
திருவள்ளூர், அக். 2- தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை போன்ற தந்தை பெரியாரின் உன்னதமான கொள்கைகளை நினைவூட்டும் விதமாக, ’பெரியார் நடை’ நடைபெற வேண்டும் என்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப் புக்கிணங்க, உலகமெங்கும் இந்த ஆண்டு தமிழர்கள் இருக்கும் பகுதிகளில், ’பெரியார் நடை’ கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆவடி, கும் மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய மூன்று கழக மாவட்டங்கள் இணைந்து பெரியார் நடையை சிறப்பாக நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் சார்பில் 27.09.2026 அன்று காலை 7:15 மணிக்கு திருவள்ளூர் காக் களூர் ஏரிக்கரையில் தொடங்கி, திருவள்ளூர் காமராஜர் சிலை வரையிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம், ஜே.என்.சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் 8 வயது பெரியார் பிஞ்சு முதல், 82 வயது பெரியார் பெருந்தொண்டர் வரையிலுமாக இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்விடத்துக்கு வருகை தருவதற்கு புட்லூர் ரயில் நிலையம் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலிருந்து வருவதற்கு தோழர்களுக்கு முன்கூட்டியே வழிகாட்டப்பட்டிருந்தது. அதிகாலை 6 மணி முதலாகவே தோழர்கள் நிகழ்விடத்தில் கூடத் தொடங்கிவிட்டனர். திருவள்ளூர் மாவட்டத் தலைவர் மணி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், செயலாளர் பாஸ்கர் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தினர். காலை 7 மணியிலிருந்து தோழர்களை அணிவகுத்து நிற்கும்படி செய்து, சரியாக 7:15 மணிக்கு பெரியார் நடை தொடங்கப்பட்டது. முன்னதாக, இந்நிகழ்வுக்கு தலைமை ஏற்றிருந்த திருவள்ளூர் மாவட்டக் கழகத் தலைவர் மணி, பெரியார் நடையின் அவசியத்தை முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் மற்றும் கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகத் தலைவர் புழல் ஆனந்தன் ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர்.
அதைத் தொடர்ந்து, கருஞ்சட்டை வீரர்கள் கட்டுப் பாடாக அணிவகுத்துச் சென்றனர். அணிவகுப்பில், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அண்ணல் அம்பேத் கர், கல்விவள்ளல் காமராசர் ஆகியோரின் பணி விளக்கும் வாழ்த்து ஒலிகளோடு, “ஒழிப்போம் ஒழிப்போம் மூடநம்பிகைகளை ஒழிப்போம்!”, “வெல்லட்டும் வெல்லட்டும் சமூகநீதி வெல்லட்டும்!”, “வளர்ப்போம் வளர்ப்போம் பகுத்தறிவை வளர்ப்போம்!”, “மலரட்டும் மலரட்டும் அறிவியல் சிந்தனை மலரட்டும்!”, “மடியட்டும் மடியட்டும் பழைமை வாதம் மடியட்டும்!”, “ஜாதியை ஒழிக்க ஜாதியை ஒழிக்க – ஜாதி ஒழிப்புத் திருமணங்களை ஆதரிப்போம்!”, “கொண்டு வா, கொண்டு வா – ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தடுப்பதற்கு சட்டம் கொண்டு வா!” உள்ளிட்ட கொள்கை முழக்கங்களும் முழங்கப்பட்டன.
நிறைவாக, காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் காமராஜர் சிலை சதுக்கத்தில், பெரியார் நடை நிறைவு பெற்றது. மூன்று மாவட்டத் தலைவர்களின் முன்னிலையில், காமராஜர் சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டு, கல்வி வள்ளல் காமராஜர் பற்றிய வாழ்த்தொலிகள் முழங்கப்பட்டன. இந்நிகழ்வு, தொடங்கும் போது, ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளுக்கு வரும் வெகுசில மக்கள் பார் வையிலும், நிறைவடையும் போது, மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிக மக்கள் பார்வையிடும்படியும் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறையினர் நல்லவண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தோழர்களும் கட்டுப்பாடு காத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அவரவர்களின் மாவட்டத் தலைவர், செயலாளர்களின் வழிகாட்டுதலில் அமைதியாக விடைபெற்றுச் சென்றனர்.
