பாசத்தின் முகமூடி: அத்துமீறலின் மறைக்கப்பட்ட முகம்!

9 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ந.தேன்மொழி, குடியேற்றம்

ஒரு குழந்தை பிறக்கும்போது, அது இந்த உலகத்தைச் சந்தேகத்தோடு பார்ப்பதில்லை. அதன் கண்களில் பயமிருக்காது; தன்னைத் தாங்கிக்கொள்ளும் கைகளில் நம்பிக்கையைப் பார்க்கிறது, பாதுகாப்பைத் தேடுகிறது. தன்னை அணைக்கும் மார்பில் அது பாசத்தை உணர்கிறது. தனக்குப் பரிச்சயமான முகங்களில் இருக்கும் ஆபத்தை குழந்தை அறியாது; இந்த அறியாமைதான் குழந்தையின் அழகு. ஆனால், சில மனிதர்கள் அதே அறியாமையை ஆயுதமாக்குகிறார்கள். குழந்தைக்கு நம்பிக்கை இருக்கும் இடத்தில் அவர்கள் நுழைகிறார்கள். குழந்தைக்கு உணரத் தெரியாத வயதிலும், எதிர்க்கத் தெரியாத வயதிலும் அத்துமீறலைச் செய்கிறார்கள். குழந்தை தனக்கு என்ன நடந்தது என்று சொல்ல முடியாத வயதிலேயே தங்கள் வக்கிரத்தை நிகழ்த்துகிறார்கள்.

ஆறு மாதக் குழந்தை தன் உடலுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாது; ஒரு வயதுக் குழந்தை தன் வலியை மொழியாக்கம் செய்ய முடியாது; இரண்டு வயதுக் குழந்தை தனக்கு நடந்ததைச் சரியான வார்த்தைகளில் சொல்ல முடியாது. இந்தக் குழந்தைகளிடம்கூட ஒரு மனிதன் (அவன் மனிதனா?) பாலியல் நோக்கத்தோடு அணுகுகிறான் என்றால், அதை எந்த வார்த்தைகொண்டு சொல்வது? உலகில் பயன்படுத்தக்கூடிய அத்தனை மோசமான சொற்களும் வாயில் வந்துபோகும். இதைத் தவறு என்று சாதாரண சொல்லோடு கடந்துவிட முடியாது; அது வக்கிரம், மோசமான வக்கிரம். அது அதிகாரத்தின் அருவருப்பான வெளிப்பாடு. ஏதுமறியாக் குழந்தையின் நம்பிக்கை, பாதுகாப்பு உணர்வைக் கொலை செய்யும் கொடூரம்.

இங்கே குழந்தைக்கு எந்தப் பாலியல் பொறுப்பும் இல்லை. குழந்தையின் உடையில் எந்தக் குற்றமும் இல்லை. குழந்தையின் சிரிப்பில் எந்த அழைப்பும் இல்லை. குழந்தையின் அமைதியில் எந்தச் சம்மதமும் இல்லை. குழந்தையின் எதிர்ப்பின்மையில் எந்த அனுமதியும் இல்லை. குழந்தை, குழந்தைதான். அந்தக் குழந்தையின் உடலைப் பற்றிய எந்த முடிவையும் எடுக்க வேண்டிய உரிமை யாருக்கும் இல்லை.

குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் மனிதர்கள் பெரும்பாலும் அந்நியர்களே இல்லை. பல நேரங்களில் அவர்கள் வீட்டுக்குள் இருப்பவர்களாக இருப்பார்கள்; சில நேரங்களில் உறவினர்கள்; சில நேரங்களில் குடும்ப நண்பர்கள். சில நேரங்களில் குழந்தை ஆசையோடும், நம்பிக்கையோடும் ஓடிச்சென்று கட்டிப்பிடிக்கும் பெரியவர்கள்.

“அவருக்குக் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்; அவர் குழந்தையை ரொம்பப் பாசமாகப் பார்த்துக் கொள்வார்; அவர் நம்ம வீட்டில் ஒருத்தர் மாதிரி; அவர் சந்தேகப்படக் கூடியவர் இல்லை.”

இதுபோன்ற வாக்கியங்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்தைத்தான் நாம் தோலுரிக்க வேண்டும். ஏனெனில், சில சமயம் எல்லா வகையான கொடூரங்களும் அன்பான முகத்திலும்கூட ஒளிந்து கொண்டிருக்கும்; உறவின் முகத்திலும், நட்பின் முகத்திலும் ஒளிந்துகொண்டிருக்கும்.

எனவே, குழந்தைகள் மீதான பாலியல் அத்து மீறலைப் பற்றிப் பேசும்போது, “அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இரு” என்ற பழைய அறிவுரையால் மட்டும் நாம் தப்பிக்க முடியாது. குழந்தையைப் பாதுகாக்க வேண்டியவர்கள் யார்? அவனை அல்லது அவளைத் தூக்கிக் கொஞ்சும் ஒவ்வொரு கரமும் பாதுகாப்பானதா? குழந்தையுடன் தனியாக இருக்க விரும்பும் பெரியவரின் நோக்கம் என்ன? பாசம் என்ற பெயரில் குழந்தையின் எல்லைகளை அவன் எப்போது மீறுகிறான்?

குழந்தை ஏதோ சொல்ல முயன்றாலும் அதை நாம் வெறும் குழந்தைத்தனம் என்று கடந்துசெல்லப் பழகி இருக்கிறோம். இது குழந்தைகளை வைத்திருக்கும் யாரையும் பயமுறுத்த அல்ல; மாறாக, எச்சரிக்க மட்டுமே. ஏனெனில், பாலியல் அத்துமீறலின் வலி குழந்தையின் உடலோடு மட்டும் தங்கிவிடுவதில்லை. அவை குழந்தையின் நம்பிக்கையில் விழுகின்றன; அதன் உடல் உணர்வில் விழுகின்றன; உறவுகளைப் பற்றிய அதன் புரிதலில் விழுகின்றன. ‘பாதுகாப்பு’ என்ற சொல்லே அதற்கு வேறு ஒரு பொருளைத் தருகிறது. வெளிப்படுத்த முடியாத உணர்வுகளைக் கொண்டவர்கள் குழந்தைகள். அதனால் அந்தக் குற்றத்தின் கொடூரம் உடல் மீறலைத் தாண்டுகிறது.

இங்கு பெண் குழந்தைகளின் வலியை மட்டும் பேசிவிட்டு நின்றுவிட முடியாது; ஆண் குழந்தைகளின் மவுனத்தையும் பேச வேண்டும். “ஆண் குழந்தைக்கு இப்படியெல்லாம் நடக்காது, அவன் ஆண்பிள்ளை, தன்னைப் பார்த்துக்கொள்வான்” என்பது குருட்டு நம்பிக்கை. ஆண் குழந்தைகளின் வலியை மறுக்கும் சமூக மனநிலையையும் சாட வேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம்.

பாலியல் அத்துமீறல் ஒரு குழந்தையின் பாலினத்தைப் பார்த்து வலி கொடுப்பதில்லை. ஆண் குழந்தையும் குழந்தைதான்; பெண் குழந்தையும் குழந்தைதான். அவர்களின் உடல் அவர்களுடையது; அதன் எல்லையை மீறும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படி எல்லை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. குழந்தையைத் தொடக்கூடாத இடத்தில் தொடும் கைகளுக்குச் சொந்தக்காரர் குற்றவாளியே. பாசமெனும் முகமூடி அணிந்து அத்துமீறுவது குற்றமே.

அப்போதும் நம் சமூகம் பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டும் கேவலமான சமூகம். ஆனால், குழந்தைகளை நாம் எந்த விதத்திலும் குற்றம் சாட்ட முடியாது. பேசத் தெரியாத குழந்தைகளைக்கூட எதிர்க்க முடியாத இடத்தில் வைத்தது யார் என்ற கேள்வி சமூகத்திடம் கேட்க வேண்டி இருக்கிறது. குழந்தைகள் எதையும் சொல்லக்கூடிய பாதுகாப்பான உறவை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்ற கேள்வி சமூகத்திடம் கேட்க வேண்டி இருக்கிறது. இந்தக் கட்டுரையின் மய்யமே குழந்தை. குற்றவாளியின் எந்தப் பக்கத்திலும் நியாயம் என்பதோ பரிதாபம் என்பதோ கிடையாது. குழந்தைக்குக் காமம் தெரியாது, ஆனால் குற்றவாளிக்குக் காமம் தெரியும்; ஆகையால் அவன் குழந்தையின் உடலைப் பாலியல் நோக்கில் அணுகுவது கொடூரத்திலும் கொடூரமான செயலாகும்.

பாலியல் அத்துமீறலுக்குக் குழந்தையின் வயது ஒரு தடையாக இருப்பதில்லை என்பதே நம்மை உலுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி. ஆறு மாதக் குழந்தையிடம் அத்துமீறுகிறான் என்றால், அதற்குக் காரணம் அவனுடைய அதிகாரமும் வக்கிரமுமே. இது மனிதத் தன்மையின் அடித்தளத்தையே நொறுக்கும் செயல். குழந்தை எதிர்க்க முடியாததும், பேச முடியாததும் எந்த வகையிலும் அவனுடைய வேட்டைத்தனத்திற்குப் பலிகடா ஆகக்கூடாது. பாசம் என்ற பெயரில் கொஞ்சுகிறேன், அன்பாகத் தூக்குகிறேன், குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் செய்யும் வக்கிரங்கள் தண்டனைக்குரியவை. அவன் பாசத்தின் பொருளையே அவமானப்படுத்துகிறான். பாசத்தின் கவசத்துக்குள் இருக்கும் வக்கிரம் கொடுமையானதே.

‘பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஆபத்து அந்நியர்களால் மட்டுமே’ என்பது நம் உளவியல் நம்பிக்கை; அது உண்மையான நம்பிக்கை அல்ல. குழந்தையின் எல்லையை விட எந்த உறவும் முக்கியமல்ல என்பதையும் நாம் உணர வேண்டும்.

குழந்தையின் உடலைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஆணின் பார்வை என்பது குழந்தை பிறந்த நாளில் இருந்தே கட்டமைக்கப்படுவது. பெண் குழந்தை என்ற ஒரு அடையாளமே அவளது உடலைப் பார்க்கப்படும் பொருளாக மாற்றிவிடும் ஆணாதிக்க மனநிலை ஆபத்தானது. அது பாலியல் அத்துமீறலுக்கான ஆபத்தான பண்பாட்டுச் சூழலை உருவாக்குகிறது. ஆனால், ஆண் குழந்தை என்பதற்காகக் குழந்தையின் உடலை ஆசைக்கான இடமாகக் காணும் மனநிலையை எந்த உறவின் பெயராலும், எந்தப் பாசத்தின் பெயராலும், எந்தக் குடும்பக் கவுரவத்தின் பெயராலும் நியாயப்படுத்த முடியாது. எனவே, ஆண் குழந்தைக்கும் பாதுகாப்பாக வாழ வேண்டிய உலகம் வேண்டும்.

“ஆண் குழந்தைக்கு இதெல்லாம் நடக்காது” என்று சொல்வது ஆபத்தான பார்வை. பாலியல் அத்துமீறல்

என்றாலே பெண் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் என்ற சமூகப் பார்வை, ஆண் குழந்தைகளின் வலியை மறைக்கும் மிகப்பெரிய மவுனம். எந்த வகைப் பாலினக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறலுக்குக் குழந்தைகள் பொறுப்பல்ல. ஆண் குழந்தைகளின் வலியை மறைப்பது என்பது அவன் ஆண் என்பதாலே என்பது தவறு. இது அவனைப் பாதுகாக்காது; அவனுடைய வலியை மீண்டும் மீண்டும் மவுனப்படுத்துவதன் ஆரம்பம் என்பதைச் சமூகம் உணர வேண்டும்.

எதிர்க்க முடியாத மவுனத்தைத் தன்னுடைய பலவீனமாக்கிக் கொள்வது என்பது குற்றவாளியின் கொடூரம். மிகக் கொடூரமான விஷயம் என்னவென்றால், குழந்தையால் சொல்ல முடியாது என்ற சாதகத்தைத்தான் குற்றவாளி தனக்கான ஆயுதமாகக் கையிலெடுக்கிறான். குழந்தை சொல்ல முடியாததை நாம் பார்க்கவும், கேட்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் அழுகையை, அதன் அச்சத்தை, அதன் பயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; குரலற்ற குழந்தையின் பாதுகாப்புக் குரலாக நாம் மாறவேண்டும்.

குழந்தையின் ஒவ்வொரு அழுகையும் அங்கே தவறு நடந்ததால் இல்லை. அதேசமயம் அழுகையை அலட்சியப்படுத்துவதும் பாதுகாப்பானது அல்ல. “எனக்கு ஏதோ சரியில்லை, என் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்று அந்தக் குழந்தை சொல்வதாகக்கூட இருக்கலாம்.

ஒரு குழந்தையைப் பிறர் தொடுவது எல்லாமே தவறு என்று நாம் சொல்லவில்லை; தொடுதல் என்பது பராமரிப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. அது பராமரிப்பின் எல்லையைத் தாண்டும்பொழுதே தவறாகிறது. குழந்தையின் எல்லையை மதிப்பதைப் பெரியவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் – ஏனெனில் குழந்தையை நேசிப்பவன் அதன் எல்லையை மதிப்பான். உண்மையான பாசம் எல்லையைத் தாண்டாது.

குழந்தையின் உடலில் எங்கெங்கு அத்துமீறப்படுகிறது என்பதையும் உணர வேண்டும்:

பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்கப் பகுதிகளைத் தேவையின்றித் தொடுதல் பாலியல் அத்துமீறலே.

குழந்தையின் பிட்டப்பகுதியைப் பாதுகாப்பு அல்லது பராமரிப்புக்கு அப்பாற்பட்டுத் தொடுதல் பாலியல் அத்துமீறலே.

குழந்தையின் மார்புப் பகுதியைத் தொடுதல் பாலியல் அத்துமீறலே.

தொடைகள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களைக் காரணமின்றித் தொடுதல் பாலியல் அத்துமீறலே.

வாய், உதடு, பிறப்புறுப்பு போன்ற பகுதிகளில் எல்லைமீறிய முத்தம் தருவது பாலியல் அத்துமீறலே.

மடியில் உட்காரவைத்துக் கொஞ்சுகிறேன் என்ற பெயரில் குழந்தையின் உடலைத் தடவுவது, உடல் எல்லைகளை மீறுவது பாலியல் அத்துமீறலே.

ஆடை மாற்றும் நேரம், குளிப்பாட்டும் நேரங்களில் தேவைக்கும் அதிகமாகத் தொடுதல் என்பதும் பாலியல் அத்துமீறலே.

கொஞ்சுகிறேன் என்ற பெயரில் உடலின் அவசியமற்ற பகுதிகளைத் தொடுவது பாலியல் அத்துமீறலே.

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலைப் பற்றிப் பேசும்போது நாம் பெரும்பாலும் ‘இப்படி நடந்துவிட்டதே’, ‘இப்படி நடந்துகொண்டானே’ என்று பேசுகிறோம். ஆனால், முடிவுகளின் பின்னால் மிகப் பெரிய கேள்வி ஒன்று இருக்கிறது; ஒரு குழந்தையின் உடலுக்கு உரிமையாளர் யார் என்ற கேள்வி. அந்த உரிமையாளர் வேறு யாரும் இல்லை, அந்தக் குழந்தைதான். அந்தக் குழந்தையைப் பெற்றவர்களுக்குக் கூட உரிமை இல்லை; அந்தக் குழந்தையின் உடலைத் தன் விருப்பப்படி நடத்தும் உரிமை இல்லை; உறவினருக்கில்லை, நண்பருக்கில்லை.

ஒருவரின் தொடுதல் சிறுவர்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘வேண்டாம்’ என்று சொல்லும் உரிமை குழந்தைக்கு இருக்க வேண்டும். “என்னைத் தொடுவது எனக்குப் பிடிக்கவில்லை” என்று சொல்லும் உரிமை பிள்ளைகளுக்கு வேண்டும். அப்படி குழந்தைகள் சொல்ல வரும்போது குழந்தையைத் தண்டிக்காமல், “தன் எல்லையை அறியும் குழந்தை” என்று குழந்தைகளைப் பாராட்ட வேண்டும்.

குழந்தைகளிடம் இவ்வாறு சொல்வது சரியா? இதென்ன பாலியல் கல்வியா? என்று நினைப்பவர் களுக்குச் சொல்வது ஒன்றுதான்: தவறு. குழந்தைகள் முன்னேற கல்வி எவ்வளவு முக்கியமோ, அவர்கள் நல்ல மனநலனுடன், எச்சரிக்கையோடும் வாழப் பாலியல் கல்வி அவசியமே. அதுதான் ‘தன் உடல் தனக்குரியது’ என்பதை அந்தக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும். சொல்லாமல் விட்டு ஆபத்துகளைச் சந்தித்துப் பின் வருந்துவதைவிட, சொல்லி வளர்ப்பது சிறந்தது.

குழந்தைகளின் வயதுக்கேற்ற வகையில் உடல் உறுப்புகளின் சரியான பெயர்களைச் சொல்லித் தருவதும் மிக மிக அவசியமானது. எந்தத் தொடுதல் தவறானது என்பதைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்க வேண்டும். “உனக்கு ஏதாவது தவறாகத் தோன்றினால் தயங்காமல் என்னிடம் சொல்” என்ற புரிதலை, நம்பிக்கையைப் பெற்றோர் தரவேண்டும். ‘உண்மையைச் சொல்ல உனக்கு முழு உரிமை இருக்கிறது’ என்பதைக் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். மீறி ஏதாவது நடந்தாலும், “இதில் உன் குற்றம் ஏதுமில்லை, இனி நாங்கள் இருக்கிறோம் பயப்படாதே” என்கிற பாதுகாப்பும் தரவேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் குழந்தை தன் உடலை மதிக்கக் கற்றுகொள்கிறது; தன் எல்லைகளைத் தெரிந்து கொள்கிறது. மற்றவரின் எல்லையையும் மதிக்கக் கற்றுக் கொள்கிறது என்பதுதான் கூடுதலான செய்தி; இதுதான் நாம் உருவாக்க வேண்டிய சமூகமாகும்.

ஒரு குழந்தை பயமின்றிப் பெரியவர் கையைப் பிடிக்க வேண்டும். அந்தக் கை குழந்தையை வழிநடத்த வேண்டுமே தவிர, வேட்டையாடக் கூடாது; காப்பாற்ற வேண்டுமே தவிர, காமத்தைக் கக்கக் கூடாது. குழந்தையின் நம்பிக்கையைக் குலைப்பது ஒரு பெரியவனின் உரிமை இல்லை, சிறுமை.

தனியாகக் குழந்தையைக் கவனிக்கும் பெண், வேலை நிமித்தமாகக் குழந்தையைப் பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் விடுகிறாள். ஒரு நாள் வழக்கமாகச் செல்லும் நேரத்திற்கு முன்பாகவே குழந்தையைத் தூக்கிவர தாய் செல்கிறாள். அப்போது அவள் கண்ட காட்சி, அவள் அடைந்த துடிப்பு, வேதனைதான் இந்தக் கட்டுரை எழுதக் காரணம். அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பிறப்புறுப்பில் அருவருக்கத்தக்க வகையில் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறான். இது ஒரு உதாரணம். இந்தக் கொடுமைகள் நடக்காமல் பார்க்க வேண்டும்; வக்கிரப் புத்தியில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டும்.

குழந்தையின் கண்ணீரைத் துடைப்பதற்கான கரங்களாக நம் கரங்கள் இல்லாமல், கண்ணீர் வராத உலகத்தை உருவாக்கும் கரங்களாக மாற வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். வக்கிரங்களின் பிடியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *