சாதாரண செருப்பா? ‘14 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட செருப்பு!’
‘‘காங்கிரஸ் நண்பர்களுக்கு எவ்வளவு அக்கறை இருந்தால், பழைய செருப்புகளைத் தேடித் தேடி எடுத்து வந்து தோரணம் கட்டியிருப்பார்கள்!’’
தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா ஆகியோர் வந்த ஊர்வலத்தில்
செருப்புத் தோரணங்களைக் கட்டி வைத்திருந்தனர் ஸநாதனிகள்!
சிவகங்கை, அக்.8 ‘‘நான், என்னுடைய வாழ்க்கையில் பல வரவேற்புகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த சிவகங்கை வரவேற்பு மாதிரி சிறப்பான வரவேற்பு வேறு எங்கேயும் நடந்தது கிடையாது. இந்த மாதிரி ஒரு வரவேற்பு மிக அற்புதமான வரவேற்பாகும். காரணம், மற்ற இடங்களிலெல்லாம் தென்னை மரத்தின் ஓலையை வைத்துத் தோரணம் கட்டுவார்கள். பனங்குருத்துத் தோரணங்களைக் கட்டுவார்கள். அல்லது வேறு எதையாவது வைத்துக் கட்டுவார்கள். ஆனால், அவையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும். போய் விலைக்கு வாங்கிக் கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால், காங்கிரஸ் நண்பர்களுக்கு, தேசிய நண்பர்களுக்கு என் மேலே எவ்வளவு அக்கறை இருந்தால், எனக்கு ஒரு தனித்த சிறப்போடு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, பழைய செருப்புகளை எல்லாம் போய்த் தேடி –இவ்வளவு பழைய செருப்புகளைத் தேடித் தேடி எடுத்திருக்கிறார்கள் என்றால், எவ்வளவு அக்கறை இதற்கென எடுத்திருக்க வேண்டும். இந்தச் செருப்பு, சாதாரண செருப்பா? 14 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட செருப்பு’’ என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சிவகங்கை: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
்சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 22.08.2026 அன்று மாலை 6 மணிக்கு, சண்முகராஜா கலையரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளான சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற, ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இரண்டு விழாக்களுக்காக 1974 ஆம் ஆண்டு மலர் ஒன்று வெளியிடப்பட்டது!
ஒரு செய்தி, நம்முடைய சகோதரர் இன்பலாதன் அவர்கள் ஒரு பெரியதொரு தகவலைக் கொடுத்தார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்; அதுமாதிரி என்று சொல்ல வேண்டும். சிவகங்கையில், டிஸ்ட்ரிக்ட் முனிசிபல் கோர்ட்டிற்கு நூற்றாண்டு விழா; அதே மாதிரி சப்ஆர்டினேட் ஜட்ஜ்; அடுத்தது சார்பு மாவட்ட நீதிபதிகள்; அவர்களுக்கு டைமண்ட் ஜூபிலி; இந்த இரண்டு விழாக்களுக்காக ஒரு மலர் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த மலரில் ஒரு தகவல். இது 1974 இல் வெளியிடப்பட்டது. இந்த ஊர்ச் சங்கதியைச் சொல்கிறேன். வழக்குரைஞர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள், அவர்கள் எல்லாம் இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சர்வீஸ் கமிஷன் தலைவராக இருந்த
இராமச்சந்திரனாரின் மகன் இராமசுப்பிரமணியம்!
இங்கே சாதாரண கிராமங்களில், ஜாதி வெறி இருந்தது என்கிற தகவல் உண்டு. கிராமத்தில்தான் ஜாதி வெறி இருந்தது என்பது மட்டுமல்ல, வழக்கு ரைஞர்கள், பிஎல் படித்து, நீதிமன்றத்திற்குப் போய், எல்லோருக்கும் ஆக வாதாடக்கூடியவர்கள்; அவர்களுக்கு என்ன சூழ்நிலை இருந்தது? இந்த ஊரில், இராமச்சந்திரனார் அவர்களுடைய மகன் பெருமைக்குரிய அய்யா நம்முடைய அருமை இராமசுப்பிரமணியம். உங்களுக்கெல்லாம் தெரியும், சர்வீஸ் கமிஷன் சேர்மனாக இருந்து, இந்த ஊருக்குப் பெரிய பெருமையைக் கொடுத்தவர். மிகப்பெரிய அளவுக்குச் சுயமரியாதை வீரர். அப்பேர்ப்பட்டவரை அங்கே அழைத்தார்கள். அந்த விழாவில் அவர் பேசும்போது, ஒரு தகவலைச் சொல்கிறார். யார்? இராமச்சந்திரனாருடைய மகனான நம்முடைய இராமசுப்பிரமணியம் அவர்கள். பெரியாருடைய கொள்கைகளை பின்பற்றக் கூடியவர். நேர்மையான அதிகாரி, அவர் மேல் ஒரு சிறிய குற்றம்கூட சொல்ல முடியாது, சர்வீஸ் கமிஷன் தலைவராக இருந்த காலத்திலே! அப்படிப்பட்டவர் ஒரு தகவலை கொடுக்கிறார்.
என்னவென்றால், இங்கே சொல்கிறார் ‘‘I am proud to be a member of the Bar Association of Sivaganga Ramanathapuram District from 1941 to 1950.’’
‘‘1941 முதல் 1950 வரை சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார்.
When I Enter Judicial Service – நான் வழக்குரைஞராக இருந்து பிறகு நீதிபதியாக ஆனேன்.
நீதிபதியான நேரத்தில், My eldest father Thiru
S. Ramachandiran Servai was one of the leaders of the bar in civil side in 1920.
‘‘என் தந்தை வழி மூத்த தந்தையார் திரு. எஸ்.இராமச்சந்திரன் சேர்வை அவர்கள், 1920 ஆம் ஆண்டில் உரிமையியல் வழக்குத் துறையில் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.’’
ஒரு சங்கதியைச் சொல்கிறார், என்னுடைய அப்பா, நீதிமன்றத்திற்குச் சென்று சம்பாதித்தார் என்பது பெருமையல்ல. நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் சங்கத்தில் குடி தண்ணீர் பானைகள் இரண்டு இருந்தன. ஒன்று, உயர்ஜாதிக்காரர்கள், பார்ப்பனர்களுக்கு. இன்னொரு பானை, சூத்திராள்களுக்கு, கீழ்ஜாதிக்காரர்க ளுக்கு, மற்றவர்களுக்கு.
இதுபோன்று இன்றைக்கு எங்கேயாவது இருக்குமா? அப்படி இருந்தால், ஒப்புக்கொள்வோமா?
எங்கே இந்த நிலை? படிக்காதவர்கள் மத்தியில் அல்ல; கிராமத்தில் அல்ல. வழக்குரைஞர்கள் சங்கத்தில் இருந்தது. இதுபோன்று இன்றைக்கு எங்கேயாவது இருக்குமா? அப்படி இருந்தால், ஒப்புக்கொள்வோமா?
அந்த நிலை எப்படி ஒழிந்தது?
அதற்குக் காரணம், பெரியார்! பெரியார்!! பெரியார்!!
எங்கோ படிக்காத கூட்டத்தில் அல்ல, கிராமத்தில் அல்ல; வக்கீல்கள் சங்கம், அதுவும் எப்பொழுது? இன்றைக்கு அதுபோன்று எங்கேயாவது இருக்குமா?
அந்தக் கொள்கையை இராமச்சந்திரன் (சேர்வை) அவர்கள் ஏற்றதினால்தான், நீதி கட்சியில் இருந்ததினால், ‘‘பானையை முதலில் தூக்கிப் போடுங்கள்’’ என்றார். இது 1920 ஆம் ஆண்டு நடந்தது, அதை எழுதியிருக்கிறார்.
50 ஆண்டுகளாக நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்த ஜெகஜீவன் ராம்!
தமிழ்நாடு எப்பொழுதும் முன்னாலே இருக்கும். ஜெகஜீவன் ராம் அவர்களை உங்களுக்கெல்லாம் தெரியும், 50 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவரும் வழக்குரைஞர்தான். அவர் ராணுவ அமைச்சராக இருந்தபொழுது, 1965 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற நிகழ்வைப்பற்றிச் சொன்னார். ‘‘நீதிமன்றத்திற்கு சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்திருந்தார்கள், நான் உள்ளே போய்ப் பார்த்தேன்; அங்கே குடிப்பதற்காக இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை நான் பார்த்துவிட்டு, வேதனைப்பட்டேன்’’ என்றார்.
எங்கே, டில்லியில்?
இரண்டு தண்ணீர்ப் பானைகளை வைத்து
வேறுபடுத்துகிறீர்களா?
தமிழ்நாட்டில், 1929 ஆம் ஆண்டிலேயே பானையை உடைத்துவிட்டார்கள். அதே மாதிரி, 1942 ஆம் ஆண்டு கும்பகோணம் கல்லூரி மாணவர்களுக்கு வைத்த இரண்டு பானைகளை எங்கள் மாணவர்கள்தான் போட்டுடைத்தார்கள். தவமணிராஜன், கருணானந்தம் ஆகிய தோழர்கள் பானையைத் தூக்கி உடைத்தார்கள். ஏன்ய்யா, இரண்டு தண்ணீர்ப் பானைகளை வைத்து எங்களை வேறுபடுத்துகிறீர்களா? என்று
கேட்டார்கள்.
இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பில்லாமல் நடக்கக்கூடிய ஒரு பெரிய மாநாடாக இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது!
ஆகவே, ஜாதி என்பது குடிக்கிற தண்ணீரில் இருந்து நடைமுறைப்படுத்துவதில் இருந்து எல்லாம் வந்தது. ஆனால், மக்கள் புரிந்துகொள்ளவில்லை. இப்படி செய்த தந்தை பெரியாரை ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், ஒரு பக்கம் வரவேற்றாலும் அதே நேரத்தில், இன்னொரு நிகழ்வு. இங்கே எதிர்நீச்சல் அடித்து வென்று வந்த பிறகு, இன்றைக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கிறீர்கள். ஏராளமான தோழர்கள் இருக்கிறார்கள். இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பில்லாமல் நடக்கக்கூடிய ஒரு பெரிய மாநாடாக இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இதே சிவகங்கையில், அய்யா வெற்றி பெற்றி ருக்கிறார், மிகப்பெரிய அளவுக்குப் பல நேரங்களில், பல துறைகளில் எத்தனையோ மாநாடுகள், என்னுடைய தலைமையிலேயே நடந்துள்ளன. அய்யா அவர்கள் என்னைத் தலைமை தாங்க வைத்திருக்கிறார். சாமி.திராவிடமணி அவர்கள், அந்தப் பழைய அறிக்கைகளை எல்லாம் கொடுத்தார். அப்படி எல்லாம் வந்தும் கூட, அதற்கு முன்னால் என்ன நடந்தது? ஒரு சம்பவம், ஏன் சிவகங்கையில் இன்றைக்கு இந்த மாநாட்டுக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம்? என்று சொன்னால் நண்பர்களே, இளைய தலைமுறைக்கு இது தெரியாது; புதிய தலைமுறைக்கும் இது தெரியாது. அவர்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
அய்யாவையும், அண்ணாவையும்
சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா – ‘தளபதி அண்ணா’ என்று அன்றைக்கு அழைப்பார்கள். இரண்டு பேருக்கும் வரவேற்பு கொடுக்கிறார்கள், இதே சிவகங்கை மண்ணில். நம்முடைய தோழர்கள் இன்றைக்கு நீங்கள் கொடுக்கிற ஆதரவு மாதிரி, அன்றைக்கு ஆதரவு கொடுத்து, வழியில் எல்லாம் வரவேற்பு கொடுக்கிறார்கள். அய்யாவிற்கு வரவேற்பு கொடுத்தார்கள். அவர்களை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, மடக்குகிற கார் இருக்கும்; அதை பிளைமவுத் கார் என்று சொல்லுவார்கள். கார் அல்லது சாரட் வண்டியில் அமர வைத்துத்தான் அந்தக் காலத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். அப்போது அய்யாவையும், அண்ணாவையும் சாரட் வண்டியில் அமர வைத்து அழைத்து வருகிறார்கள். நம்முடைய தோழர்கள் உணர்ச்சிப்பூர்வமாக அந்த ஊர்வலத்தில் நடந்து வருகிறார்கள். இன்னொரு பக்கத்தில், அன்றைக்கு இருந்த ஸநாதனவாதிகள்; காங்கிரஸ் கட்சி என்பது அன்றைக்கு ஸநாதனிகள் கைகளில்தான் இருந்தது.
ஸநாதனிகள் செருப்புத் தோரணங்களைக் கட்டி வைத்திருந்தார்கள்!
அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? திடீரென்று வரிசையாக செருப்புத் தோரணங்களைக் கட்டி வைத்திருந்தார்கள். அதுவும் பழைய செருப்பாகப் பார்த்து எடுத்து, பிய்ந்துப் போன செருப்புகளை எடுத்து வந்து, வரிசையாகத் தோரணங்களைக் கட்டி வைத்திருந்தார்கள். எப்படி கட்டியிருந்தார்கள் என்றால், உயரத்தில் கட்டவில்லை; பெரியாரும், அண்ணாவும் அமர்ந்து வருகின்ற சாரட் வண்டியில், அவர்களுடைய தலையில் இடிப்பது போன்று கட்டியிருந்தார்கள்.
கொதித்தெழுந்த தோழர்களை
அமைதிப்படுத்திய தந்தை பெரியார்!
அதைப் பார்த்த நம்முடைய தோழர்கள், இயக்கத் தோழர்கள், சுயமரியாதை வீரர்கள் எல்லாம் எதற்கும் துணிந்தவர்கள், உயிருக்குப் பயப்பட மாட்டார்கள். அவர்கள் எல்லாம் ஆவேசப்பட்டு, உடனே அந்த செருப்புத் தோரணங்களை பிய்த்து எறிவதற்காக வேகமாக விரைந்தனர்.
‘‘என்ன தைரியம் இருந்தால், எங்கள் தலை வர்களை ஊர்வலமாக அழைத்துவரும்போது, அவர்களை அவமானப்படுத்துவதற்காக, செருப்புத் தோரணங்களைக் கட்டியிருப்பீர்கள்? இதுவரை மாவிலைத் தோரணம் கட்டுவார்கள்; தென்னங் குறுத்தோலையில் தோரணம் கட்டுவார்கள். ஆனால், இப்படிச் செருப்புத் தோரணங்களைக் கட்டி வைத்திருக்கிறீர்களே’’ என்று ஆத்திரப்பட்டு, அந்தத் தோரணங்களை அறுப்பதற்காகச் செல்கிறார்கள்.
அந்தத் தோழர்களை அய்யா அழைக்கிறார்; அண்ணா பக்கத்தில் அமர்ந்து, அமைதியாகப் பார்க்கி றார். அண்ணா அவர்களே, இந்த நிகழ்வை எழுதி இருக்கிறார், பேசியிருக்கிறார் பல இடங்களில்.
அந்தத் தோழர்களை அமைதியாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு, ‘‘இங்கே வாங்க, யாரும் போய் அந்தத் தோரணங்களைப் பிய்த்து எறியக் கூடாது. சிறப்பாக அது இருக்கட்டும், அங்கேயே இருக்கட்டும். மேலே இடித்தாலும் பரவாயில்லை. நான் கூட்டத்தில் உரையாற்றும்போது, அதுபற்றிப் பேசிக் கொள்கிறேன். இந்தத் தோரணங்களைக் கட்டியது காங்கிரஸ்காரர்கள் தான்; ஸநாதனம், வர்ண தர்மத்தை, ஜாதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தானே கட்டியிருக்கிறார்கள்; சுயமரியாதைக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே கட்டியி ருக்கிறார்கள். பரவாயில்லை, இருக்கட்டும்; நான் பேசும்போது சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் யாரும் அந்தத் தோரணங்களைப் பிய்த்து எறியவேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.
சிறப்பு வரவேற்பு கொடுக்க பழைய செருப்புகளைத்
தேடித் தேடி எடுத்திருக்கிறார்கள்!
பொதுக்கூட்டம் தொடங்கியதும், அய்யா அவர்கள் உரையாற்றத் தொடங்கினார். ‘‘நான், என்னுடைய வாழ்க்கையில் பல வரவேற்புகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த சிவகங்கை வரவேற்பு மாதிரி சிறப்பான வரவேற்பு வேறு எங்கேயும் நடந்தது கிடையாது. இந்த மாதிரி ஒரு வரவேற்பு மிக அற்புதமான வரவேற்பாகும். காரணம், மற்ற இடங்களிலெல்லாம் தென்னை மரத்தின் ஓலையை வைத்துத் தோரணம் கட்டுவார்கள். பனங்குருத்துத் தோரணங்களைக் கட்டுவார்கள். அல்லது வேறு எதையாவது வைத்துக் கட்டுவார்கள். ஆனால், அவையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும். போய் விலைக்கு வாங்கிக் கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால், காங்கிரஸ் நண்பர்களுக்கு, தேசிய நண்பர்களுக்கு என் மேலே எவ்வளவு அக்கறை இருந்தால், எனக்கு ஒரு தனித்த சிறப்போடு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, பழைய செருப்புகளை எல்லாம் போய்த் தேடி –இவ்வளவு பழைய செருப்புகளைத் தேடித் தேடி எடுத்திருக்கிறார்கள் என்றால், எவ்வளவு அக்கறை இதற்கென எடுத்திருக்க வேண்டும். இந்தச் செருப்பு, சாதாரண செருப்பா? 14 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட செருப்பு – இது சாதாரண விஷயம் அல்ல’’ என்று பேசத் தொடங்கினார். நீங்கள் யாரும் அதை அறுத்து எரியவேண்டாம்; அது அப்படியே இருக்கட்டும் என்றார். தந்தை பெரியார் அவர்கள் கூற, இந்த நிகழ்வை நான் பலமுறை காதில் கேட்டுள்ளேன்.
அதே தந்தை பெரியாருக்கு, நான் சிறுவனாக இருந்து, நேரில் பார்த்த நிகழ்வைச் சொல்லுகிறேன்.
(தொடரும்)
