் ஆலோசகர்’ பதவிக்கு விஷ்ணு  நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அரசின் நிர்வாக ரீதியிலான முடிவுகள் மற்றும் பொது விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *