தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளின் மீது திணிக்கப்பட்ட இடைத் தேர்தல் நேற்று முன் தினம் (6.10.2026) நடைபெற்று, நாளை (9.10.2026) முடிவுகள் வெளிவரவிருக்கின்றன. இப்போதைய சூழலில், “தேர்தல் முடிவுகள் மக்கள் கருத்தினைத் துல்லியமாகக் காட்டும்” என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. அதன் காரணமாகத் தான், தேர்தல் ஆணையத்திற்கெதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். அதனால், அதை விடுத்து, இரண்டு தொகுதிகளிலும் மக்கள் எப்படி இத் தேர்தலை எதிர்கொண்டனர் என்பதை இப்போதே மதிப்பிடுவது சரியானது.
இந்த இடைத்தேர்தல் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தேர்தல் என்பதை இரு தொகுதிகளின் வாக்காளர்களும் தெளிவாக புரிந்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஒருவித எரிச்சலைத் தந்துள்ளது அதன் காரணமாக இரு தொகுதிகளிலும் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது. பொதுத் தேர்தலில் 93.20% வாக்குப்பதிவு செய்திருந்த மதுராந்தகம் தொகுதியில் இம்முறை 85.90% மட்டுமே பதிவாகியுள்ளது சுமார் 7.30 சதவீதம் குறைவு. தாராபுரம் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் பதிவாகியிருந்த வாக்குகள் 89.90%; இந்த இடைத்தேர்தலில் 9.59% குறைந்து 80.31% மட்டுமே பதிவாகியுள்ளது.
இத்தொகுதிகளில் கடந்த முறை தாங்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பியிருந்த அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி ஆளும் த.வெ.க.வில் இணைந்து, மீண்டும் போட்டியிடுவது, தங்களை ஏமாற்றும் அப்பட்டமான வேலை என்று மக்கள் கருதியுள்ளதை, வாக்குப்பதிவு சதவீதத்தில் மட்டுமல்லாமல், வாக்கு சேகரிக்கச் சென்ற இடங்களிலும் காண முடிந்தது. இதனை தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பரப்புரையாளர்களும் சுட்டிக்காட்டிய போது மக்கள் காட்டிய உணர்வே அதைத் தெளிவாக உணர்த்தியது.
“அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவேண்டிய இந்தத் தொகுதிக்கான தேர்தல், அய்ந்து மாதத்திலேயே தேர்தல் வருவதற்கு என்ன காரணம்? உங்களிடம் ஒரு கட்சியின் சார்பில் ஓட்டு வாங்கிக் கொண்டு, இன்னொரு இடத்தில் பதவி கிடைக்கும் என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியில் இருந்தும் விலகி, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். அவருக்கு அரசியல் பிடிக்கவில்லையா அல்லது வேறு காரணங்களா? தேர்தல் முடிவு வந்து 20 நாள்களில், சட்டப்பேரவைக்கு உள்ளே போன இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், ஏன் அந்தக் கட்சியில் நீடிக்க முடியவில்லை? ‘குதிரை பேரம்’ மிகப்பெரிய அளவுக்கு நடந்திருக்கிறது” என்று திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டிய செய்தி வாக்காளர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்தது மட்டுமல்லாமல், அதன் பின்னால் இருந்த அரசியல் சீர்கேட்டையும் அம்பலப்படுத்தியது.
ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை, அவர்கள் சந்திக்கும் முதல் இடைத் தேர்தல். இடைத்தேர்தல் என்பது எடைத் தேர்தல் என்பார் ஆசிரியர் கி.வீரமணி. கடந்த அய்ந்து மாத கால ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கான வாய்ப்பாகவும் இத் தேர்தல் அமைந்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன் அழிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் மிகப் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றியதாகச் சொல்லப்பட்ட ஓரிரு வாக்குறுதிகளும் முழுமையானதாக இல்லாமல் ‘தகுதி இருப்போருக்கு மட்டுமே’ என்ற பெயரில் பலரைக் கழித்துக் கட்டியது. இந்நிலையில், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் புதிதாகக் கட்சி தொடங்கி, போகும் இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து நின்று பயணத்தை தடுப்பதாகவும், நெருக்கடி ஏற்படுத்துவதாகவும் மக்களின் பேராதரவு தங்களின் கட்சிக்கு இருப்பதாகவும் விளம்பரப்படுத்திக் கொண்ட த.வெ.க., தற்போது தங்கள் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருக்கும் ஜோசப் விஜய் அவர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்றும் கூட, இவ்விரு தொகுதிகளிலும் மக்கள் கூட்டம் பெரிதாக அலை மோதவில்லை. கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த நாட்களை விட பிரச்சாரத்தைத் தள்ளிவைத்த நாட்களே அதிகம் என்று ‘சாதனை’ படைத்திருந்த அவர்கள், இந்த முறை தொகுதியில் தங்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருப்பதை உணர்ந்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சரை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தனர். அவரும், இது வரை இல்லாத வகையில் ‘தேநீர் கடைக்குச் செல்வது, மாட்டு வண்டி ஓட்டுவது, டிராக்டர் ஓட்டுவது, முருங்கைக்காய் பறிப்பது’ என்று தன்னுடைய பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். முக்கியப் பிரச்சினைகளைப் பேசாமல், பேசவிடாமல் வழக்கம்போல, திசை திருப்பும் அரசியலையே தங்களின் கருவியாக ஆளும் தரப்பு வைத்திருப்பதை இத் தேர்தல் பரப்புரைக் காலம் மீண்டும் உணர்த்தியுள்ளது. ஆளும் கட்சியின் அத்துமீறல்களை அவர்களுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே கடுமையாகக் கண்டித்திருக்கின்றன.
கட்சி மாறி மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்களிடம் இருந்த கடும் எதிர்ப்பு, அவர்களது பிரச்சாரத்தின் போதே தெளிவாகத் தெரிந்தது. இந்த தேர்தலில் தங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவிட்டால், இதேபோல கட்சி மாறிய மற்றவர்களையும், அடுத்தடுத்து இடைத்தேர்தல்களில் பயன்படுத்தலாமா என்று முடிவு செய்ய த.வெ.க. ஆர்வமாக இருக்கிறது. ஆனால், அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய சீர்கேட்டிற்கு அடித்தளமாக அமைந்துவிடும். மக்களின் கருத்தறிந்து சொல்ல வேண்டிய ஊடகங்கள் பல, ‘ஜலதரங்கம்’ இசைத்துக் கொண்டிருக்கும் சூழலில், நாளைய தேர்தல் முடிவு, மக்களின் முடிவா, ஞானேஷ்வரர்களின் முடிவா என்பதை வெளிவந்தபின் பார்க்கலாம். ஆனால், மக்களின் உண்மை மனநிலைமையை இந்த முடிவுகளுக்கு முன்பே அனைவரும் அறிந்துவிட்டனர்.
