சேலம், அக்.5- சேலம் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் பாஷா (வயது 50), கட்டட தொழிலாளியான இவர் த.வெ.க.வில் உறுப்பினராகவும் இருந்தார்.
இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று (4.10.2026) காலை அன்வர் பாஷா தனது வீட்டில் இருந்து வெள்ளாளப்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு நின்ற ஒருவர் அன்வர் பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த இறைச்சிவெட்டும் கத்தியை எடுத்து அன்வர் பாஷாவின் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிகழ்வில் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் துடித்து துடித்து அன்வர் பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அங்கு திரண்டனர்.
பின் சாலையில் அவரது உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான காவல் துறையினர் உடனடியாக நிகழ்வு இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அன்வர் பாஷாவை கொலை செய்த நபரை பிடித்து கைது செய்யும் வரை அவரது உடலை எடுக்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மதுபானக்கடை மற்றும் பாரை மூட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மதுக்கடை உடனடியாக மூடப்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அன்வர் பாஷா எதற்காக கொலை செய்யப் பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த எமலை என்பவர் முன்விரோத தகராறில் அவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதனிடையே எமலை நேற்று மதியம் கருப்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
