குரோம்பேட்டை, அக். 02- கைலாஷ் யாத்திரைக்காக குரோம் பேட்டையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேர் குறித்து இதுவரை தெளி வான தகவல் கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர்களது குடும்பங் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள சம்பந்தப்பட்ட டிரா வல்ஸ் நிறுவனத்தில் நேற்று பத்திரிகையா ளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
கைலாஷ் யாத்திரைக்காக ஆக.14-ஆம் தேதி நேபாளம் சென்ற எங்கள் உறவினர்களில் சிலருடன் ஆக.26-ஆம் தேதி வரை மட்டுமே தொடர்பு இருந்தது. அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. சீனா-நேபாள எல்லையில் உள்ள குடியுரிமை சோதனை மய்யம் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவர்கள் சிக்கியதாக தகவல் கிடைத்தது.
35 முதல் 40 நாட்களுக்கும் மேலாகியும் தகவல் கிடைக்காததால் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் தகவல்களை ஒருங்கிணைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டாலும், 49 குடும்பங்களுக்கும் தற்போதைய நிலை மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
காணாமல் போனவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தபோதும், அவர்களது கைப்பேசி எண்ணுடன் வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால் பணத்தை எடுக்க முடியவில்லை. சில குடும்பங்களில் குடும்பத் தலைவராக ஆண்கள் மட்டுமே வருமானம் ஈட்டி வந்த நிலையில், தற்போது குழந்தை களின் கல்விக் கட்டணம், வீட்டுச் செலவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 49 பேரின் நிலை குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவலை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களை கண்டறியும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதுடன், குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அவசர உதவி வழங்க வேண்டும். வங்கியில் உள்ள பணத்தை சட்டப்படி குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கான நடைமுறைகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
