தமிழ்நாட்டின் இறப்பு விகிதங்களில் காட்டும் மிக முக்கியமான உண்மை ஒன்றை ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 4,01,860 ஆண்களும், 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இவ்விரு எண்ணிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு 1,10,513 ஆகும். 2023-இல் 1.10 லட்சம், 2024-இல் 1.07 லட்சம் 2025-இல் 1.11 லட்சம் என கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த வித்தியாசத்தில் ஏறக்குறைய 86%, அதாவது 94,792 இறப்புகள், தங்கள் வாழ்வின் ஆக்கப்பூர்வமான காலகட்டத்தில் (15 வயது முதல் 64 வயது வரை) இருந்தவர்களுடையதாகும்.
ஆண்களின் இறப்புவிகிதம் இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவது முக்கியமாகும். இது தொடர்பாக வெளிவந்திருக்கும் விரிவான அக் கட்டுரையில் இரண்டு பிரச்சினைகளுக்கு சமூகத்தின் மனநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றமே தீர்வாகும்.
நாளொன்றுக்கு குறைந்தது 50 பேர் தமிழ்நாட்டில் விபத்தால் மரணமடைகிறார்கள். அவர்களின் பெரும்பாலோர் ஆண்கள். தவிர, அதிக ஆண்கள் இறப்புக்குக் காரணமாக இதய நோய்கள், பக்கவாதம், நீரிழிவு, சிறுநீரகச் செயலிழப்பு, நாள்பட்ட சுவாச நோய்கள், புகையிலை, மது தொடர்பான நோய்கள் ஆகியவையே இருக்கின்றன. இதில் மது உள்ளிட்ட பழக்கங்களின் காரணமாக ஏற்படும் நோய்கள் இல்லாமல், தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாகக் கருதிக் கொள்ளும் ஆண்களுக்கும் திடீரென இறப்பு ஏற்படுவதற்குக் காரணம், முறையான, சீரான கால இடைவெளியிலான உடற்பரிசோதனைகள் இல்லாததே ஆகும். அதைச் சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், குழந்தைப் பேற்றுக்காகப் பெண்கள் அவ்வப்போது மருத்துவர்களைச் சந்திப்பதும், உடற்பரிசோதனை மேற்கொள்வதும் கட்டாயமாகிவிடுகிறது. ஆனால், ஆண்கள் இது குறித்துக் கவலையற்று இருப்பதால், தொடக்க நிலையிலேயே நோய்களை அடையாளம் காண முடியாமல் போகிறது என்கின்றனர்.
மாதாமாதம் பண்டிகைகள், திருவிழாக்கள், ஆண்டுக்குப் பல முறை மாலை அணிந்து பழனி, சமயபுரம், சபரிமலை என்று தவறாமல் செலவு செய்யும் இந்தக் குடும்பங்கள் தான், மருத்துவத்திற்காகவும், உடற் பரிசோதனைக்காகவும் செலவு செய்வதா என்று தயங்குகின்றனர். பகுத்தறிவு, அறிவியல் அமைப்புகள் தொடர்ந்து உடற்பரிசோதனைகளை வலியுறுத்தி வருகின்றன. ‘எனக்கெல்லாம் எதுவும் ஆகாது’ என்னும் மூடநம்பிக்கையையும், ‘உடற்பரிசோதனைக்குச் சென்றால், எதையாவது இழுத்துவிட்டுவிடுவார்கள்’ என்ற மருத்துவத் துறையின் மீதான அவநம்பிக்கையும் மூட்டைகட்டிவிட்டு, உடற்பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்.
மற்றொரு கவனிக்க வேண்டிய அம்சம். இந்த இறப்புகளில் மிகப் பெரும்பாலானவை மருத்துவ ஆய்வுக்கு உட்படவில்லை. ஒட்டுமொத்த இறப்புகளில் சுமார் 40% இறப்புகளுக்கு என்ன காரணம் என்பது மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் பதிவாகிறது. எஞ்சிய 60% இறப்புகளின் காரணம் என்ன என்று அறிய முடியவில்லை. அதிலும் குறிப்பாக இளவயது மரணங்களுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்தால் தான், அவற்றுக்கான தீர்வுகளை நோக்கி நகர முடியும்.
விபத்துகள், தற்கொலைகள், சந்தேக மரணங்கள் போன்றவற்றின் போது கூட, எப்படியாவது உடற்கூராய்வு செய்யாமல் உடலை வாங்க வேண்டும் என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்க்க முடியும். ‘உடலைக் கூறுபோடுவதா!’ என்ற பாசம் காரணம் என்று சொல்லப்பட்டாலும். அதில் மதம் தொடர்பான காரணங்களே முன்னிற்கின்றன.
உடலை எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் முழுதாக, மறு உலகுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற மத நம்பிக்கையே பலரும் உடற்கூராய்வுக்குத் தயங்கக் காரணமாகும். இது இந்து மதத்தில் மட்டுமில்லை; இசுலாமிய சமூகங்களிலும், உலக அளவில் யூத மதத்திலும் இந்நிலை நிலவுகிறது. இறுதிச் சடங்குகளும், உடலை எரிப்பதும் முடிந்தவரை விரைவாக நடைபெற வேண்டும் என்றும், உடற்கூராய்வுகள் இதனைத் தாமதப்படுத்துவதோடு, ‘ஆன்மா’வின் அமைதியான பயணத்தைக் குலைப்பதாகவும் கருதுகிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அறிவியல் ரீதியாக ஓர் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய அவசியமான ஒன்றை மதக் காரணங்கள் தடுக்கின்றன.
சிலர் தேவையின்றி உடற்கூராய்வுகள் நடத்தப்படுவதாக மருத்துவத் துறையை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், காவல்துறையின் நடைமுறைக்கு தேவை அல்லாத, பிற இறப்புகளில் – எல்லா இறப்புகளுக்கும் உடற்கூராய்வு செய்யப்பட வேண்டியதில்லை. அதற்குப் போதுமான வசதிகளும் நம்மிடம் இல்லை. அதை மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை. அதற்குப் பதிலாக, ஒருவரின் இறப்புக்கான காரணங்களை, அவரது மருத்துவக் குறிப்புகள், அறிக்கைகள், உற்றார் உறவினர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் வாயிலாக உறுதி செய்தாவது இறுதி மருத்துவ அறிக்கையை தயாரிப்பது பிற்கால ஆய்வுகளுக்கும், நிகழும் நோய் சார்ந்த திடீர் மரணங்களை இனி வரும் காலங்களில் தடுப்பதற்கும் உதவும்.
