புதுடில்லி, அக். 08- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, ஜந்தர் மந்தரை நோக்கி போராட்டம் நடத்த சென்ற ‘இண்டியா’ கூட் டணி நாடாளுமன்ற உறுப் பினர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகி யோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எதிர்க்கட்சி யினர் புகார் கூறி வருகின்றனர். இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டில்லியில் கடந்த 6.10.2026 அன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடு விக்கப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ‘இண்டியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லி ஜன்பத் பகுதியில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் நேற்று (7.10.2026) கூடினர். அங்கு மதிய உணவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே ஏற்பாடு செய்திருந்தார். இதில் ராகுல் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், அடுத்த கட்ட போராட்டத்தைத் தீவிரப் படுத்துவது மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது குறித்து ஆலோசிக் கப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு சாகர் ரத்னா உணவகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப் பினர்கள் பேருந்துகளில் ஏறி ஜந்தர் மந்தரை நோக்கி போராட்டம் நடத்த சென்றனர். ஜந்தர் மந்தருக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். இதனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பேருந்துகள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு முன்பு காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று டில்லி காவல் துறையினர் தெரிவித்தனர். அதற்கு, எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஜந்தர் மந்தரில்தான் போராட்டம் நடத்துவார்கள் என்று ராகுல் காந்தி கூறினார். இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் பிடித்து பேருந்தில் அமர வைத்தனர். மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்ய காவல்துறையினர் முயன்ற போது, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் சாலையில் வந்து அமர்ந்தனர்.
அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் பலமுறை கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் மறுத்தனர். பிரியங்கா காந்தி சாலையில் படுத்துக் கொண்டு, தன்னை யாராவது அங்கிருந்து நகர்த்திப் பாருங்கள் என்று சவால் விடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து பேருந்துக்குள் ஏற்றினர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் டில்லியில் 2-ஆவது நாளாகப் பரபரப்பு ஏற்பட்டது.
100 எஃப்அய்ஆர் இலக்கு
இதுகுறித்து ராகுல் கூறிய தாவது: நான் நேற்று கூறியதைப் போல, சுமார் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க விரும்பினர். ஆனால், அனுமதி தரவில்லை. அதனால் தலைமைத் தேர்தல் ஆணைய வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், அங்குப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் தெரி வித்தனர். அதனால் டில்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று, மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டோம்.
ஞானேஷ் குமார் நாட்டின் சட்டப்பூர்வமான தேர்தல் ஆணையர் அல்ல என்பதை நாட்டுக்குத் தெரிவிப்போம். பிரதமர் மோடி, அமித் ஷா, மோகன் பாகவத், ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்தை அழித்துவிட்டனர். என் மீது 45 எப்அய்ஆர்-கள் உள்ளன. ஆனால் 100 எப்அய்ஆர்-கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதுதான் எனது இலக்கு. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
முன்னதாக ‘இண்டியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய டில்லி உணவகத்துக்கு வந்த போது, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைய அலுவலகத் துக்குச் செல்லும் அனைத்து முக்கிய சாலைகளும் மூடப் பட்டன. நேற்று முன்தினம் (6.10.2026) ராகுல் உட்பட எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டம் நடத்திய அகில இந்திய வானொலி நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இண்டியா கூட்டணி போராட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை. எனினும், இடதுசாரிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் ராகுல் காந்தி கூறியதாவது: “ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவது இல்லை. தேசத்தின் புனிதம் மிக்க ஒன்றை காக்கும் நோக்கில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவால் எங்களை தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
